டுபாய் – அல்-ஹுதைபா பூங்காவில் வாழ்க்கை நடத்திய 20இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சமூக சேவையாளர்களின் உதவியுடன் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
வருகை விசாக்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வந்து, சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு உதவ சமூக சேவையாளர்கள், இலங்கை நலச்சங்கம், சஹானா மற்றும் டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியன முன்வந்துள்ளன. அவர்கள் அனைவரும் வருகை விசாக்களில் வந்ததால் டுபாயில் வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று டுபாயிலுள்ள இலங்கை துணைத்தூதுவர் நலிந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உதவுவதில் தூதரகம் முனைப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்குமிட வசதிகள் இல்லாத அனைவருக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும் என்று நலன்புரி குழுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இங்குள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிச்செல்ல டிக்கெட் வாங்கவோ, தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவோ வசதியற்றவர்கள். குளிப்பதற்கும் இடமில்லை. வீதியால் நடந்து செல்வோர் கொடுக்கும் உணவில் நாங்கள் வாழ்கிறோம் என்று சிக்கித் தவித்த இலங்கை ஒருவர் கூறினார்.
இதேவேளை, சஹானா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு தங்குமிடங்களில் பெண்கள் உட்பட 110 இலங்கையர்கள் இருப்பதாக சஹானாவின் பணிப்பாளர் விஸ்வ திலகரத்ன தெரிவித்துள்ளார்
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ;
நாங்கள் கடந்த வாரம் 2௦ பேரை தங்குமிடங்களுக்கு மாற்றினோம், இப்போது மேலும் 1௦ பேர் அதே பூங்காவில் தங்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த புதிய குழு குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் விரைவில் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். செப்டெம்பர் 1௦ ஆம் திகதி இலங்கை செல்ல திட்டமிடப்பட்ட விமானத்தில் அவர்களை திருப்பியனுப்புவோம்.
எங்கள் ஆதரவாளர்களின் ஆதரவோடு இந்த முகாம்களை செயற்படுத்தி வருகிறோம். தற்போது, ஒரே நேரத்தில் மேலும் 1௦௦ பேர் தங்கக்கூடிய தங்கு மிட வீடுகளைத் தேடிவருகிறோம். இலங்கைக்குத் திரும்புபவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படவேண்டும். நிறுவன தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்த வேண்டும். அந்த வசதியில்லாதவர்களுக்கு தொண்டு நிறுவனம் உதவியளிக்கிறது. சில நபர்கள் வீடு திரும்புவதற்கான முன்னுரிமையைப் பெறுவதற்காக தொடர்ந்து பூங்காவில் தங்க முயற்சிக்கிறார்கள்.
பூங்காவில் தங்கியிருந்தவர்களை இலங்கைத் தூதரகம் பொறுப்பேற்று, சஹானா ஏற்பாடுசெய்த முகாம்களுக்கு மாற்றுவதற்கு முன்னர், அவர்கள் பூங்காவிலேயே நாட்களை கழித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு அந்தப் பகுதி மக்கள் உணவு, தண்ணீர், மெத்தை மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்கினர். இப்பகுதியில் வசிக்கும் இந்தியரான பிரக்யா ஷா, சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு சூடான உணவு, பிஸ்கட் மற்றும் பிற வசதிகளை வழங்கி வருகிறார்.
அவர் டுபாயிலுள்ள மற்ற இலங்கையர்களை அணுகினார், அவர் இலங்கை நலச் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். ஒரு கட்டத்தில் குறைந்தது 25 பேராவது இருந்தனர். அவர்கள் அனைவரும் வார இறுதியில் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போதும் சிலர் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு உணவு, சிற்றுண்டி மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்கிவருகிறேன்.
அவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் எனது கவலை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
19,000 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏராளமான இலங்கையர்கள் நாடு திரும்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் பலருக்கு ரிக்கெட் கட்டணம், பி.சி.ஆர். பரிசோதனை கட்டணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது,19 ஆயிரம் பேர் திரும்பிச்செல்ல விரும்புகிறார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விமான டிக்கெட்டுகளை வாங்க முடியாத சுமார் 5 ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளதாகவும் அவர்களின் தேவைகளுக்கு பணம் செலுத்தியுள்ளதாகவும் டுபாயிலுள்ள இலங்கை துணைத் தூதுவர் நலிந்த விஜேரத்ன கூறியுள்ளார்.