அனைத்து வரிகளையும் நிதி அமைச்சு அறவிடுவது ஏன்? ரணில் கேள்வி 

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக  சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா ? அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழிமுறைகள் உள்ளதா? இந்த இரண்டில் ஒரு தீர்வை நிதிஅமைச்சர் மற்றும் அரசாங்கம் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தாக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 20 ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார், இதன்போது அவர் கூறுகையில்,

கடந்த 34 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வுகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளனர். 

ஆனால் வெறுமனே வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினையை மட்டுமே அவர் சுட்டிக்காட்டினார். 

1000 பில்லியன் ரூபா வருவாய் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாட்டில் எவ்வாறு அதற்கான நிதியை தேடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.  

ஜீ.எஸ்.டி மற்றும் வற் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஒரே பொருட்கள் சேவைகள் மீது அறவிடுகின்றனர். ஏதாவது ஒன்றையே அறவிட வேண்டும். 

அதேவேளை அனைத்து வரிகளையும் அரச வருமான வரி திணைக்களமே அறவிட வேண்டும். ஆனால் இப்போது நிதி அமைச்சு அதனை அறவிடுவது ஏன்? நிதி அமைச்சிற்கு இருக்கும் அதிகாரம் என்ன? எனவே இதில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சுமையை முச்சக்கரவண்டி சாரதிகள்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், குறைந்த வருமானம் உடையவர்களே இதனால் அதிக சுமை ஏற்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் இதனால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.  

அரச கடனை பார்த்தால் 2019 ஆம் ஆண்டில் 13,000 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அது 17,000 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

இதேவேளை அந்நிய செலாவணி மூலம் கடனுக்காக எதிர்வரும் 6 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 6 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. 

பல வருடங்களாக இருந்த முறைமைகளை நீக்கியமையால் டொலர் நெருக்கடிகள் ஏற்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு கொவிட் பரவலை காரணமாக கூற முடியாது. 

நாட்டின் கடன்களினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டது என ஜனாதிபதி கூறுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது, எமது பதிலும் அதற்கு பதில் கிடைக்காது. 

பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்த மக்களை மீண்டும் பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 100 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இன்னும் விழுவதா? அல்லது முன்னோக்கி செல்வதா? என்று சிந்தித்து திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் 

இளம் சமூகத்திற்கு நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும். அவர்களின் நம்பிக்கையை எமது செயற்பாடுகளினால் நாசமாக்கியுள்ளோம். 

புதிய சட்டகம் ஒன்றினை உருவாக்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கு பின்னர் தேர்தலுக்கு சென்று யாருக்கு இதில் அதிகளவுக்கு செயற்படுத்த முடியுமென்று பார்க்கலாம். இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு சகலரும் செயற்பட வேண்டும் என்றார். 

(ஆர்.யசி)வீரகேசரி– (2022-01-21)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter