இன்றைய நிலைவரப்படி, பொதுவாக நாட்டில் தலைவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களை வழிநடத்தி, அவர்களுடைய பிரச்சினைகளை மனதிற்கொண்டு, அவர்களுக்காகவே தம்மை அர்ப்பணிக்கின்ற நல்ல தலைவர்களை, நிகழ்காலம் இழந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட இதுதான் எல்லா சமூகங்களின் நிலையும் ஆகும். ஆனால், முஸ்லிம் சமூகத்தில் இந்தப் பிரச்சினை தீவிரமாக உள்ளது. முஸ்லிம்களின் தற்போதைய தலைவர்கள் யார் என்று புரியவில்லை? அடுத்த தலைவர்கள், யாராக இருக்கப் போகின்றார்கள் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. தலைவர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ஒரு முதலாளி, தனது ஊழியர்களிடம் எல்லாப் பணிகளையும் சுமத்தி விட்டு, அதில் இருந்து கிடைக்கின்ற பலாபலன்களை மட்டும் தனது கஜானாவுக்குள் நிரப்பிக் கொள்கின்றார்
ஆனால், உண்மையான தலைவர்கள் ஒரு சமூகத்தின் சுமைகளை எல்லாம், தமது முதுகில் ஏற்றிக் கொண்டு, முன்னின்று சமூகத்தை வழிநடத்திச் செல்வார்கள். தன்னைப் பின்தொடர்கின்றவர்களை, சரியான பாதையில் அழைத்துச் செல்வது, தமது கடமை என உணர்வார்கள்.
தலைவர்கள் தம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்னேற்றம் பற்றி ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கின்றார்கள். இருப்பினும், முதலாளிகள் எனப்படுவோர், தமது சொந்த வெற்றி, முன்னேற்றம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றார்கள்.
அந்தவகையில், நாட்டு மக்களைப் பற்றிச் சிந்திக்காத பெருந்தேசிய தலைவர்கள், இன்று அதிகரித்துள்ளனர். சிறுபான்மை அரசியலிலும் இந்நிலையை வெகுவாக அவதானிக்க முடிகின்றது.
தமிழர் அரசியலில் ஓரளவுக்கு தலைவர்கள் என்று வரையறுக்ககூடிய பண்புகளைக் கொண்ட ஓரிருவர் இருக்கின்றார்கள். ஆனால், அடுத்த தலைவர்கள் யார் யார் என்ற கேள்விக்கும், தமிழர் அரசியலில் இன்னும் விடையில்லை.
முஸ்லிம் அரசியலைப் பொறுத்தமட்டில், நிகழ்காலத்திலும் எதிர்காலம் தொடர்பாகவும் இந்தக் கேள்வி இருக்கின்றது. சரியான முஸ்லிம் தலைமைகள் யார் என்ற கேள்வி, அரசியலுக்கு மட்டுமானதல்ல; அதற்கப்பால் சமய, சிவில் சமூக பரப்புகளிலும் நீட்சி கொள்கின்றது.
இலங்கைவாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்களை அல்லது முக்கால்வாசிக்கும் அதிகமான முஸ்லிம்களை, அரசியல் ரீதியாகத் திறம்படக் கூட்டிச் செல்கின்ற தேசிய தலைவர்கள், யார் என்று தெரியாமலேயே முஸ்லிம்களுக்கான அரசியல் கால்நூற்றாண்டாகப் பரிதவிக்கின்றது.
அதுபோலவே, எதிர்காலத்தில் அதாவது இதற்குப் பின்னர் வரப் போகின்ற தலைவர்கள் யார் என்ற கேள்வியும், இப்போது முஸ்லிம்கள் முன் உள்ளது. ஏனெனில், அப்படியான அபூர்வ ஆளுமைகள், நம்பிக்கை நட்சத்திரங்கள் யாரையும் முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண்டுள்ள நிகழ்கால அரசியலில் காணக் கிடைக்கவில்லை.
மக்களைப் பயன்படுத்தி அரசியல் செய்கின்ற அரசியல் முதலாளிகளே, இன்று முஸ்லிம் அரசியலில் நிரம்பி வழிகின்றார்கள். இவர்கள் மக்களது முதுகின் மேல் ஏறி, தேர்தல் எனும் ஆற்றைக் கடக்கின்றார்களே தவிர, சமூகத்தை வழிநடத்தும் எண்ணமோ அருகதையோ இவர்களுக்கு எள்ளளவும் கிடையாது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
ஒர் ஆசிரியர் என்றால், அவர் கற்பிக்க வேண்டும். ஒரு மருத்துவர் என்றால், அவர் சிறிய நோய்களையாவது குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்; குறைந்தபட்சம் அதற்காக முயற்சி எடுக்க வேண்டும்.
அதுபோல, ஒரு தலைவர் என்றால், அந்தச் சமூகத்தை வழிநடத்துபவராகவும் அச்சமூகத்துக்காகப் பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும். இப்படியான பண்பைக் கொண்டிராத யாரையும், ஆசிரியர் என்றோ, வைத்தியர் என்றோ, தலைவர் என்றோ ஏற்றுக் கொள்வது கடினமாகும்.
இன்று, நான்குக்கும் குறையாத முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் உள்ளனர். இதில் சிலர், தேசியத் தலைவர்கள் என்ற அடைமொழியால் அழைக்கப்படுகின்றனர். வேறுசிலர், தம்மைப் பிராந்தியத் தலைவர்களாக முன்னிறுத்த பிரயாசைப்படுகின்றனர்.
பெரிய அரசியல்வாதிகள், தம்மை முஸ்லிம் சமூகத்தின் ஏக தலைவர்களாக கற்பனை செய்து கொள்வது ஒருபுறமிருக்க முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாத டீல்’ மன்னர்கள் மற்றும் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த எம். பிக்களும் கூட, தம்மை தலைவர்கள் என்று நினைத்துக் கொள்கின்ற அபத்தம், முஸ்லிம் அரசியலில் மட்டுந்தான் நடக்கினறது.
ஆனால், தம்மைத் தலைவர்கள் என்று எண்ணி, கனவுலகில் மிதக்கின்ற இவர்கள் எல்லோரும் அந்தக் கட்சியின், ஒரு கூட்டத்தின், ஓர் ஊரின், நான்கைந்து ‘பேஸ்புக்’ போராளிகள் மற்றும் எடுபிடிகளின் தலைவர்களாக இருக்கின்றார்களே தவிர, நிஜத்தில் அவர்கள் எந்தத் தருணத்திலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஏக தலைவர்களாகத் தம்மை முன்னிறுத்தத் தவறிவிட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள் உள்ளன. குறுங்கால அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இனப்பிரச்சினை தீர்வு, புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை, மனித உரிமை மீறல்கள் என நாட்டில் பேசப்படுகின்ற ஒவ்வொரு விவகாரங்களிலும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு வகிபாகம் உள்ளது.
இதனை எல்லாம் கவனித்துக் கொள்வதற்காகவே, முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள், அவர்களில் சிலர், தலைவர்கள் என்ற அந்தஸ்துக்கு கிட்டிய நிலையில் வைத்து கொண்டாடப்படுகின்றார்கள்.
ஆனால், கட்சித் தலைவர்களோ, பிராந்திய தளபதிகளோ அல்லது இளம் அரசியல்வாதிகளோ, முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றிரண்டைத்தானும் நிவர்த்தி செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக மக்களை வெற்றிகரமாக ஏமாற்றும் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு வைத்தியர் நன்றாக நோய் குணமாகும் விதத்தில் மருந்து கொடுக்கின்றார்’ என மக்கள் கேள்விப்பட்டால், சாரைசாரையாக அவரைத் தேடிப் போவார்கள். அவர் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை; பொய் கூற வேண்டியதில்லை. இது அரசியலுக்கும் பொருந்தும்.
