வெள்ளவத்தை வர்த்தகருக்கு இன்றுவரை தடுப்பு
சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு, பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி கடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவு 4 இன் பொறுப்பதிகாரி இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (31) நாட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை இன்று மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல உத்தரவிட்டிருந்தார்.
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சிஐடிக்கு முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நூரா மல்டி ட்ரேடர்ஸ் எனும் நிறுவனம் ஊடாக, பேரீச்சம் பழம், தங்க ஆபரணங்கள் பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில், இலங்கையிலிருந்த 12 இலட்சத்து 65 ஆயிரத்து 882 அமரிக்க டொலர்களை ( இலங்கை பெறுமதியில் 25 கோடியே 82 இலட்சத்து 39 ஆயிரத்து 928 ரூபா) அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக சிஐடியினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளில், இவ்வாறு டொலர்களை அனுப்பியபோதும் அதற்கான பெறுமதியில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிய வந்ததாகவும், அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சிஐடியின் சட்டவிரோத சொத்து தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர். இந்நிலையிலேயே 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில், வெள்ளவத்தையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர்களான மொஹம்மட் அனீப் மொஹம்மட் ஆசிப், மொஹம்மட் நஸார் ஆகிய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அதனால் அந்த சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறும் சிஐடியினர் மன்றில் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி கோரினர்.
இதனை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல சந்தேக நபர்கள் இருவரினதும் வெளிநாட்டு பயணத்தை தடை செய்ய உத்தரவிட்டதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடியின் சட்டவிரோத சொத்து க்கள் குறித்த விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே மொஹம்மட் அனீப் மொஹம்மட் ஆசிப் எனும் வர்த்தகர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது, விமான நிலையத்தில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
– தினகரன் – (2022-02-03)