இலங்கையில் தற்போது பாரியதொரு டொலர் நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கின்ற வேளையில் டொலர்களை இலங்கையிலிருந்து வெளியே அள்ளிக் கொண்டு செல்கின்ற மிக முக்கியமானதொரு துறையாக இறக்குமதி துறை காணப்படு கின்றது. தற்போதைய சூழலில் வருடாந்தம் 20 பில்லியன் டொலர்களுக்கு இலங்கை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கின்றது. அதாவது மாதம் ஒன்றுக்கு 1.8 பில்லியன் டொலர்களுக்கு இலங்கை இறக்குமதி செய்கின்றது. ஏற்றுமதி வருமானம் அந்த அளவுக்கு இல்லை. ஏற்றுமதி வருமானம் வருடாந்தம் 10 பில்லியன் டொலர் அளவில் இருக்கின்றது. ஆனால் இறக்குமதி செலவானது அதன் இரண்டு மடங்காக 2௦ பில்லியன் டொலர்களாக இருக்கின்றது. கடந்த 2020ஆம் ஆண்டு 16 பில்லியன் டொலர்களாக இறக்குமதி செலவு காணப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதால் 2021 இல் இறக்குமதி செலவு குறைந்திருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்னைய ஆண்டுகளிலும் 22 பில்லியன், 20 பில்லியன், 19 பில்லியன் என்ற அளவில் இறக்குமதி செலவு சென்றுகொண்டிருக்கின்றது.
மிக அதிகளவான இறக்குமதியில் இலங்கை தங்கி இருக்கின்றது. குறிப்பாக மாதமொன்றுக்கு எரிபொருள் செலவுக்காக இலங்கை 350 தொடக்கம் 400 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது. வருடம் : ஒன்றுக்கு 4.5 பில்லியன் டொலர்களுக்கு மேல் எரிபொருளுக்காக இலங்கை செலவிடும் நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று பால் மா, சீனி, சமையல் எரிவாயு, சீமெந்து, மருந்து பொருட்கள், உரவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றது. இலங்கையானது ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதியில் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்கின்றது. ஆனால் அந்த ஆடை துறைக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதற்காகவும் அதிகளவு டொலர்கள் வெளிசெல்கின்றன.
அந்தவகையில் இலங்கைக்கு வருகின்ற டொலர்களை வெளியே அள்ளிச்சென்ற மிகமுக்கியமானதொரு துறையாக இந்த இறக்குமதி செலவு துறை காணப்படுகின்றது. இலங்கையினால் ஒரு மாதம் ஒன்றுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் நாட்டைக் கொண்டு நடத்த முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. எரிபொருள் வளம் இல்லாத நாடுகளில் இவ்வாறு எரிபொருட்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும். ஆனாலும் இலங்கையில் உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது என்ற ஒரு ஆதங்கம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையானது மிக அதிகமாக எரிபொருளுக்காகவே டொலர் செலவுகளை செய்கிறது. 2007 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையான புள்ளிவிபரங்களை பார்க்கும் போது எரிபொருளுக்கான டொலர் செலவானது அதிகரித்துக் கொண்டு செல்வதை காணமுடிகிறது. முக்கியமாக 2007 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்கள் எரிபொருளுக்காக செலவிடப்பட்டன. அது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 2011ஆம் ஆண்டில் 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் 4 பில்லியன் டொலர்களாக எரிபொருள் செலவு காணப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் சற்று குறைவடைந்து இருக்கின்றது. இந்த நிலையில் எரிபொருளுக்கு மிகப்பெரியதொரு டொலர் செலவு காணப்படுகின்றது. ஆனால் எரி பொருள் செலவை கட்டுப்படுத்த முடியாது. நாட்டுக்கு எரிபொருள் மிக அவசியமாகும். எரிபொருள் வருகை ஸ்தம்பிதமடையும் பட்சத்தில் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துவிடும். தற்போது கூட எரிபொருள் இல்லாமையினால் மின்சார உற்பத்தி செய்ய முடியாமல் மின்சார துண்டிப்பு இடம் பெறும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே எரிபொருளுக்கு நாம் பெறுகின்ற ஏற்றுமதி வருமானத்தில் 25 வீதத்தை செல வழித்துக் கொண்டிருக்கின்றோம். ஆடை துறைக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 2020ஆம் ஆண்டில் ஆடை துறைக்கான மூல பொருட்களுக்காக 2.3 பில்லியன் டொலர்கள் செல விடப்பட்டுள்ளன. அதற்கு முன்னைய ஆண்டுகளில் அந்த செலவு மிக அதிகமாகவே காணப்படுகின்றது. ஆனால் அந்த செலவையும் கட்டுப்படுத்த முடியாது. காரணம் மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதன் ஊடாகவே ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். அதேபோன்று உரத்திற்காக இலங்கை வருடமொன்றுக்கு 250 மில்லியன் டொலர்கள் அளவில் செலவிடுகிறது. அது வருடத்திற்கு வருடம் கூடி குறைந்து காணப்படுகின்றது. மேலும் இயந்திர கருவிகளுக்காக 2 பில்லியன் டொலர்களுக்கு மேல் இலங்கை செலவிடுகிறது. கட்டிட பொருட்கள் இறக்குமதி செலவும் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. போக்குவரத்து கருவிகள் உள்ளிட்ட இறக்குமதி செலவும் காணப்படுகின்றது. உணவுப் பொருட்களுக்கான இறக்கு மதி செலவும் காணப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும் பொருட்களை இலங்கையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு பொருளாதார ரீதியான கருத்தும் பொருளாதார நிபுணர்களினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. விவசாய உற்பத்திகள், அரிசி உற்பத்தி போன்ற வற்றை இலங்கையில் தொடர்ந்து மேலும் ஊக்குவிக்க முடியும். அதேபோன்று பால் உற்பத்தியில் நாம் தன்னிறைவை அடைய முடியும். உதாரணமாக பால் இறக்குமதிக்காக நாம் அதிக நிதியை செலவிடுகிறோம். அதனை குறைக்க முடியும். மீன் உற்பத்தியில் நாம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாக இருக்கின்றது. இலங்கை ஒரு தீவு நாடாக இருந்து கொண்டும் சுற்றி கடலை வைத்துக் கொண்டும் மீன்களை இறக்குமதி செய்யும் ஒரு நிலையில் இருக்கின்றோம். அந்த நிலைமைகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியமாகும். அதன் உள்ளார்ந்த உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். பால்மா உற்பத்தியில் இலங்கை தன்னிறைவை காண முடியும். அதுதொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கின்றது. எனவே பால்மாவில் இலங்கை தன்னிறைவு அடையும் பட்சத்தில் நிச்சயமாக பால்மாவுக்காக செல வழிக்கின்ற டொலர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆடை துறைக்கான மூலப்பொருட்களை இலங்கை தொடர்ந்து கொள்வனவு செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. அவற்றையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். தற்போது இலங்கையில் மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அந்த விடயம் சரியான முறையில் வெற்றியடையும் பட்சத்தில் அதனூடாக டொலர் கையிருப்பை அதிகமாக்க முடியும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக காணப்படுகின்றது. இறக்குமதி செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இறக்குமதி செலவுகளை பொறுத்தவரையில் மிக அதிகளவான டொலர்களை எரிபொருளுக்காக தொடர்ச்சியாக இலங்கை செலவிடுகிறது. 2020ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்கு மதிக்காக 2542 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. இது எமது ஏற்றுமதி வருமானத்தில் 25 வீதமாக காணப்படுகின்றது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் எரிபொருளுக்காக இலங்கை 3891 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. எனவே இது மிகப்பெரிய ஒரு தொகையாக காணப்படுகின்றது.இறக்குமதி செலவைக் குறைத்தல் ஊடாக டொலர் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால் இறக்குமதியை தவிர்க்க முடியாது. ஆனால் இறக்குமதி செலவை குறைக்க முடியும். 2008 ஆம் ஆண்டு 14 பில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றது. அதுவே 2018 ஆம் ஆண்டாகும்போது 22 பில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றது. இதனூடாக பத்து வருடங்களில் 8 பில்லியன் டொலர்களில் இறக்குமதி செலவு அதிகரித்திருக்கின்றது.
அந்த வகையில் இலங்கையானது ஏற்று மதி வருமானத்தை அதிகரித்து இறக்குமதி செலவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்காக இறக்குமதியை செய்யாமல் இருக்கமுடியாது. தற்போது வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை விரைவாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. காரணம் இறக்குமதி பதிலீடு என்பது ஒரு காலம் கடந்த உபாயமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒன்றிணைவு மிக அவசியமாக இருக்கிறது. அதாவது ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் தான் அந்த நாட்டுக்கு நாமும் ஏற்றுமதி செய்யமுடியும். எனினும் இறக்குமதி செலவை குறைக்க முடியும். அதாவது இலங்கையில் உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய பொருட்களை இலங்கையிலேயே உற்பத்தி செய்ய முடியும். உதாரணமாக பால் மாவை எடுத்துக் கொண்டால் இலங்கைக்கு தேவையான பால் மாவை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நாம் 350 மில்லியன் டொலர்களை செலவழித்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று கடலுணவு பொருட்கள், உணவுப்பெபொாருட்கள், விவசாயப் பொருட்களை கூட நாம் தொழில்நுட்ப விடயங்களை பாவித்து இலங்கையில் உற்பத்தி செய்துகொள்ள முடியும். அவை தொடர்பாக கவனம் செலுத்தும் பட்சத்தில் நிச்சயமாக இறக்குமதி செலவை ஒரு குறிப்பிட்ட அளவில் குறைக்க முடியும். அது இலங்கையின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும்.
ரொபட் அன்டனி (வீரகேசரி 21-1-2022)