கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை அதிகாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மக்களை வாழ்க்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டவாறு நாளை (11) திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலாகும் பகுதிகளில், பொதுமக்கள் வெளியே செல்வதற்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையான கொண்ட முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, அத்தியாவசிய தேவைக்காக வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு செல்ல அவசியமானவர்கள், குறித்த தினத்தில் செல்ல வேண்டியவர்கள் எந்த இலக்கங்களை உடையவர்கள் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாராந்த மற்றும் நாளாந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சனசமூக நிலையங்கள், சிற்றுண்டிசாலைகள் என்பனவற்றை நாளை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.