மத்திய வங்கியில் 3.1 பில்லியன் அந்நிய செலாவணி இருப்பு காணப்படுமாயின் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஏன் டொலர்களை விடுவிக்காமலுள்ளது? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.
மேலும் புற்று நோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. என்னுடைய தாய் புற்று நோய்க்கு மருந்தின்றி உயிரிழந்ததைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் இலங்கையில் பதிவாகக் கூடாது. அதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரிசி விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விவசாயத்தினை சீரழித்தது மாத்திரமின்றி , அரிசி மாபியாக்களுக்கு ஆரம்பத்திலேயே இடமளிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
அரிசி விலை அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு மாபியாக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
2019 ஜனவரியின் பின்னர் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய பணவீக்கம் 12 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. முறையான நிதி நிர்வாகம் இல்லாமல் போனால் இது மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த நெருக்கடி திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அல்லது கொவிட் பரவலால் ஏற்பட்டதல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முட்டாள் தனமான தீர்மானங்களின் விளைவாகும்.
இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் , சுயாதீன பொருளாதார நிபுணர்களின் யோசனைகளையாவது அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.
வரையரையின்றி நாணயத்தாள்கள் அச்சிடப்படுகின்றமையே இந்த நெருக்கடிக்கான பிரதான காரணியாகும். இவ்வாறு நாணயத்தாள்கள் அச்சிடப்படுகின்மையால் பொருட்களின் விலை மாத்திமின்றி அவற்றுக்கு சமாந்தரமாக டொலரின் பெறுமதியும் அதிகரித்துச் செல்லும்.
எனவே நாணயத்தாள்களை அச்சிடுவதால் ஒருபோதும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கான சிறந்த வேலைத்திட்டங்கள் உள்ளன. விரைவில் நாட்டு மக்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவோம்.
சுயாதீன நிறுவனமாக அன்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நிர்வகிக்கப்படுகின்ற மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிடுவதை முதலில் கைவிட வேண்டும். அத்தோடு அரசியல் ரீதியாக அன்றி சுயாதீனமானதொரு நிறுவனமாகவும் செயற்பட வேண்டும்.
மத்திய வங்கி ஆளுனர் கூறுவதைப் போன்று நாட்டில் 3.1 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பு காணப்படுமாயின் துறைமுகங்களில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு ஏன் டொலர் வழங்கப்படாமலுள்ளது?
மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஏன் டொலர் வழங்கப்படாமலுள்ளது? நாட்டில் தற்போது புற்று நோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
எனது பிள்ளை பருவத்தில் புற்று நோய்க்கான மருந்து இன்றி என்னுடைய தாய் உயிரிழந்ததைப் போன்றதொரு நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்பட்டு விடக் கூடாது.
அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பொதுஜன பெரமுனவைப் போன்று நாம் ஒருபோதும் சதி செய்யப் போவதில்லை. அதற்கான தேவையும் எமக்கு கிடையாது. ஜனநாயக நாட்டை பாதுகாப்பதற்கு மக்களின் நம்பிக்கையுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.
(எம்.மனோசித்ரா) -வீரகேசரி- (2022-01-03 10:38:05)