காகமும் காத்தான்குடியானும் இல்லாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு இலங்கையிலே கடின உழைப்புக்குப் பெயர்போன முஸ்லிம்களின் மிகப்பெரும் வதிவிடமாக விளங்கும் ஓர் ஊர் காத்தமாநகர். சுமார் ஐம்பதாயிரம் மக்களை ஏறக்குறைய ஐந்து சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் அடக்கிக்கொண்டு, மூச்சுவிடவும் முடியாதவாறு குடியாட்டங்களால் நிறைந்து திணறுகின்ற நிலையிலும், வைசியத்தையும் வைதீகத்தையும் வாழ்வாதாரங்களாகக் கொண்டு நாடெல்லாம் பரந்து உழைக்கும் மக்களைக் கொண்ட ஒரு விசேட பட்டினம் இது. “காத்தான்குடிக்குக் கரத்தை கொண்டு போற மச்சான் சீத்தை இரண்டு முளம் பஞ்சமாகா அந்தச் சீமையிலே”, என்று கரவாகுக் கன்னியரின் கவியினால் புகழாரம் சூடப்பட்ட ஒரு காவிய நகர். துரதிஷ்டவசமாக, வைதீகம் வளர்த்துவிட்ட ஒரு வாலிபக் கும்பல் இரண்டு வருடங்களுக்குமுன் அரங்கேற்றிய ஒரு கொலைவெறி ஆட்டத்தால் காத்தான்குடி மதத் தீவிரவாதத்தின் தொட்டில் என்ற இழி பெயருக்கு இன்று இலக்காகியுள்ளது. இருந்தும் இதே காத்தான்குடிதான் நான் பிறந்த ஊரென்று உலகில் எங்கிருந்தாலும் பறைசாற்றுவதில் எனக்கொரு பெருமையுண்டு.
அண்மையிலே இந்த ஊருக்கு ஒரு முக்கிய விருந்தாளியாக விஜயம் செய்த ஞானசார தேரர் என்ற ஒரு நாயகனின் திருவிளையாட்டை ஆங்கில மொழியில் ஏற்கனவே நான் கொழும்பு டெலிகிறாப் என்ற மின்னிதழில் வெளியிட்டுள்ளபோதும் அதை விடிவெள்ளி வாசகர்களுக்காக தமிழிலும் படைக்கலாமென விரும்புகிறேன்.
ஞானசார தேரர் ஒரு கலகப்பிரியர். எனவேதான் அவரை ஒரு நாரதர் என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். இவர் பொதுபல சேனா என்னும் இஸ்லாமோபிய அமைப்பின் பொதுச் செயலாளர். இந்த அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஈஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணைக்குழு சிபாரிசு செய்தும் அதனை சுதந்திரமாக இயங்கவிட்டுள்ளார் அதே ஜனாதிபதி. 2014 இல் அளுத்கமையில் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரத்தின் முக்கிய கதாநாயகனாக விளங்கியவர் நமது நாரதர். அந்தக் கலவரத்தை அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த இதே ஜனாதிபதி கைகட்டிநின்று வேடிக்கை பார்த்ததை என்னென்று விபரிப்பதோ? அதை நிறுத்துவதற்காகத் தலையிட்டிருந்தால் நாடே ஒரு போர்க்களமாக மாறி இருக்குமெனவும் அவர் கூறிய ஒரு நொண்டிச்சாட்டையும் எவ்வாறு சரிகாண்பதோ?
எனினும் அந்தச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் நடைபெற்ற எல்லாச் சிங்கள முஸ்லிம் கலவரங்களுக்கும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஞானசாரர் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் உண்டு. இவர் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு முக்கிய தூண். இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு. அதில் வாழும் ஏனைய இனங்களெல்லாம் பௌத்தர்களின் தயவில் வாழும் வாடகைக் குடிகளே என்று முதன்முதலில் கண்டி மாநகரில் பகிரங்கமாகவே முழக்கமிட்ட மாவீரர். அந்த அபாண்டமான கூற்றை மறைந்த மங்கள சமரவீரவைத்தவிர எந்த ஒரு பௌத்த அரசியல் தலைவனும் இன்றுவரை மறுத்துரைக்காதது புதுமையாகத் தெரியவில்லையா? நீதிமன்றத்தையே அவமதித்த குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவின் அரசியல் நோக்கத்துக்காக மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலையாகி இன்றைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்குத் தலைவராக்கப்பட்டு ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக நடமாடுகிறார். இந்தக் கலக நாயகனுக்கு இன்னுமொரு தோற்றமும் உண்டு. அதுதான் இக்கட்டுரைக்கும் அவரின் காத்தான்குடி விஜயத்துக்கும் முக்கியமானது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் வஹ்ஹாபியத்துக்கும் எதிராகப் போராடும் இப்பேரினவாதத் தளபதி அண்மைக்காலமாக சூபித்துவ இஸ்லாத்தின் பாதுகாவலனாகவும் மாறியுள்ளார். இவருக்கு எந்த அளவுக்கு சூபித்துவத்தின் தத்துவங்களிலும் வரலாற்றிலும் புலமையுண்டோ என்பதும், சூபித்துவத்தின் மேதைகளான இப்னல் அறபி, அல்கஸ்ஸாலி, ஜலாலுத்தீன் ரூமி ஆகியோரின் படைப்புகளையேனும் படித்துள்ளாரா என்பதும் தெளிவில்லை. ஆனால், இலங்கையிலே சூபித்துவ இஸ்லாமே வளர்க்கப்படவேண்டும் என்பதில் இவர் பிடிவாதமாக இருக்கிறார். இவரது பிடிவாதம் இந்நாட்டில் சூபித்துவத்தின் பெயரால் உருவாகியுள்ள எத்தனையோ முஸ்லிம் குழுக்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.
அண்மையில் ஒரே நாடு ஒரே சட்டச் செயலணியின் தலைவரென்ற முறையில் இவர் மேற்கொண்ட காத்தான்குடி விஜயத்தின்போது அங்கே நீண்டகாலமாக சூபித்துவ இஸ்லாத்தை வளர்க்கின்ற மௌலவி ரவூப்பின் பள்ளிவாசலில் ஆடம்பரமான ஒரு வரவேற்புக்குப் பிரதம விருந்தாளியானார். அந்த வைபவத்தின்போது எவ்வாறு அந்த மௌலவியும் அவரது பக்தகோடிகளும் பல ஆண்டுகாலமாக வைதீக இஸ்லாத்தின் காத்தான்குடித் தலைவர்களால் அதிலும் குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள் என்பதையும், சுமார் நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தச் சபை இந்த மௌலவியை ஒரு முர்தத் என்று பட்டம் சூட்டியதாகவும், அதனால் இந்த மௌலவியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதென்றும் விளக்கப்பட்டதாக அறிகிறோம். இதனைப்பற்றி மேலும் தொடருமுன் இக்கட்டுரையாளரைப் பற்றிய உண்மையொன்றை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளது. அதாவது இக்கட்டுரையாளர் இந்த மௌலவிக்கோ அல்லது வேறெந்த மௌலவிகளுக்கோ அல்லது ஜம்இய்யத்துல் உலமா சபைக்கோ வக்காலத்து வாங்குபவர் அல்ல என்பதை வாசகர்கள் அறிந்துகொள்ளல் வேண்டும். ஆனாலும் கடந்த காலச் சம்பவம் ஒன்றைப்பற்றி இந்த வைபவத்தில் வழங்கப்பட்ட விளக்கங்களெல்லாம் பிரதம விருந்தாளியான ஞானசார தேரரின் கலக நாடகத்துக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்பதே எனது வாதம்.
வரவேற்பு உபசாரத்தில் கலந்துகொண்டு கொழும்பு திரும்பிய ஞானசாரர் மேற்கூறிய சம்பவத்தை மையமாகவைத்து ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜயசுமனவை ஒரு கருவியாகப் பாவித்து நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு ஒரு மடல் வரையச் செய்தார். அந்த மடல் பேராசிரியரின் கைச்சாத்துடன் அனுப்பப்பட்டு அதன் பிரதியொன்று ஞானசாரரிடம் கையளிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் உலமா சபை குறிப்பிட்ட மௌலவிக்கெதிராக ஒரு பத்வா வழங்கியதென்றும், அதனால் அந்த மௌலவி கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்றும், ஆதலால் அவரது அடிப்படை உரிமைகளை நீதி அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கடிதத்தில் முக்கியமாக நோக்கப்படவேண்டியது என்னவென்றால் பத்வா என்ற வார்த்தைப் பிரயோகம்.
1979ல் ஈரானின் புரட்சித் தலைவர் ஆயதுல்லா கொமைனி, சல்மான் ருஷ்தியின் “சாத்தானிய வாசகங்கள்” என்ற நாவலுக்கெதிராக வழங்கிய பத்வாவால் ஏற்பட்ட கலவரங்களை வாசகர்கள் அறிந்திருப்பர். ருஷ்தியை கண்டவிடத்தில் கொலை செய்யுமாறும் கொமைனி வேண்டி இருந்தார். பேராசிரியரின் கடிதம் அந்த நினைவுகளுக்குப் புத்துயிர் அளிப்பதாக அமைந்ததில் ஆச்சரியமில்லை. உலமா சபை பேராசிரியருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் அச்சபை பத்வா வழங்கவில்லை என்றும் காத்தான்குடி மக்கள் ரவூப் மௌலவிக்கு எதிராக எழுப்பிய புகார்களின் விளைவாக அவரைப்பற்றிய மார்க்க ரீதியான ஒரு அபிப்பிராயத்தையே அறிவித்ததென்றும் குறிப்பிடப்பட்டது. எது எவ்வாறிருப்பினும் இந்த விஷமக் கடிதத்தின் முக்கியமான நோக்கங்கள் இரண்டு.
