நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை கைமீறிச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைத் தோடாது மேலும் மேலும் நாட்டை சிக்கலுக்குள் தள்ளுகின்ற செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கிறோம் என்ற போர்வையில் வெளிநாடுகளிடமிருந்து தினம் தினம் அரசாங்கம் ஆயிரக் கணக்கான மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்று வருகிறது. அது மாத்திரமன்றி வெளிநாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கென்றே தனியான அமைச்சர் ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதாவது நாட்டின் கடன் சுமையை அதிகரிப்பதற்கென்றே ஒரு தனியான அமைச்சரை நியமிக்கின்ற ஒரே நாடு இலங்கையாகவே இருக்க முடியும்.
இன்று இந்த அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் அரபு நாடுகளிலேயே காண முடிகிறது. இதுவரை காலமும் அரபு நாடுகளை எதிரியாகக் காண்பித்து நாட்டில் அரசியல் செய்தவர்கள், இன்று அதே அரபு நாடுகளுக்குச் சென்று கடன் கேட்டு அலைவதன் மூலம் அவர்களது போலி வேஷம் கலைந்துள்ளது. நாட்டில் இனவாதத்தை வளர்த்தவர்கள் இன்று கட்டாருக்குச் சென்று தம்மையும் முஸ்லிம்கள் போன்று நடித்துக் கடன் கேட்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனையே எள்ளி நகையாடியுள்ளார்.
இந்த அரசாங்கம் வீட்டுக்குச் சென்றாலும் இந்த நாட்டில் வாழுகின்ற மக்களே இந்தப் பெருந்தொகை கடன்களை தலைமுறை தலைமுறையாக மீளச் செலுத்தப் போகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்ற நிலையில் அதனைத் தணிப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சில அதிரடி நிவாரணத் திட்டங்களை இரவோடிரவாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அரசாங்க ஊழியர்கள் சுமார் 14.5 இலட்சம் பேருக்கு மாதாந்தம் சம்பளத்திற்கு மேலதிகமாக 5000 ரூபா வழங்கப்படும் என்றும் ஓய்வூதியம் பெறும் 666,480 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவிற்கு மேலதிகமாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும் என்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக சமுர்த்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 3,500 ரூபா கொடுப்பனவிற்கு மேலதிகமாக 1,000 ரூபா வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த நிவாரணத் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும் இதற்கான நிதியை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதே இங்குள்ள கேள்வியாகும். நிதியமைச்சர் அறிவித்துள்ள இவ்வளவு நிவாரணங்களையும் வழங்குவதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது 229 பில்லியன் ரூபா பணம் தேவை. ஒன்றில் வெளிநாடுகளிடம் கடன்பெற்று இதனை வழங்க வேண்டும் அல்லது பணத்தை அச்சிட வேண்டும். இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தை அதிகரிப்பதுடன் டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியையும் வலுவிழக்கச் செய்யும் என பொருளாதார நிபுணர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
“தற்காலிக நிவாரணத்தை வழங்கி, நீண்ட கால அடிப்படையில் மக்களின் வாழ்வியலை நிலையற்றதாக்கும் முயற்சியே இது” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தின் வருமானம் மிக மிக குறைவான மட்டத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த தருணத்தில், இப்படியான ஒரு நிவாரண அறிவிப்பு பொருத்தமற்றது. சரிந்துகொண்டு செல்லும் தமது செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக பார்க்கக்கூடியதாக இது இருந்தாலும், இது நடைமுறைச் சாத்தியமற்ற முயற்சியாகும். காசு கிடைப்பதை எண்ணி மக்கள் சந்தோஷப்படலாம். ஆனால் பொருளாதாரம் என்று பார்க்கும் போது, அது மிக மோசமானதாக இருக்கும். ஒரு பில்லியன் டொலரை ஏதாவது ஒரு நாடு அன்பளிப்பாக வழங்குமாக இருந்தால், அதை இப்படிச் செலவிடுவது பரவாயில்லை. ஆனால், கடனைப் பெற்றோ அல்லது பணத்தை அச்சிட்டோ இவ்வாறான நிவாரணத்தை வழங்கும் போது அது எந்தவித பலனையும் ஏற்படுத்தாது” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் அரசாங்கத்தின் இந்த நகர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். “ 2019 இல் வரிகளைத் தள்ளுபடி செய்தமையும் உரப் பயன்பாட்டைத் தடை செய்தமையும் இந்த அரசாங்கம் எடுத்த மிகத் தவறான முடிவுகளாகும். இன்று அதன் விளைவுகளையே நாம் அதிகரிக்கிறோம். இந்த அரசாங்கம் பொருளாதார விடயத்தில் ஒட்டுமொத்த தோல்வியைச் சந்தித்துவிட்டது. அதிலிருந்து மீளவே முடியாது. நாடு பாரிய அனர்த்தம் ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஷ்டவசமாக, அரசாங்கம் இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளைவிடுத்து தொடர்ந்து தவறுக்கு மேல் தவறுகளையே இழைத்துக் கொண்டிருக்கிறது. அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலான அரசியல் தீர்மானங்களையும் தினம் தினம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது உள்ளக அரசியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்து முட்டி மோதிக் கொள்கின்ற நேரமல்ல. மாறாக சகலரும் இணைந்து நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றிச் சிந்தித்து செயற்படுவதற்கான நேரம். ஆனால் ஜனாதிபதியினதோ அல்லது அவரது சகோதரர்களினதோ தீர்மானங்களும் நடவடிக்கைகளும் நாட்டை மேலும் ஸ்திரமின்மையை நோக்கித் தள்ளுவதே கவலை தருவதாகும். (விடிவெள்ளி பத்திரிகை 2022-01-06)