ஒரு கட்சித் தலைவர் அல்லது பிரபலமான அரசியல்வாதி, முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றார் என்றால், முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய புரிதலுடன், அவற்றுக்கு தீர்வு காண முன்னிற்கின்றார் என்றால், மக்கள் தாமாகவே அவரைத் தலைவராக மனதளவில் ஏற்றுக் கொள்வார்கள்.
தற்கால முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த அடிப்படை யதார்த்தத்தை, நுட்பத்தைக் கூட தெரியாத சுத்த சூனியங்களாகவே, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். அதாவது, தலைவராக வருவதற்கான எந்த முயற்சியையும் அவர்கள் ஆற்ற விரும்பவில்லை. ஆனால், தலைவர் என்ற மகுடம் மட்டும் தேவைப்படுகின்றது.
அதுமட்மன்றி, வாகனத்துக்கான வரிவிலக்கு அனுமதிப்பத்திரம் பெறுவது எவ்வாறு? அரச தங்குமிடத்தை எவ்வாறு பெறலாம்? எந்தக் கொந்தராத்தை கொடுத்தால் எவ்வளவு கொமிசன் கிடைக்கும்? அமைச்சுப் பதவி தேவையென்றால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? தொழில்களை யாரின் ஊடாகப் பெறலாம், விற்பனை செய்யலாம்? எப்படி ‘பெல்டி’ அடித்தால் அல்லது ‘டீல்” பேசினால் என்ன ‘வெகுமதி’ கிடைக்கும் என்ற கணக்கையெல்லாம், நன்றாக கற்று வைத்திருக்கின்றார்கள் – சரியாகச் சொன்னால் ஒரு முதலாளியைப் போல!
இதனால், முஸ்லிம்களின் தலைவர் என்ற பதவி இன்னும் வெற்றிடமாகவே இருக்கின்றது. தற்போதைய தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்படாததன் காரணமாக, எதிர்காலத்தில் நல்ல தலைவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பும், அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கான நிகழ்தகவுகளும் மிகவும் குறைவடைந்து செல்கின்றன.
அத்துடன், இப்போதிருக்கும் அரசியல்வாதிகள், சரியான தலைமைகளாகத் தம்மை புடம்போட்டுக் கொள்ளாததன் காரணமாக, அடுத்த தலைவர்களை அடையாளப்படுத்துவதற்குரிய தலையமைத்துவச் சங்கிலி உருவாக்கப்படவில்லை.
நல்ல எதிர்கால தலைவர்களை உருவாக்கத் தவறியமையால், இப்போதுள்ள பெரிய அரசியல்வாதிகளைப் போலவே, கொஞ்சம்கூட பொருத்தமற்ற புதியவர்கள் அரசியல் தலைவர்களாகும் கனவுகளோடு முஸ்லிம் அரசியலுக்குள் உள்நுழைகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் பதவி, பணத்தாசை பிடித்தவர்களாகவும், குறுக்கு வழியிலேனும் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களாகவும் இருப்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது. அதற்காக அவர்கள் எந்த எல்லை வரைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர்.
ஏற்கெனவே இருப்பவர்களை விட, மோசமான பேர்வழிகள் புதிதுபுதிதாக எம்.பிக்களாக மாகாண சபை உறுப்பினர்களாக ஆகிக் கொண்டிருப்பதால், அல்லது அப்படி யானவர்களுக்கே மக்கள் வாக்களிக்கும் போக்கு காணப்படுகின்றமையால், ஏற்கெனவே கெட்டு குட்டிச் சுவராகியுள்ள முஸ்லிம்களுக்கான அரசியல், இன்னும் மோசமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. முஸ்லிம் அரசியலைத் திருத் துவதற்கு, ஒவ்வொரு பொதுமகனும் முன்வராமல், ஹெறுமனே மாற்றம் வேண்டும் என்றும், பாடம்புகட்ட வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும், எதுவும் நடந்து விடாது. (தமிழ் மிரர் 15-2-2022) – மொஹம்மத் பாதுஷா