ஒன்று, நீதி அமைச்சரின் பதவிக்கு ஆப்புவைப்பது. இரண்டு, முஸ்லிம் மக்களிடையே மதப்பிளவை வளர்த்துக் கலவரங்களை உண்டுபண்ணி அந்தக் கலவரங்களை ஆதாரமாக வைத்து ராஜபக்ச ஆட்சியை பலப்படுத்துவது. முதலாவதை நோக்கும்போது அலி சப்ரியை நாடாளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைத்து அவரை நீதி அமைச்சராக ஜனாதிபதி நியமித்ததையும் அதனால் பௌத்த பேரினவாதிகள் கொதிப்படைந்ததையும் நாடே அறியும். அந்தக்கொதிப்பு ஓரளவு அமைதியடைந்திருந்த நிலையில் நமது நாரத தேரர் ஒரே நாடு ஒரே சட்டச் செயலணியின் தலைவராகிய பின்னர் ஜனாதிபதிக்கு விடுத்த முக்கிய ஒரு வேண்டுகோள் அலிசப்ரியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்பதாகும். அதற்கு அவர் முன்வைத்த காரணம் அலிசப்ரி அமைச்சராய் இருக்கும் வரை ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நீதியான ஒரு முடிவு கிடைக்காது என்பதே. ஆனாலும் ஜனாதிபதி தேரரின் வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில் மேற்கூறிய கடிதம் மீண்டும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு விஷமத்தனமான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. இந்தக் கடிதத்துக்கு அமைச்சரின் பதிலை சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
இந்தக் கடிதம் அமைச்சருக்கும் உலமா சபைக்குமிடையில் பிரச்சினையை உண்டாக்குவது மட்டுமல்லாமல் உலமா சபைக்கும் சூபிக்குழுக்களுக்கும் இடையிலான பிரச்சினைகளையும் விரிவாக்க முனைகிறது. இந்தப் பிரச்சினைகள் விரிவாகும்பட்சத்தில் நமது கலகப் பிரியர் யார்பக்கம் நின்று முஸ்லிம்களுக்குள்ளேயே ஒரு கலகத்துக்குத் தூபம் போடுவார் என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை. அவ்வாறான ஒரு கலகத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அது பொது மக்களிடையே இன்று மதிப்பிழந்து செல்லும் இவ்வரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். எவ்வாறு?
முஸ்லிம் இனத்துக்கெதிரான ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களை பலிக்கடாவாக்கி பேரினவாத ஆட்சியைப் பலப்படுத்தும் ஓர் உபாயம் சில ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் முஸ்லிம்கள் இது வரை வழங்காதது பேரினவாதிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அதற்காக முஸ்லிம் சமூகத்தைப் பாராட்ட வேண்டும். இந்த நிலையிலேதான் முஸ்லிம்களுக்குள்ளேயே பிளவினை ஏற்படுத்தி, அதனை கலவரமாக்கி, அந்தக்கலவரத்துக்கு தீவிரவாதம் என்ற வண்ணத்தையும் தீட்டி, அந்தத் தீவிரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்துள்ளது என்ற சாட்டில் இராணுவ பலத்துடன் பேரினவாத ஆட்சியை தொடர்ந்து நீடிக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே ஞானசாரரின் திருவிளையாடலைக் கருதவேண்டும். இந்த நாடகம் அரங்கேறுவதற்கு முஸ்லிம்கள் எந்த வகையிலும் காரணமாக இருக்கக்கூடாது என்பதே வாசகர்களிடம் இக்கட்டுரை முன்வைக்கும் வேண்டுகோள்.
இன்னுமொரு கவலைக்குரிய விடயத்தையும் குறிப்பட வேண்டியுள்ளது. அதாவது இந்தத் திருவிளையாடலின் மத்தியிலாவது இலங்கையின் தற்போதைய முஸ்லிம் தலைமைத்துவத்துக்குள் இந்த நாரத முனிவருக்கு நயம்பட உரைக்க ஒரு நா இல்லையே என்பது வேதனை அளிக்கிறது. உண்மையை துணிந்து உரைக்க ஏன் இந்தத் தலைமை தயங்குகிறதோ? ஆனாலும் இதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் சமூகமே ஏற்கவேண்டும். ஏனென்றால் அவர்களைத் தலைவர்களாக்கியது சமூகம்தானே? ஆகவே, அடுத்த சந்தர்ப்பம் வரும்போது வெறும் பச்சோந்திகளையும் ஆஷாடபூதிகளையும் தலைவர்களாகத் தெரிவு செய்யாமல் சமூகப்பற்றும் நாட்டுப்பற்றும் அறிவாற்றலும்கொண்ட தலைவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டலை இன்றுள்ள புத்திஜீவிகளே பொறுப்பேற்க வேண்டும்.-Vidivelli
கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
விடிவெள்ளி பத்திரிகை – Page 11 27/1/2022