சுமார் 130 வருடகால வரலாற்றுப் புகழ் மிக்க முஸ்லிம்க மரபுரிமைகளில் ஒன்றான அக்குறணை கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் வஹாபிஸ கொள்கைகளுடைய தீவிரவாத குழுக்களால் சிதைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடம் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமாத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.எல்.அஹமட் ரிஸி கடந்த 26 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சூபி முஸ்லிம்கள் ஸியாரங்களை கௌரவப்படுத்துகிறார்கள். ஆனால் வஹாபிஸ கொள்கைகளைக் கொண்ட தீவிரவாதிகள் ஸியாரங்களை கண்டிக்கிறார்கள். பாரம்பரிய முஸ்லிம்களின் இந்த வழிபாடுகளை வாய்மொழி மூலம், மற்றும் இலக்கியரீதியில் எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடம் கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் சிதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு முறையிட்டதையடுத்து பொலிஸ்மா அதிபர் அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளதாக டாக்டர் எ.எல்.அஹமட் ரிஸி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் அக்குறணை பெரிய பள்ளிவாசல் வளாகத்தினுள்ளே அமைந்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் மொஹமட் ராபியை தொடர்பு கொண்டு விடிவெள்ளி வினவியபோது ‘குறிப்பிட்ட ஸியாரம் உடைக்கப்படவில்லை’ சிதைக்கப்படவுமில்லை ஸியாரம் சிதைக்கப்பட்டதாக பொய் வதந்தியே பரப்பப்பட்டுள்ளது. எமது பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர் பீடத்தின் பொதுச் செயலாளர் அஹமட் ரிஸி, கசாவத்தை ஆலிம் அப்பா பற்றி கருத்துத் தெரிவிக்கையில், கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் இன்று பல தசாப்தங்களுக்கு முன்பு ஒரு கட்டிடத்துக்குள் அமைந்திருந்தது. அக்கட்டிடத்தின் கூரை மற்றும் யன்னல்கள் 1996 ஆம் ஆண்டு ஒரு குழுவினரால் உடைக்கப்பட்டதையடுத்து ஸியாரம் மாத்திரமே எஞ்சியது.
கசாவத்தை ஆலிம் அப்பா மக்காவில் ஷேகுல் உலமா என்ற பட்டம் பெற்றவர். இவரது சரியான பெயர் அஹ்மத் இப்னு முஹம்மத் என்பதாகும். இலங்கையில் முதலாவது மத்ரஸா இவராலேயே உருவாக்கப்பட்டது. இவர் அறிஞர் சித்தி லெப்பையின் ஆசிரியராவார். அக்குறணை பெரிய பள்ளி வாசலைக் கட்ட உதவி செய்தவரும் இவரே. கடந்த 26ஆம் திகதி இவரது ஸியாரம் சிதைக்கப்பட்டுள்ளமை சிலரால் இனங் காணப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாம் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டோம் என்றார்.
அக்குறணை பிரதேச சபைத் தலைவர்
அக்குறணை பெரிய பள்ளிவாசல்வளாகம், மையவாடி என்பன காலத்துக்குக் காலம் துப்புரவு செய்யப்படுவது வழக்கமாகும். பள்ளிவாசலின் நாலா பக்கமும் மையவாடி அமைந்துள்ளது. ‘கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரத்தை சிதைக்கவேண்டும் என்ற தேவை எவருக்கும் இல்லை. வேண்டுமென்றே ஸியாரம் ஒரு போதும் சிதைக்கப்பட மாட்டாது என அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.
எம்.எச்.அப்துல் ஹலீம் எம்.பி.
இவ்விவகாரம் தொடர்பில் முன்ளாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ.ஹலீம் கருத்து வெளியிடுகையில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய கசாவத்த ஆலிம் அப்பாவின் ஸியாரம் பாதுகாக்கப்படவேண்டும். ஸியாரம் அமைந்துள்ள பகுதி துப்புரவு செய்யப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை, சூபி தரீக்காக்களின் உயர் பீடம் மற்றும் பொலிஸார் அடங்கிய கலந்து ரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் ரமீம்
ஸியாரம் அடங்கியுள்ள அக்குறணை பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவர் பீ.எ.சி.எம்.ரமீம் விடிவெள்ளிக்கு இவ் விவகாரம் தொடர்பில் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.
‘அக்குறணை பெரிய பள்ளிவாசலின் நிர்வாக சபைத்தலைவராக 2001-2010 வரை நான் கடமையாற்றியுள்ளேன். எனது பதவிக் காலத்தில் பள்ளிவாசல் முழுமையாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. ஸியாரத்தை உடைத்து அகற்ற வேண்டுமென்றால் அப்போதே செய்திருக்கலாம். ஆனால் ஸியாரம் பாதுகாக்கப்பட்டது. கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் அமைந்துள்ள பகுதியில் அன்றிலிருந்து இன்றுவரை ஜனாஸா கூட அடக்கம் செய்யப்படுவதில்லை. ஏனைய பகுதிகளிலே ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. எனது பதவிக்காலத்தில் இருந்தது போன்றே தொடர்ந்தும் ஸியாரம் இருக்கிறது.
1996 ஆம் ஆண்டிலே ஒரு பாரிய குழுவினரால் ஸியாரம் அமைந்துள்ள இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடம் உடைக்கப்பட்டது. அதன்பின்பு எந்த சம்பவங்களும் இடம்பெற வில்லை. ஸியாரம் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் வருகை தந்து பார்வையிட்டனர். அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என அவர்கள் உறுதி செய்தனர்.
சூபி தரீக்காக்களின் நிர்வாக உறுப்பினர் ரியாஸ் சாலி
சூபி தரீக்காக்களின் நிர்வாக உறுப்பினர் ரியாஸ் சாலி இவ்விவகாரம் தொடர்பில் பின் வருமாறு கருத்து வெளியிட்டார்.
ஸியாரங்கள் எமது வரலாற்று தொல்பொருட்களாகும். இதனுள் ஒரு வரலாறு உள்ளது. நாட்டின் பல இடங்களில் ஸியாரங்கள் உடைக்கப்படுகின்றன.இன்றேல் மூடப்படுகின்றன. வஹாபிஸ கொள்கைகளைக் கொண்ட குழுக்கள் இவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ‘ஸியாரங்கள்’ உடைக்கப்படக் கூடாது என அறிக்கை விட வேண்டும்.
கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் உடைக்கப்பட்டுள்ளது. அதனை பள்ளி வாசல் நிர்வாகம் முழுமையாக மீள நிர்மாணித்துத் தரவேண்டும். ஸியாரங்களுக்காக அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடம் தொடர்ந்தும் குரல் கொடுக்கும். ஸியாரங்களைப் பாதுகாக்கும் என்றார்.
ஸியாரத்தை புனர் நிர்மாணிக்குமாறு கோரிக்கை
கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரத்தை புனர் நிர்மாணம் செய்து தருமாறு 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வக்பு சபையிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.
கசாவத்தை ஆலிம் அப்பாவை நேசிக்கும் அக்குறணையைச் சேர்ந்த குழுவினர் இந்தக் கோரிக்கையை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலிம்தீனிடம் முன்வைத் திருந்தனர். ஆனால் வக்பு சபையினால் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வக்பு சபையின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1996 ஆம் ஆண்டு ஆலிமின் ஸியாரம் ஒரு குழுவினரால் சிதைக்கப்பட்டுள்ளது. வஹாபிஸ் கொள்கைவாதிகளே இந்தச் செயலை புரிந்துள்ளனர். நூற்றாண்டு காலமாக இந்த ஸியாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களால் தரிசிக்கப்படுகிறது. இது வரலாற்றுப்புகழ் பெற்ற ஸியாரமாகும். எனவே இந்த ஸியாரத்தை புனர்நிர்மாணம் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு ஸியாரம் உடைக்கப்பட்டு பலதசாப்தங்கள் கடந்தும் புனரமைக்கப்படாதிருந்தமை கவலைக்குரியதாகும். இவ்வாறான ஸியாரங்கள் வரலாற்றினைப் போதிப்பனவாகும். எதிர்கால சந்ததியினர் வரலாற்றினை நினைவு கூர்வதற்காக பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அத்தோடு அக்குறணை பெரியபள்ளிவாசல் இந்த ஸியாரம் தொடர்பில் ஏனோதானோ என்றிருப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஸியாரத்தை காடு ஆட்கொள்வதற்கு இடமளிக்கின்றமை கவலைக்குரிய தாகும்.
ஒற்றுமைப் படவேண்டும்
முஸ்லிம்கள் கொள்கைரீதியில் பிளவு பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும். முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில் ஒன்றுபடுவது அவசியமாகும். ஸியாரங்கள் தொடர்பான விடயங்களிலும் அவற்றைப் பாதுகாக்க முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். ஸியாரங்களே எமது வரலாற்றுசான்றுகளாகும்.
ஏ.ஆர்.ஏ.பரீல் (விடிவெள்ளி பத்திரிகை Page 05)