வெளிநாட்டு சிம் அட்டைகளை பயன்படுத்திய சஹ்ரான் கும்பல்

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய நபர்கள், தங்களுக்கு இடையே தகவல்களை பறிமாற்றிக் கொள்ள வெளிநாட்டு சிம் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பில், தாக்குதலுக்கு முன்பே தேசிய உளவுத் துறை அலுவலகத்துக்கு  புலனாய்வு அறிக்கைகள் கிடைத்திருந்தாலும், அவை தனது கைகளுக்கு கிடைத்திருக்கவில்லை என முன்னாள் தேசிய உளவுத் துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.  

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் தேசிய உளவுத் துறை பிரதானி சிசிர மெண்டிஸ் இதனை வெளிப்படுத்தினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

 இந் நிலையில் கடந்த 7 ஆம் திகதி திங்கள் முதல், தேசிய உளவுத் துறை முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ், ஆணைக் குழுவில் சாட்சியமளித்து வருகின்றனர். 

இந் நிலையில் நேற்று நான்காவது நாளாக சாட்சியமளித்த அவரிடம் ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

தற்கொலை குண்டுதாரிகள் தமக்கிடையே தகவல்களை பரிமார நேபாளம், கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் சிம் அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக ஞாபகம் உள்ளது.’ என  பதிலளித்தார்.

இந் நிலையில், பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்களிடையே  பிரச்சினைகளை தடுக்க ஏதும் முறைகள் உள்ளதா என இதன் போது சிசிர மெண்டிஸிடம் ஆணைக் குழு கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், உளவுத் துறை தகவல் அறிக்கைகளை உறுதி செய்து அவற்றினை பகுப்பாய்வு செய்து, விசாரணை பிரிவுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் உரிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில், தேசிய உளவுச் சேவை பிரதானியாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, இஸ்லாமிய அடிப்படைவாதம், சஹ்ரான் கும்பல் தொடர்பில் விரிவாக தகவல்களை பேசிய போதும், தேசிய உளவுச் சேவை அது தொடர்பில் முன்னெடுத்த விசாரணை கண்டுபிடிப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்ததாக, தேசிய உளவுத் துறை பிரதானி சிசிர மெண்டிஸ் சுட்டிக்காட்டினார்.

 நேற்றைய தினம் மாலை வரை தொடர்ந்த அவரது சாட்சிப் பதிவுகள், இன்றைய தினமும் தொடரவுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter