முஸ்லிம் அரசியல் எல்லாப் பக்கங்களிலும் கௌரவத்தையும், மரியாதையையும், பலத்தையும் இழந்து நிற்கின்றது

ஏறக்குறைய 40 வருடங்களின் பின் சிங்கள மக்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட பெருந்தேசியவாதம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொண்டு ஆட்சி அமைத்திருக்கிறது.  

முன்னாள் பிரதமர் SWRD பண்டாரநாயக்கா 1956ல் ஒரே நாடு- ஒரே மொழி என்ற கோஷத்தோடு ஸ்ரீ போராட்டத்தை ஆரம்பித்து சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகளைப் போன்று அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 2020ல் ஒரே நாடு- ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு ஆரம்பித்து பௌத்த சிங்கள மக்களின் மேலாதிக்கத்தை முதன்மைப்படுத்தி பல வருடங்கள் ஆள்வதற்காக வகுக்கப்பட்ட வியூகங்கள் வெற்றியடைந்திருக்கின்றன என மாற்றத்திற்கான முன்னணியின் பிரதம செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்தார். 

அல்- மீஸான் பௌண்டஷன்- ஸ்ரீலங்கா அமைப்பின் மருதமுனை கிளையினால் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்ட சமகால அரசியல் நிலவரங்களும் மக்களின் வகிபாகமும் எனும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமகாலத்தில் தமிழர்களின் அரசியலில் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்திலிருந்து கீழிறக்கப்பட்டு தப்பிப் பிழைத்திருக்கின்றது. ஆனால் இன்று முஸ்லிம்களின் அரசியல் எல்லா கட்சிகளிடமிருந்தும் கௌரவத்தையும் மரியாதையையும் பலத்தையும் இழந்து நிற்கின்றது. இதற்குப் பிரதான காரணம் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கடந்த காலத்தில் மேற்கொண்ட சுயநலவாத தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களும் நகர்வுகளுமாகும்.  மேலும் அதற்கு துணை நின்ற காரணங்களாக பெருந்தேசிய வாதம், தலைவர்களின் பேச்சை நம்பி குருட்டுத்தனமாக ஆதரவளிக்கும் வாக்காளர்கள், இனவாதம், சஹ்ரானின் செயற்பாடுகள், மதபோதனை அமைப்புக்களின் பொறுப்பற்ற ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள், பெரும்பான்மை மக்களோடு நல்லுறவை வளர்க்க போதியளவு சிங்களத்தில் தேர்ச்சியின்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தலைமைகள் பெருந்தேசியக் கட்சிகளுடனும் சிங்கள மக்களுடனும் ஒற்றுமையாக பின்னிப் பிணைந்திருந்ததுடன் முக்கிய பதவிகளிலிருந்து திட்டம் தீட்டுபவர்களாகவும் இருந்துகொண்டு உரிமைசார் விடயங்களையும் சலுகைசார் விடயங்களையும் அபிவிருத்திகளையும் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்தார்கள். 1994ன் பின்னர் அரசியல் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார்கள். ஆனால் அக்காலம் மலையேறிப்போய் ஆட்சியில் பலமிக்கதொரு பங்காளராக கௌரவத்துடன் அங்கம் வகிப்பதும் கேள்விக்குறியாக ஆகியிருக்கின்றது.

எந்த அமைச்சுக்களையோ அல்லது பதவிகளையோ தரவே மாட்டோம் விரும்பினால் அரசாங்கத்துக்கு ஆதரவளியுங்கள் இல்லாது விட்டால் விட்டுப் போங்கள் என்ற தோரணையிலேயே பெரும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளை வைத்திருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம்களுக்கான ஒட்டுமொத்த அரசியலையும் மழுங்கடிக்கச் செய்யும் பாங்கிலான கூட்டு நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இதனைக்கொள்ளலாம்.

ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் முஸ்லிம்களின் அரசியல் மரியாதையும் அந்தஸ்தையும் இழந்துள்ளதுடன் மிகவும் பலமிழந்தும் போய்க் கொண்டிருக்கின்றது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித்தினால் தேசியப்பட்டியல் உறுப்பினர் கொடுக்கப்படாததையும் குறிப்பிடலாம். ராஜபக்சக்களுக்கு அன்றும்மின்றும் கொள்கையில் விசுவாசியான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கோ அல்லது மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட காதர் மஸ்தானுக்கோ அமைச்சுப்பதவி வழங்கப்படாததும் ஆளும் தரப்பில் முஸ்லிம் அரசியல் வலுவை இழந்துள்ளதுஎன்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

சமூகத்திற்காக தமது வரப் பிரசாதங்களைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். பாராளுமன்றத்திற்கு சென்று தூங்குவதும், உணவருந்துவதும், சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதும், பணம் உழைப்பதுமாக காலத்தைக் கடத்தக் கூடிய பாராளுமன்றமாக இனிவரும் காலங்களில் இருக்குமென நினைத்து எடைபோட முடியாது. அரசாங்கமானது பல்வேறு காய் நகர்த்தல்களை  எதிர்காலத்தில் செய்யவுள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொண்ட கையோடு 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து அரசாங்கத்தை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் எவ்வாறான  திருத்தங்கள் செய்யப்படப் போகிறது என்பதும் மர்மமாக உள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் புதிய பரிணாமம் எடுத்துள்ளதுடன் மக்களின்  மனங்களில் மாற்றம் ஏற்பட்டு புதிய கட்சிகளையும் புதிய நபர்களையும் தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள். அதேநேரம் முஸ்லிம் அரசியல் மாற்றம் ஒன்றை தேடி சகல கட்சிகளிலிருந்தும் புதிய நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள். இருந்த போதிலும் முஸ்லிம் அரசியல் எல்லாப் பக்கங்களிலும்   கௌரவத்தையும்  மரியாதையையும், அதன் பலத்தையும் இழந்து நிற்கின்றது.

இதற்குப் பிரதான காரணம் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கடந்த காலத்தில் மேற்கொண்ட புத்திசாலித்தனமற்ற தீர்மானங்களும் நகர்வுகளுமே காரணமாகும். பேரினவாதிகளின் அழுத்தங்களுக்கு செவிமடுத்து முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது என யாரும் அறுதியிட்டுக் கூறவும் முடியாது. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான தீர்மானங்கள் அமைச்சரவைக்கு வந்தபோதெல்லாம் முஸ்லிம் அமைச்சர்கள் அடக்கி வாசித்தனர். ஜனாதிபதியையும் பிரதமரையும் விமர்சித்து தேர்தலில் வெற்றி பெற்று பதவிகளுக்காகவும் வெகுமதிகளுக்காகவும் உரிமை அரசியலை கைவிட்டு சரணாகதி அரசியல் செய்வதால் முஸ்லிம்களுக்கு எவ்வித அரசியல் பலத்தையும் பெற்றுக்கொடுக்காது.

சமூகத்தைக் காட்டிக் கொடுக்காது சரியான வழி நடத்தவே  இனவாதம் பேசாமல் முஸ்லிம் பிரதிநிதிகள் விட்டுக்கொடுப்புக்களுடன் முன்னின்று உழைக்க வேண்டும். முஸ்லிம்களும் இந்நாட்டின் ஒரு பகுதியினரே மாறாக பிரிவினை  கோருபவர்களல்ல என்பதையும்  வெளிக்கொணர வேண்டும். பொது  மக்களும் தமது அரசியல்வாதிகளின் வெற்றுக் கோசங்களுக்காக குருட்டுத்தனமாக பிரதி நிதிகளை தெரிவு செய்யாமல் கட்சியரசியலுக்கு அப்பால் பன்முக ஆளுமையுள்ள புத்திஜீவிகளை தெரிவுசெய்ய வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது என்றார்.

நூருல் ஹுதா உமர்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter