காதி நீதிமன்ற அமர்வுகளை நேரில் வந்து கண்காணிக்குமாறும் அதன் பின்பு இந்நீதிமன்றங்கள் பற்றி “ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறும் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தான் கடமையாற்றும் காதிநீதிமன்றுக்கு நேரில் வந்து அமர்வுகளை கண்காணிப்புச் செய்யுங்கள் என இலங்கை காதி நீதிவான்கள் போரத்தின் உபதலைவரும் இரத்தினபுரி மாவட்ட காதிநீதிவானும் அவிசாவளை மற்றும் பதுளை காதிநீதிமன்றங்களின் பதில் காதிநீதிவானுமாகிய எம்.இப்ஹாம் யெஹ்யா ஞானசார தேரருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைமைக்காரியாலய விலாசத்திற்கு ஞானசார தேரருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்நாட்டின் முஸ்லிம்கள் 1806 முதல் தனியார் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு வருகின்றார்கள். இந்தச் சட்டத்தை, இந்த உரிமையை முஸ்லிம்கள் தொடர்ந்தும் அனுபவிப்பதற்கு தாங்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை நீங்கள் முழுமையாக ஆழமாக படித்தறிந்தால் அதில் உள்ளடங்கியுள்ள அநேகமான சட்ட ஏற்பாடுகள் அனைத்து இன மக்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.
காதிநீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் ஏனைய நீதிமன்றங்களுக்குப் போல் நீதிச் சேவை ஆணைக்குழுவினாலே நியமிக்கப்படுகிறார்கள். எந்த நீதி மன்றங்களையோ, நீதிபதிகளையோ அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
நீங்கள் எனது நீதிமன்ற அமர்வொன்றுக்கு வருகை தந்து நேரில் அமர்வினை அவதானித்தால் நீங்கள் உண்மையினைப் புரிந்து கொள்வீர்கள். இங்கு விண்ணப்பதாரிகள் மற்றும் பிரதிவாதிகளுக்கு அவர்களுக்கு இலகுவான வகையில் சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. காதிநீதிபதிகள் சம்பளமின்றி சிறிய கொடுப்பனவொன்றினைப் பெற்றுக்கொண்டே இப்பாரிய சேவையைச் செய்கிறார்கள்.
காதிநீதிமன்ற அமர்வினைக் கண்காணித்ததன் பின்பு, இந்த முறைமையை இல்லாமற் செய்யாது ஏற்கனவே நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-01-31