ஓவ்வொரு நாளும் கண்விழித்தெழும் போது. எந்தெந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, எனக் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் நமது நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
விலை அதிகரிப்பைப் பொறுத்தவரை, பொறிமுறையொன்று இருந்தது. விலை அதிகரிப்பு தொடர்பிலான கோரிக்கை, நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்க வேண்டும், அதனை வாழ்க்கைச் செலவுக்குழு ஆராயவேண்டும். தேவையேற்படின் அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும், இன்றேல் யோசனை தூக்கிவீசப்பட்டுவிடும்.
இத்த நடைமுறையை தற்போதையை நிலைமையில் காணக்கிடைப்பது அரிது. நிறுவனங்கள் பல தான்தோன்றித்தனமாக, நினைத்தபடி, இரவோடு இரவாக, பொருட்களின் விலைகளை அதிகரித்துக்கொள்கின்றன. அதனை எதிர்த்து குரல்கொடுப்பதற்கு திராணியற்றவர்களாக பலரும் இருப்பதுதான் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது.
எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடுகள் நாட்டில் நிலவுகின்றன. பெரும்பாலான வீதிகளில் வாகன நெரிசலை காணக்கிடைப்பதில்லை. எனினும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை நிற்கிறது. வாகனங்களில் பெரல்களுடன் வருவோர், தாங்கள் நினைத்த அளவுக்கு எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். காலையில் இருந்து கால்கடுக்க காத்திருந்தோரில் பலருக்கும் எரிபொருட்கள் கிடைக்காமையால் வெறுங்கையுடன் திரும்பிவிடுகின்றனர்.
தட்டுப்பாடு நிலவுக்கின்ற நிலையில், ஐ.ஒ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை, வெள்ளிக்கிழமை (25) அதிரடியாக அதிகரித்தது எப்படி? இதுதான் தான்தோன்றித்தனமான செயற்பாடாகும். அதுமட்டுமன்றி, அரசாங்க நிர்வாகத்தில் ஒரு பொறிமுறை இல்லையென்பதை அச்சொட்டாக உணர்த்தி நிற்கிறது. உண்மை நிலவரம், சுற்றும் நிலவும் சூழ்நிலை, பிறருடைய அறிவுரை, பிறரின் கருத்துக்கள் எது எப்படி யிருந்தாலும், ‘தன்’மனதுக்கு எது எப்படித் ‘தோன்று’கிறதோ அதையே பிடிவாதமாகச் செய்யும் குணாதிசயத்தை குறிப்பிடும்போது ‘தான்தோன்றித்தனமாக’ என்பர்.
இவ்வாறான தான்தோன்றித்தனமான முடிவு மக்களின் மீது மற்றுமொரு சுமையை திணித்துவிட்டது. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்குமாயின், ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் கட்டாயமாக அதிகரிக்கும்.
பொதுப் போக்குவரத்து சேவைகள் சீராக இன்மையால், பலரும் ஒட்டோக்களை நம்பவேண்டி ய நிலையில் நிற்கின்றனர். அவ்வாறானவர்களின் செலவு இரட்டிப்பாகப் போகிறது. இவற்றுக்கெல்லாம் அரசாங்கம் பதில்கூற கடமைப்பட்டிருக்கின்றது.
அனுமதியைப் பெறாமல் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, உரிய தரப்பினர் முன்வரவேண்டும்.
ஐ.ஓ.சி நிறுவனத்தின் கீழிருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், எரிபொருட்களை நிரப்பாதவர்கள் கூட, எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன எனக்கூறி, கட்டணங்களை அதிகரித்துக்கொள்வர். இவையெல்லாமே சாதாரண மக்களின் மீதான சுமையை பன்மடங்கில் அதிகரிக்கும்.
நிறுவனங்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு அரசாங்கம் இடமரளிக்கக்கூடாது. தான்தோன்றித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முறையான பொறிமுறையொன்று அரசாங்கத்திடம் இருத்தல் அவசியமாகும்.