கட்டட நிர்மாணத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு யூசுப் முப்தி வேண்டுகோள்.

பேராதனை வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைக் கூட, கட்டட நிர்மாணத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு, ஸம் ஸம் பவுண்டேஷனின் ஸ்த்தாபகர் யூசுப் முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாம் பிறந்தது முதல், இறக்கும் வரை,  நமது தேசம் நமக்காக பல பணிகளை ஆற்றியுள்ளது. 

கல்வி, மருத்துவம் என அது நீணடு செல்கிறது. எனினும் எமது தேசத்திற்காக, நாம் என்ன செய்துள்ளோம் என, எமது நெஞ்சில் கைவைத்து கேட்டால் அதற்கான பதில் சங்கடம் மிக்கதாகவே அமையும்.

அந்த வகையில், எமது தேசம், எமக்கு வழங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் நேரம் வந்துள்ளதாக நாம் உணருகிறோம். 

குறிப்பாக கண்டி – பேராதனை  வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைக் கூட, கட்டடத்தை பூர்த்தி செய்து கொடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். 

இதற்காக 70 மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. 12000 சதுர அடிப் பரப்பில் இது அமையப் பெறவுள்ளது.

இறைவனின் உதவியோடு, இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்போடு இத்திட்டம் நிறைவேற வேண்டுமென்பது எமது பேரவா ஆகும்.

இதுகால வரைக்கும் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள எமது தாய்மார், சகோதர சகோதரிகளை நினைத்துப் பார்ப்போம். அவர்கள் சகலரும் இலவசமாகவே சிகிச்சை பெற்றனர். கண்டி முஸ்லிம்கள் மாத்திரம் இங்கு சிகிச்சை பெறவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே எமது தாய்நாட்டின் ஒவ்வொரு முஸ்லிம் குடிமகனும், எமது தேசத்திற்காக நாம் செய்யும் சிறு பங்களிப்பாக இதனைக் கருதி, தம்மால் முடிந்த நிதியுதவிகளை வழங்கினால், இந்த 70 மில்லியன் ரூபாய்களையும் திரட்டுவது என்பது நமக்கு மிக இலகுவாகிவிடும்.

ஆகவே இந்த உயர் பணிக்கு இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஒவ்வொரு  முஸ்லிமும் தம்மால் இயன்ற, நிதி உதவிகளை தந்து உதவுமாறு அன்புடனும், தாழ்மையுடனும் வேண்டுகிறேன்.

எமது தேசத்தில் முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் செய்த நாசகாரச் செயலினால், ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களினதும் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனை சரி படுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பாகக்கூட இதனைக் கருதலாம்.

இருதய சத்திர சிகிச்சைக்காக 3 வருடங்கள் கூட காத்திருக்கும் நிலை, எமது நாட்டில் காணப்படுகிறது. இந்த  சத்திர சிகிச்சைக் கூட கட்டட நிர்மாணத்தை செய்வதற்கு நாம் பங்களித்தால், அது ஒரு மனிதனை வாழவைத்த, ஒரு நோயாளியை குணப்படுத்திய பெரும் நண்மைகளைக்கூட எமக்கு பெற்றுத்தரும்

எனவே இந்த இந்த வேண்டுகோளை ஒவ்வொரு முஸ்லிமும் தமக்கு விடுக்கப்பட்டதாக கருதி, தமது பங்களிப்பை செய்வதுடன், இந்தத் தகவலை மற்றயவர்களுக்கு எத்திவைத்து, அவர்களையும் இதன் பங்காளராக உதவுமாறு உருக்கத்துடன் உங்களை கோரி நிற்கிறேன்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter