கட்டுப்பாடுகளை அகற்றல்: கடுமையான ஆபத்தான கட்டாயம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தை எட்டிவிட்டது. ஆனால், தொற்றாளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதைவிட, முக்கியமான விடயம் என்னவென்றால், தொற்று ஏற்பட்டோரில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர், கடற்படைச் சிப்பாய்க்களும் அவர்களது குடும்பத்தினர்களுமாக இருப்பதே ஆகும். ஆயினும், நாடு திருப்தியடைய வேண்டிய விடயம் என்னவென்றால், கடந்த இரண்டு வாரங்களாக, கடற்படையினரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த சிலரும் தவிர்ந்த, நாட்டில் எவரும் தோற்றுக்கு உள்ளாகாமையாகும்.

தொற்று ஏற்பட்ட கடற்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கை, 500ஐக் கடந்த போதிலும், அதைப்பற்றி எவரும் அலட்டிக் கொள்வதாக இல்லை. 

மார்ச் மாத இறுதியில், அட்டுளுகம, பேருவளை, அக்குறணை போன்ற சில பகுதிகளில், சில முஸ்லிம் குடும்பங்களில், நான்கைந்து பேர் வீதம், தொற்றுக்கு ஆளான போது, சில ஊடகங்கள் அதைத் தமது இனவாதப் பிரசாரத்துக்காகப் பாவித்தன. 

முஸ்லிம்களே கொரோனா வைரஸை நாட்டில் பரப்புவதைப் போல்தான், அப்போது அவ்வூடகங்களின் பிரசாரங்கள் அமைந்தன. ஆனால், இப்போது இவ்வளவு பாரியளவில் கடற்படையினர் மத்தியில், நோய் பரவியிருந்தும் அந்த ஊடகங்கள், அதைப் பெரிதாகக் கருதுவதில்லை. 

உண்மையிலேயே, எவர் மத்தியிலும் இந்த நோய் பரவலாம். எவரும், இந்த விடயத்தில் பக்குவம் தவறிச் செயற்படக் கூடும். எனவே, இந்த விடயத்தில் எந்தவொரு சமூகத்தையும் குறைகூற முற்படுவது, பொருத்தமானதல்ல என்பதையே, கடற்படையினர் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த விடயத்தைப் பாவித்து, இனவாதம் பேச முடியாது.

உலகளாவிய ரீதியிலும், அதுதான் உண்மை. ஆரம்பத்தில், சீனாவில் கொவிட்-19 நோய், முதன் முதலாகப் பரவியபோது, பல அயல் நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பலர், சீனர்களை இகழ்ந்தும் பரிகசித்தும், கருத்து வெளியிட்டு இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கொரோனா வைரஸை ‘சைனா வைரஸ்’ என அழைத்துக் கிண்டலடித்தார். ஆனால், இப்போது அமெரிக்கா, நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. அந்நாட்டில், நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது சீனாவில் வைரஸ் தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகமாகிவிட்டது. 

கடந்த இரு வாரங்களில், கடற்படையினர் மத்தியிலும், தனிமைப்படுத்தல் மய்யங்களிலும் மட்டும்தான், புதிதாக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்றால், நாட்டிலிருந்து வைரஸ் அகற்றப்பட்டுவிட்டது என்று, ஓரளவுக்கு நம்பலாம். அந்த அடிப்படையிலேயே, கொவிட்-19 காரணமாக, நாட்டு மக்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடைகளையும் கட்டுப்பாடுகளையும் நீக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி, முழு நாளும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்த கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில், புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில், பகல் நேர ஊரடங்குச் சட்டம், கடந்த 11ஆம் திகதி நீக்கப்பட்டது. இப்போது, இம் மாவட்டங்களிலும், வாரநாள்களில் இரவு எட்டு மணி முதல், அதிகாலை ஐந்து மணி வரை மட்டுமே, ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் அடையாள அட்டையின் இலக்கத்தின் அடிப்படையில், ஒரு நாளில் குடும்பத்தில் ஒருவர் வெளியே சென்று, அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்யும் முறையொன்று, அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களிலும் 11ஆம் திகதி முதல், கடைகள், அலுவலகங்கள் திறந்து இருக்கின்றன. ஆரம்பத்தில், பஸ்களிலும் ரயில்களிலும் இரண்டு ஆசனங்களுக்கு ஒருவர் வீதம், பயணிகளை ஏற்ற வேண்டும் என்று, போக்குவரத்து அமைச்சு ஆலோசனை வழங்கியது. 

இந்தநிலையில், அரச, தனியார் நிறுவனங்கள், பூரணமாக இயங்க முடியாதிருக்கின்றன. கொவிட்-19 பரவ முன்னர், காலையில் ஊழியர்கள் பஸ்களிலும் ரயில்களிலும் யன்னல்களில்கூடத் தொற்றிக் கொண்டே, கொழும்பு போன்ற நகரங்களுக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும், இப்போது போக்குவரத்து வசதி வழங்க முடியாததன் காரணமாகவே, அலுவலகங்கள் பூரணமாக இயங்க முடியாதுள்ளது.

வைரஸ் அபாயம் காரணமாக, முடக்கப்பட்டு இருந்த நாடுகளை, மீண்டும் திறந்து விடுவதாக இருந்தால், அந்நாடுகளில் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும் என்றும், நோய் மீண்டும் தலைதூக்கினால் அதை எதிர்கொள்ள முடியும் என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும், கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

கடந்த 11ஆம் திகதி, ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், அலுவலகங்களும் கடைகளும் திறக்கும் புதிய திட்டம், நடைமுறைக்கு வந்தபோது, வீதிகளில் காணப்பட்ட நிலைமைகளைப்  பற்றி, நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். பல இடங்களில், ‘சமூக இடைவெளி’யைப் பேணும் கோட்பாடு, காணப்படவில்லை என்றும், இது ஆபத்தான நிலைமையென்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். 

ஆனால், அரசாங்கம் வேறு விதமாகச் சிந்திப்பதாகவே தெரிகிறது. எனவே, பஸ்கள், ரயில்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகப் பிரயாணிகளை ஏற்ற, கடந்த 12ஆம் திகதி, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, அனுமதி வழங்கினார். சமூக விலகல் புறக்கணிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்தச் சமூக விலகல் கொள்கையைப் பின்பற்றுவதாக இருந்தால், வைரஸ் தொற்று, இலங்கையர்களுக்கு ஏற்பட ஆரம்பித்த, மார்ச் மாதத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு, நாடு விரைவில் திரும்பிவிட வேண்டும். அது, எப்போது முடியும் என்பதை, இப்போதே கூற முடியாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது.

ஆயினும், சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் காரணமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தை, நாடு எதிர்நோக்கி இருக்கிறது என்ற உண்மையையும் எவராலும் மறுக்க முடியாது. 

இலங்கை, பெரும்பாலும் வெளிநாட்டுக் கடன், உதவிகள் மீது தங்கியிருக்கும் நாடாகும். முதலாவது, உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளரைப் பற்றி அறிய முன்னரே, அரசாங்கம் நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தது. 

எனவே, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி, அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்த கடன் வரம்பை, 757 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க, நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தது. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்ததன் காரணமாக, அரசாங்கம் அந்தப் பிரேரணையை வாபஸ் பெற்றது.

ஏற்கெனவே, அரசாங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்திற்கொண்டு, வரிச் சலுகைகளை வழங்கி, பெருந்தொகை வருமானத்தை இழந்திருந்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து, 11 நாள்களில் அதாவது, கடந்த நவம்பர் 27ஆம் திகதியே, இந்த வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இவற்றால், அரசாங்கம் உடனடியாக இழக்கும் வருமானம் 650 பில்லியன் ரூபாய்க்கும் 680 பில்லியன் ரூபாய்க்;கும் இடைப்பட்ட தொகையாகும் என, மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன, கடந்த டிசெம்பர் மாதம், ஒன்பதாம் திகதி ‘DailyFT’ பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், ஆடை உற்பத்தித் தொழில் ஆகியனவே, இலங்கையின் முதலாவது, இரண்டாவது வருமான வழிகளாகும். கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக, இவ்விரு துறைகளின் மூலம் கிடைக்கும் வருமானமும் பாரியளவில் குறைந்துள்ளது. கொவிட்-19 நோய், உலக சந்தையில் எண்ணெய் விலை பாரியளவில் குறைந்தமை காரணமாக, இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 19 சதவீதத்தை இழக்க நேரிடும் என, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம், இலங்கை வெளிநாட்டுத் தொழில்கள் மூலம், 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆடை உற்பத்தித் தொழிலுக்கு, கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, இவ்வருடம் மார்ச், ஜூன் மாதங்கள் உள்ளிட்ட நான்கு மாதங்களில், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை, இலங்கை இழக்கும் என, ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தவிசாளர் ரெஹான் லெக்கானி கூறியதாக, அண்மையில் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. 

