ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போது எமது நாட்டில் சகல இனத்தவர்களும் மதத்தவர்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளமைக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையிலான மனிதநேய வழிகாட்டுதல்களே காரணமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
அங்குரங்கெத்த, மாதன்வல ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் நேற்று (18) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
வரலாற்று ரீதியான பல சிறப்புக்களைக் கொண்ட மாதன்வல ரஜமகா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டார்.
அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரின் தலைமையில் இந்த புண்ணிய நிகழ்வு இடம்பெற்றதுடன், மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கர் வண.திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பக்தர்களும் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்களின் வருகையை முன்னிட்டு விகாராதிபதி சாஸ்ரபதி வண. வெல்லகிரியே சுமங்கல நாயக்க தேரர் மற்றும் விகாரையின் நன்கொடை சபையினரால் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட நினைவுப் பரிசினை அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண. வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.(அ)
http://www.dailyceylon.com/184816/