கப்பலில் தீப்பற்றிய போது நடந்தது என்ன? உயிர் பிழைந்த மாலுமி கூறிய அதிர்ச்சித் தகவல்!

வைத்தியர்கள் தாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் என கடந்த ஆறு நாட்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சங்குமண்கண்டிக் கடலில் எரிந்துகொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க பனாமாக்கப்பல் மாலுமி பிலிப்பைன்ஸ் பொறியியலாளர் எல்மோர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (04) மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணி நேரம் சத்திர சிகிச்சை, சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் அளிக்கப்பட்டு பின்னர் அதிதிவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (09) இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் கப்பல் தீ விபத்து பற்றிய அனுபவத்தைக் கேட்ட போது இவ்வாறு பதிலளித்தார்.

´எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்.3 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப் பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன்.

அங்கு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு குளித்தேன்.

குளித்துவிட்டு வெளியேறிய போது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத் தாக்குவது போன்று உணர்ந்தேன்.

கப்பலில் ஒருபகுதி எரிவதைக் கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை.
இருந்தும் இன்னும் நான் உயிர் வாழ்கிறேன்.

உண்மையில் இலங்கை மக்கள், இலங்கை கடற்படை, விமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியசர்கள், தாதிகள் ஏனையோர் என்னைப் பராமரித்த விதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். நன்றிகள் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter