இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் தலைவனுக்கோ கட்சிக்கோ இக்கட்டுரையாளர் ஆதரவாளரல்ல என்பதை ஆரம்பத்திலேயே கோடிட்டுக் காட்டியபின் இதில் சமர்ப்பிக்கப்படும் கருத்துகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைமட்டும் கருவாகக்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்பதும் தவிர்ப்பதும் வாசகரின் உரிமை.
பௌத்த சிங்கள பேரினவாதத்தின் நீண்டகால நோக்கத்தை தமிழினம் புரிந்துவைத்துள்ள அளவுக்கு முஸ்லிம்கள் புரிந்துள்ளார்களா என்பது சந்தேகம். பௌத்த சிங்கள பேரினவாதிகள் என்று குறிப்பிடும்போது அது சாதாரண சிங்கள மக்களையோ பௌத்த மக்களையோ குறிப்பிடவில்லை. உலகத்திலே எங்கேயாவது உளம்திறந்த சிநேகிதத்துடன் சகோதரர்போல் உறவாடுவதற்கு சிங்கள பௌத்தர்களைப்போன்ற இன்னோர் இனம் உண்டா என்பது சந்தேகம். அந்த அப்பாவி இனத்தின் மத்தியிலேதான் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் வாழ்ந்துள்ளனர் என்பதை நன்றியுடன் இங்கே பதிவுசெய்ய வேண்டும். ஆனால் அவர்களை மந்தைகளாகப் பாவித்து கட்டுக்கதைகளையும் புராணக்கதைகளையும் வரலாறென்று கூறிக்கொண்டு இந்த நாட்டைத் தனிச்சிங்கள பௌத்த நாடாக மாற்றி சிறுபான்மை இனங்களையெல்லாம் குற்றேவல் புரியும் அடிமைகளாக்கும் நோக்கில் ஆட்சிசெய்யத் துடிக்கும் கூட்டமொன்றையே சிங்கள பௌத்த பேரினவாதிகள் என்று இங்கே அழைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேரினவாதம் இன்றைய ராஜபக்ச ஆட்சியில் இமயத்தைத் தொட்டு நிற்கிறது.
பேரினவாதத்தின் நீண்டகாலத்திட்டம் 1948ல் இந்தியத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமாகி படிப்படியாக வளர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தின் பேராபத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் தமிழ் தலைவர்களே. அதற்கெதிரான அவர்களின் போராட்டம் சமஷ்டி அரசியல், தமிழ் மொழி, தமிழீழம், என்றவாறு பல வடிவங்களைப் பெற்று அவற்றால் எண்ணற்ற உயிர்களையும் உடமைகளையும் இழந்து இன்னும் தொடர்கிறது. இவர்களுடைய போராட்டத்தின் தத்துவத்தை விளங்குகின்ற திறமை முஸ்லிம் தலைவர்களிடையே இன்னுந்தான் வளரவில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அரசியலையே ஒரு வியாபாரமாகக் கருதிச் செயற்பட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு இனப்பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று என்பவையும் வெறும் கடைச்சரக்காகத் தோன்றியதில் வியப்பில்லை.
இவ்வாறு கூறுவதன்மூலம் தமிழ் தலைவர்கள் தவறிழைக்கவில்லை என்பது கருத்தல்ல. முஸ்லிம் தலைவர்கள் ஏன் தமிழரின் போராட்டங்களிற் கலந்துகொள்ளாது வேடிக்கை பார்க்கின்றனர் என்பதை புரிந்துகொண்டு முஸ்லிம் மக்களுக்கு எவ்வாறு உண்மையை உணர்த்தி அவர்களையும் தமது பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் தமிழ் தலைவர்களால் இதயசுத்தியுடன் மேற்கொள்ளப்படவில்லை. மேடைகளிலே தமிழ் பேசும் மக்களென்ற கூட்டுக்குள் முஸ்லிம்களை அடக்கிக்கொண்டு மேடையைவிட்டு இறங்கியபின் தமிழர்கள் என்று பேசிய தலைமைகளால் எவ்வாறு இரண்டு இனங்களையும் இணைக்க முடியும்? ஒரு சந்தர்ப்பத்தில் அன்றைய தமிழ் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் “முஸ்லிம்களை அவர்கள்பால் விட்டுவிடுங்கள்”, என்று சொன்னமை என் ஞாபகத்துக்கு வருகின்றது. இதைப்பற்றி இங்கே விபரிக்க விரும்பவில்லை. அது கட்டுரையை வேறு திசைக்குத் திருப்பிவிடும்.
எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தபின்னர் இறுதியாக இந்தியாவின் அழுத்தத்தால் 1987இல் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை நிர்வாகத்தை அமுலாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது நிறைவேற்றப்பட்ட 13ஆம் திருத்தத்துக்கு உயிர்கொடுக்கத் தமிழ் தலைமைகள் போராடிக் கொண்டிருக்கின்றன. அதை மோடி அரசும் வலியுறுத்துகின்றது. ஆனால் அந்தத் திருத்தத்தை முற்றாகக் குழிதோண்டிப் புதைக்க ஜனாதிபதி தலைமையில் பேரினவாதிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். தமிழ் கூட்டணியின் தலைமையில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவருடன் சேர்ந்து மலையகத் தமிழரின் தலைவரையும் இணைத்து இத்திருத்தம் சம்பந்தமாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து இந்திய அரசுக்கு ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க முடிவெடுத்தனர். இந்தத் திருத்தத்தின் ஒரு முக்கிய அம்சம் கிழக்கையும் வடக்கையும் இணைத்த ஒரு மாகாண சபையை உருவாக்குதலே. இதற்கெதிராக முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் போர்க்கொடி தூக்கியதால் தமது தலைமைக்கு ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்த முஸ்லிம் தலைவர் தயக்கமுறத் தொடங்கினார். இப்போது வெளியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்குவதாக ஒரு செய்தி கூறுகிறது. இது ஒரு பம்மாத்து. எனினும் அவர் இணங்கினாலும் இணங்காவிட்டாலும் தமிழ் தலைவர்கள் தமது முடிவை மாற்றுவதாக இல்லை. இந்தச் சூழலில் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபையா தனித்தனியே இரு மாகாண சபைகளா என்ற சர்ச்சை மீண்டும் முஸ்லிம்களிடையே தலைதூக்கி உள்ளது. இதற்குரிய விடையை பேரினவாதத்தின் எதிர்காலச் சுனாமியையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வியாபார அரசியலையும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும் தொடர்புறுத்தாமல் விளங்குவது கடினம்.
பேரினவாத்தின் ஒரே இலட்சியம் கிழக்கையும் வடக்கையும் ஏனைய மாகாணங்களைப்போன்று சிங்களப் பெரும்பான்மையாக்குவதே. பேரினவாதிகளைப் பொறுத்தவரை கிழக்கையும் வடக்கையும் சிங்கள மாகாணங்களாக மாற்றாமல் இலங்கையை ஒரு பௌத்த நாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை. வவுனியா, திருகோணமலை, கந்தளாய், அம்பாறை ஆகியபகுதிகள் அவ்வாறு மாற்றப்பட்டுவிட்டன அல்லது விரைவாக மாறிக்கொண்டு வருகின்றன. இப்பொழுது முல்லைத்தீவு மாவட்டமும் அவர்களின் குறியில் விழுந்துள்ளது. இராணுவத்தின் பாதுகாப்புடனும் கடும்போக்கு பிக்குகளின் ஆசீர்வாதத்துடனும் சிங்கள அத்துமீறல்கள் துரிதமாக நிறைவேறுகின்றன. ராஜபக்ச அரசு இதற்குப் பூரண ஆதரவு. இதனை முஸ்லிம்கள் முதலில் விளங்க வேண்டும்.
எனவே வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுடனும் இன விகிதாசார அடிப்படையில் வளங்களின் பங்கீட்டு அதிகாரத்துடனும் உருவாக்கப்படும் கிழக்கும் வடக்கும் இணைந்த ஒரு மாகாண சபை இவ்வாறான அத்துமீறல்களையும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் மட்டுப்படுத்த முடியும். இதனாலேதான் 13ஆம் திருத்தத்தை நீக்குவதற்கு அரசு முயல்கின்றது. இதற்கு ஒரு வழி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைப்பதே. அந்தச் சதிக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளது வியாபார அரசியல் நடத்தும் ஒரு முஸ்லிம் தலைமைத்துவம். அந்தத் தலைமையைக் கொண்டே முஸ்லிம்களின் எதிர்கால வளர்ச்சியை சிதறடிக்க பேரினவாதம் திட்டமிடுகின்றதை முஸ்லிம்கள் உணர்வார்கள?
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வளர்ந்துள்ள அரசியல் ரீதியான வேற்றுமைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டு வயதுண்டு. அதனையும் இங்கே விபரிக்கத் தேவையில்லை. ஆனால் 1980கள் தொடக்கம் விடுதலைப் புலிகளும் மற்றைய தமிழ் போராட்டக் குழுக்களும் இந்திய அமைதிப்படையும் இலங்கை இராணுவமும் நடத்திய திருவிளையாடல்களால் தமிழ் முஸ்லிம் பிளவு மிகவும் விரிவடையலாயிற்று. காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகள், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் ஆகியனவெல்லாம் முஸ்லிம்களால் மறக்கமுடியாத துயர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோன்று பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தில் முஸ்லிம்கள் சில தமிழ் கிராமங்களில் அரங்கேற்றிய கொலைகளையும் வன்செயல்களையும் தமிழ் மக்களால் மறக்க முடியுமா? ஆனால் இந்தத் துயர்களையே கட்டிப்பிடித்துக்கொண்டு வரப்போகும் ஒரு சுனாமிக்கு இரு இனங்களும் பலியாவதா என்பதே இன்றைய கேள்வி. முன்னர் ஏற்பட்ட காயங்களை மீண்டும் மீண்டும் கிளறிக்கொண்டிருந்தால் புண்கள் புரையோடி உயிரையே பறித்து விடும். இதனை கிழக்குமாகாணத் தமிழரும் முஸ்லிம்களும் உணரவேண்டும்.
கிழக்கிலங்கையில் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் ஆதரவில் சிங்களமக்கள் விரைவாகக் குடியேறுவதன் நீண்டகால விளைவை முதன்முதலாக உணர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அன்றைய எம். எஸ். காரியப்பர் என்ற உண்மை இன்றைய முஸ்லிம் தலைமைகளுக்குத் தெரியுமோ தெரியாது. அரசாங்கத்தின் கல்லோயா குடியேற்றத் திட்டத்தை முழுமையாக ஆதரித்த அவர் அதேவேளை முஸ்லிம்களையும் அங்கு குடியேற்றுவதற்கு அரும்பாடுபட்டார். ஆனால் எந்தவொரு முஸ்லிமும் அங்குபோய் குடியேறுவதற்கு அன்று முன்வரவில்லை. அதன் விளைவாக அம்பாறை தொகுதியே தனிச் சிங்களத் தொகுதியாக இப்போது மாறியுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல அம்பாறைகளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் வடக்கிலும் உருவாக்க பேரினவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை முஸ்லிம்கள் அவர்களின் வியாபார அரசியல் தலைவர்களை வைத்துக்கொண்டு தடுக்க முடியுமா? கிழக்கிலங்கை முஸ்லிம்கள் வாழ்வதற்கு நிலமில்லை என்று கூச்சல்போடுகின்ற இந்த அரசியல் தலைமைகள் தனித்து நின்று போராடி ஒரு ஏக்கர் நிலத்தையேனும் அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க முடியுமா? இதுவரை எதைத்தான் இவர்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?
ஒன்றுமட்டும் உண்மை. இப்போது இருப்பதையாவது முஸ்லிம்கள் காப்பாற்ற வேண்டுமென்றால் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபையினாலேதான் அது முடியும். கிழக்குமட்டும் ஒரு மாகாண சபையாக வருமானால் இருப்பதையும் இழக்கவேண்டி நேரிடும். அவ்வாறான ஒரு மாகாண சபையில் பேரினவாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளை விலைக்குவாங்கி தமிழரின் வளங்களை பறிப்பர். அதேபோன்று தமிழ் எட்டப்பர்களை விலைக்குவாங்கி முஸ்லிம்களின் வளங்களை குறைப்பர். அது ஈற்றில் குரங்கு அப்பம் பிரித்த கதையாக முடியும். முஸ்லிம்களின் இப்போதுள்ள மனோநிலை தமிழ் போராட்டக் குழுக்கள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை என்ற நிலையில் செயற்படுவதாக உணர முடிகிறது. இதன் நீண்டகால விளைவுகள் பாரதூரமானவையாக அமையும் என்பதை இக்கட்டுரை எச்சரிக்க விரும்புகிறது. கிழக்கிலே முஸ்லிம்கள் இப்போது வழுகின்ற பிரதேசங்களை ஆகாயவெளியில் நின்று படம்பிடித்தால் அவை ஒரு ஒடுங்கிய ஒழுங்கையாகவே தெரியும்.
கடற்கரையிலிருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்துக்குள்ளேதான் முஸ்லிம்களின் சிறு பட்டினங்கள் அமைந்துள்ளன. தனியான கிழக்கு மாகாணசபையில் இவை விரிவடைவது எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படியாயின் இன்னும் இருபது வருடங்களில் காத்தான்குடி, சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்ற முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பட்டினங்கள் பெரும் சேரிகளாகவே பரிணமிக்கும். அவைகளுக்கு மத்தியிலோ அருகாமையிலோ விகாரைகளும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றுபட்ட கிழக்கும் வடக்கும் இணந்த ஒரு மாகாணசபையில் இந்த ஆபத்து குறைவு. அதற்கேற்றவாறான உடன்பாடுகளுடன் முஸ்லிம்கள் தமிழருடன் இணைய வேண்டும்.
தமிழினத்தின் போராட்டத்தின் தத்துவங்களை முஸ்லிம்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. அதற்குக் காரணம் முஸ்லிம் தலைவர்களே. ஆனால் ஒன்று. இந்தக் கவலைகள் எதுவும் எழமாட்டா ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாப் பிரஜைகளையும் இலங்கை என்ற ஒரு குடும்பத்தின் பிள்ளைகளாக நினைத்து ஜனநாயக அடிப்படையில் அனைவரையும் சமமாக நடத்துமாக இருந்தால். அப்படியான எண்ணங்களுடன் சிங்கள மக்களிடையே தலைவர்கள் இன்று உருவாகியுள்ளனர். அவர்களின் கைகளையாவது பலப்படுத்த முஸ்லிம்கள் தயங்குவதேன்? அதைப்பற்றி இன்னுமொரு கட்டுரையில் விரைவில் அலசுவோம்.
கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
விடிவெள்ளி பத்திரிகை 2022-01-13