இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமானவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
1979 ஆம் ஆண்டு உலமா சபை வெளியிட்டதாக கூறப்படும் பத்வா ஒன்று தொடர்பில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணிக்கும் நீதியமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.
மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி, உலமா சபை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமானவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது. இதற்கமைவாகவே விரைவில் இச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உலமா சபை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமானவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
42 வருடங்களுக்கு முன்பாக அன்றைய ஜம்இய்யத்துல் உலமாவினால் விடுக்கப்பட்ட, சட்ட ரீதியாக பிழையான மார்க்க கருத்துரையொன்று தொடர்பில் நீதி அமைச்சருக்கு முறைப்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைகிறோம். ஒரு பொறுப்புள்ள கல்விமானாக, இவ்விடயத்தை மூன்றாம் தரப்புக்கு எடுத்துரைப்பதை விட, முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட, இலங்கையில் நன்கு அறிமுகமான நிறுவனமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் இது தொடர்பான தெளிவுகளை பெற்றிருக்கலாம்.
42 வருடங்களுக்கு முன்பு ‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சட்டத்துக்கு புறம்பான தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது’ என்ற உங்களது குற்றச்சாட்டு, திட்டவட்டமான பொய்யானதாகவும், பாரதூரமான விஷமம் நிறைந்ததும், முன்னைய காலத்தில் இலங்கை முஸ்லிம்களால் நன்கு மதிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூத்த, பிரபலமான அறிஞர்களை இழிவுபடுத்துவதாகவும் உள்ள கருத்தாக அமைந்துள்ளது.
பேராசிரியர் அவர்கள் தீய சக்திகளினால் வழிநடாத்தபடுவதிலிருந்து தன்னை காத்து, எம்முடன் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு அன்பாக அழைப்புவிடுக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடிவெள்ளி பத்திரிகை 2022-01-13