நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், நேற்றிரவு கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மெழுகுவர்த்தி மற்றும் மின்சூழ் என்பனவற்றை ஏந்தியவாறு நேற்றிரவு இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் செம்மணி சந்தியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
அதேநேரம், மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரியகல்லாறுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி நாடுமுழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டமை குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், பொதுமக்கள் கருத்தறிதல் நேற்று நடத்தப்பட்டது.
காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நேற்றைய விசாரணையின்போது, மின்சார சபையின் 15 சாட்சிகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடுமுழுதும் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதற்கான காரணங்களை வினவும் இந்த நடைமுறையானது இலங்கையில் முதன்முறையாக நடைபெற்றதுடன், அடுத்த விசாரிப்பு எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஹிரு செய்திகள் –hirunews.lk- (2022-03-04 08:23:13)