ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படுமென, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
அந்தவகையில், ஹோட்டல் ஊழியர்கள், பயண நிறுவனங்கள், சுற்றுலா முகவர் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்த மற்றவர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்று பரவலையடுத்து நிகழ்வுகள் மற்றும் வைபவங்கள் அனைத்தும் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நிறுதி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.