இந்தக் கஷ்டங்கள் காரணமாகத் தான், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, அரச ஊழியர்கள், தமது மே மாதச் சம்பளத்தை அல்லது, அதில் ஒரு பாகத்தை, அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என, ‘கோரிக்கை’ விடுத்துள்ளார். இதைப்பற்றி, அவர் கடந்த ஆறாம் திகதி, அரச திணைக்களங்களின் தலைவர்களுக்குக் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார். அவ்வாறு சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதன் மூலம், மக்கள் மீதான பழுவைக் குறைக்க முடியும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசாங்கத்தின் கோரிக்கையல்ல என்றும், ஜயசுந்தரவின் தனிப்பட்டக் கோரிக்கை என்றும் பின்னர், அமைச்சர் பந்துல குணவர்தன கூறியிருந்தார். ஆனால், இந்தக் கடிதம் திணைக்களத் தலைவர்களைச் சென்றடைந்த போது, அவர்கள் அதை ஒரு பணிப்புரையாகவே கவனிப்பர் என்பது, சகலருக்கும் தெரிந்த விடயம்.

அத்தோடு, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் தவணைகளை அறவிடுவதைக் குறிப்பிட்டதொரு காலத்துக்கு, தாமதப்படுத்துமாறு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, கடன் வழங்கும் நாடுகளுக்குப் பரிந்துரை செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியெசுஸிடம் கேட்டுள்ளார்.  

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி, இருவருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே, ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதான் நாட்டின் நிலைமை. எனவே, தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதித்து, தொழில்களை முடக்கிக் கொண்டு இருக்க, அரசாங்கத்தால் முடியாது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தத் துடிக்கிறது. நாட்டில் கொவிட்-19 நோய் பரவ ஆரம்பித்ததை அடுத்து, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய பின்னரும், அரசாங்கம் மார்ச் மாத நடுப் பகுதியில் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகளை நிறுத்த விரும்பவில்லை. பலத்த எதிர்ப்பின் காரணமாகவே, பின்னர் அரசாங்கம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கியது. அதனால், இப்போது விடுமுறை நாள்களில் ஏற்கப்பட்ட வேட்பு மனுக்கள், செல்லுபடியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொது மக்களும் கொரோனா வைரஸ் காரணமாக வழங்கப்பட்ட விடுமுறைகள், விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஆகியவற்றால், இப்போது அமைதி இழந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் இப்போது, சுதந்திரம் அவசியமாகியுள்ளது. இந்த நிலையில் தான், அரசாங்கம் படிப்படியாக, முடக்கிய நாட்டைத் திறந்துவிட முயல்கிறது.

ஆனால், இது ஒருவகையில், மிகவும் ஆபத்தான விடயமாகும். நோயைத் துடைத்தெறிந்த சீனாவில், மீண்டும் சிறிதளவில் நோய் தலைதூக்கி வருவதாகத் தெரிகிறது. ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் கட்டுப்பாடுகளை அகற்றிய பின்னர், தொற்று சிறிதளவு அதிகரித்துள்ளது. 

இலங்கை, தற்போது வெற்றிகரமாக நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், அபாயம் நீங்கியதாகச் சுகாதார அதிகாரிகள் இன்னமும் கருதவில்லை. 

தற்போதைய நிலைமையைக் காட்டி, அரசியல்வாதிகள் மார்தட்டிக் கொண்டாலும், ஆயிரக் கணக்கில் நோயாளர்கள் உருவாகும் நிலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வது இலங்கைக்கு பெரும் சவாலாகவே அமையும். 

எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கூறுவதைப் போல், கட்டுப்பாடுகளை அகற்றுவதானது, கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும்.   

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter