எம்.சீ.சீ. ஒப்பந்தத்தை கிழித்தெறிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமா?

எம்.சீ.சீ. ஒப்பந்தத்தை கிழித்து எறிவோம் என்று கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமா என்று எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 27/2 இன் கீழ் அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அதன்போது அவர் தெரிவிக்கையில், மிலேனியம் செலஞ்ச் கோப்ரேசன் ஒப்பந்தம் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிரதான பேசு பொருளாக இருந்ததுடன் அதில் கைச்சாத்திடுவதை தவிர்ப்போம் என்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால் தேர்தலின் பின்னர் அது தொடர்பாக ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை கடந்த ஜுன் மாதத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரையை அடிப்படையாக கொண்டு ஒப்பந்தத்தை திருத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் திருத்தத்திற்கு குறித்த நிறுவனம் இணங்காவிட்டால் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை நிராகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எமக்கு தற்போதைய அரசாங்க தரப்பினர் கடந்த காலங்களில் தலதா மளிகைக்கு செல்லும் வீதிக்கூட ஒரு பகுதி அமெரிக்காவுக்கும் , ஒரு பகுதி இலங்கைக்கும் உரித்தாகும் என்று விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அத்துடன் நாடு இரத்த ஆறாக மாறும் என்றும் கூறினர். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒப்பந்தத்தில் 70 வீதம் நல்லதே எனவும் 30 வீதமே தீமையானது என்ற கருத்துக்களை கூறினர்.

ஆனால் இது தொடர்பாக அரசாங்கத்திடம் சில பதில்களை எதிர்பார்க்கின்றேன். அதாவது மக்களுக்கு வாக்களிக்கப்பட்டதை போன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சத்திடுவதை தவிர்த்து அதனை மீளாய்வு செய்ய தாக்கம் செலுத்திய காரணம் என்ன? 400 மில்லியன் டொலருக்கு நாட்டை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் பாதிப்பான விடயங்களை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா? அப்படியாயின் அந்த பேச்சுவார்த்தையின் மூலம் கிடைக்கப்பட்ட பெறுபேறுகள் தொடர்பான விடயம் தொடர்பாக அரசாங்கம் சபைக்கு முன்வைக்குமா?

அதேபோன்று திருத்தத்துடன் அதனை கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்க்கின்றதா? எனவும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை போன்று எம்.சீ.சீ. ஒப்பந்தத்தை கிழித்தெரிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமா? என்று கேட்கின்றேன். என்றார்.

இதன்போது பதிலளித்த இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் கூறு கையில், .இவர் இந்த கேள்விகளை கேட்கும் போது எழுத்து மூலமான கேள்விகளுக்கும் அப்பால் சென்று கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால் எழுத்து மூலம் கேட்ட கேள்விகளுக்கே நான் பதிலளிக்கவுள்ளேன். இதன்படி சர்வதேச ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் போது முறைமையொன்றை பின்பற்றுவது சம்பிரதாயமாகும். இதன்படி அரசாங்கத்தினால் குறித்த ஒப்பந்தம் தொடர்பாக மீளாய்வுக்கு என்று குழுவொன்றை அமைக்க நடவடிக்கையெடுத்துள்ளது. அந்த குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கையில் இலங்கைக்கு பாதிப்பான விடயங்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

இதன்பின்னர் சஜித் பிரேமதாச மீண்டும் கேள்விகளை எழுப்பி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை போன்று அந்த ஒப்பந்தத்தை முற்றாக கிழித்து வீசுவீர்களா? என்று கேட்கின்றேன். என்று ஆளும் தரப்பினரிடம் கேள்வியெழுப்பினார். இதன்போது ஆளும் தரப்பு பிரதம கொரடாவான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் போது அதனை விவாதத்திற்கு உட்படுத்த முடியாது. எழுத்து மூலமான கேள்விகளுக்கு அப்பால் செல்ல முடியாது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவையில் இவர் ஒன்றும் பேசாதவர் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த சஜித் பிரேமதாச, நான் அப்போது அமைச்சரவையில் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளேன். எவ்வாறாயினும் அரசாங்கத்திடம் மீண்டும் மீண்டும் கேட்கின்றேன். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை போன்று அந்த ஒப்பந்தத்தை முற்றாக கிழித்து வீசுவீர்களா? என்பதற்கு பதிலை கூறுங்கள் என்றார். ஆனால் அரசாங்க தரப்பில் இருந்து அது தொடர்பாக பதில்கள் முன்வைக்கப்படவில்லை.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter