நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பதில் பிரதமராக நியமிக்கப்படுவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்புக்களால் தற்போது தேசிய அரசியல் பரபரப்படைந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைகளுக்காக ஒரு சில வாரங்களுக்கு வெளிநாடு செல்ல இருப்பதாவும் அதற்காகவே இந்த பதவிநிலை உருவாக்கப்படவுள்ளதாகவும் ராஜபக்ஷ தரப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஷில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஆளும் தரப்பில் உள்ள பஷில் அணியினரும். அவருக்கு சார்பாகச் செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாக உள்ளனர்.
அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலும் இந்த நியமனத்திற்கு எதிர்ப்புக்கள் ஏற்படவில்லையாம். வினைத்திறனான செயற்பாடுகளை மையப்படுத்தி கோட்டாபயவும் அதற்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்.
ஆனால், இவ்விதமான நியமனத்தினைச் செய்யமுடியாது என்று ஐனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ போர்க்கொடி தூக்கியுள்ளார். தனது போர்க்கொடிக்கு ‘அரசியலமைப்பில் பதில் பிரதமருக்கான சட்ட ஏற்பாடு இல்லை’ என்று சுட்டிக்காட்டி வாதிடுகின்றார்.
அதேநேரம், இந்த விடயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினரின் குடும்பத்தினர் மெளனமாகவே உள்ளனர். ஆனால் அவரது ஆதரவு அணியினர் மெல்ல வாய்திறக்க ஆரம்பித்துள்ளனர். அதில் முதலாம் நபர் முருத்தொட்டுவ ஆனந்த தேரர். அவர் மஹிந்தவை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு சதி நடைபெறுவதாக தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில் மீண்டும் அவ்விதமான கருத்தினை வெளியிட்டு செயற்பாட்டு அரசியலில் இருந்து மஹிந்த ஓய்வு பெறக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ தான், ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியில் இருப்பதற்கான ஆணி வேர் என்பதை அனைத்து ராஜபக்ஷவினரும் உணர்ந்துள்ளமையால் அவரை அரசியல் அரங்கிலிருந்து அகற்றும் எண்ணம் கிடையாது என்று ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க, பஷில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு மீண்டும் செல்லவுள்ளார். குஜாராத் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செல்லவுள்ளார். ஆனால் அவர் இந்தியாவுக்குச் செல்லும் காலத்தில் இலங்கையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங்யி தங்கியிருக்கவுள்ளார். இங்கு பஷில் எப்படி சீனாவையும், இந்தியாவையும் கையாளப்போகின்றார் என்பது தான் தற்போதைக்கு காணப்படும் நிலைவரம்.
ஜனாதிபதியின் கவலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை மதியபோசன விருந்துடன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது அவர் மிகவும் நட்புறவுடன் பத்திரிகை ஆசிரியர்களை அணுகியதுடன் இரண்டு மணிநேரத்திற்கு மேல் இதற்காக செலவிட்டிருந்தார்.
முற்பகல் 11.45 மணியளவில் சந்திப்பு ஆரம்பமாகி 1 மணி நேரம் வரையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்பின்னர் பத்திரிகை ஆசிரியர்களுடன் மதிய உணவு அருந்தியபடி அவர் ஒரு மணிநேரம் வரையில் அளவலாவிக்கொண்டிருந்தார்.
இதன்போது தனது அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக சந்தித்து வரும் சவால்கள் தொடர்பில் எடுத்துக்கூறிய அவர் அரசாங்கத்தின் அமைச்சர்கள், மற்றும் எம்.பிக்கள் மீதும் அதிருப்தியை தெரிவித்திருந்தார். அத்துடன் ஊடகங்களும் தனது செயற்பாடுகளுக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளையே ஒலி, ஒளி பரப்பி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார். கொரோனா தொற்று காரணமாகவே நாடு நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் எத்தகைய சவால்களை சந்தித்தும் நாட்டை முன்கொண்டு செல்ல தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஐந்து வருடங்களில் செய்வேன் என வாக்குறுதி வழங்கிய விடயங்களை அடுத்த மூன்று வருடங்களுக்குள் செய்து முடிப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாய செயற்கை உரத் தடை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தில் விவசாய அமைச்சு தன்னுடன் ஒத்துழைக்கவில்லை என்று சாரப்பட கருத்து கூறினார். அரசாங்க அமைச்சர்கள் எம்.பி.க்கள் தற்போதைய நிலை தொடர்பில் உரிய வகையில் மக்கள் மத்தியில் விளக்கங்களை அளிக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை ஊடகங்கள் விமர்சிக்கலாம் . ஆனால் கொவிட் காரணமாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தை விமர்சிப்பது எந்தவகையில் நியாயமானது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
தான் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே கொவிட் தொற்று ஏற்பட்டதனால் நிலைமை மாறி விட்டதாகவும் பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சி அமைத்த போதிலும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்றும் ஆனாலும் சவால்களை சந்தித்து அடுத்த மூன்று வருடங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனவும் அவர் கூறினார்.
யுகதனவி மின்சார திட்ட ஒப்பந்தம் தொடர்பிலும் அமைச்சர்கள் மூவர் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி வழங்கியுள்ளமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த அமைச்சர்கள் மூவரையும் பதவி விலக்கலாம் தானே என்றும் வினா தொடுக் கப்பட்டது.
இதன்போது அவர்கள் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறியமை தவறு என்று கூறிய ஜனாதிபதி அவர்களை பதவி விலக்கலாம் தானே என்று கேட்டபோது அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் விலக்கலாம் தான் என்று கூறி புன்னகைத்தார்.
ஜனாதிபதியாக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளையும் ஆசிரியர்களையும் ஒருதடவை ஜனாதிபதி சந்தித்திருந்தார். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பின்னரே தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை ஐனாதிபதி 27ஆம் திகதி சந்தித்ததுடன் நட்புறவைப் பேணி ஒத்துழைப்பையும் கோரியமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருப்பதி பயணத்தால் எழுந்துள்ள சாச்சைகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் அண்மையில் திருப்பதிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்ட இடைவெளியில் இவ்விதமான வழிபாடுகளில் ஈடுபடுவது வழமை. ஆனால் இம்முறை அவரின் திருப்பதி விஜயம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
மஹிந்த குடும்பத்தினர் இரத்மலானையிலிருந்தே திருப்பதிக்கு பிரத்தியேக விமானமொன்றில் சென்றிருந்தனர். அத்துடன் குறித்த விமானம் உகண்டாவிலிருந்தே இரத்மலானைக்கு வருகை தந்திருக்கின்றது. 17GSC எனப்படும் ஜெட் வகையைச் சேர்ந்த இந்த விமானமானது JetSetGo Aviation Services Private Limited என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இந்த விமானம் JetSetGo Aviation Services என்ற நிறுவனத்திடம் இருந்தே வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. குறித்த நிறுவனமானது பிரபல செல்வந்தர்கள் பிரத்தியேகமான பயணங்களை மேற்கொள்வதற்கு விமானங்களை வடகைக்கு வழங்கும் செயற்பாட்டை கொண்டிருக்கின்றது.
இந்த விமானத்தினை பிரதமரின் நெருங்கிய நண்பர் ஒருவரே வழங்கியதாக பிரதமரின் பணியாட்தொகுதியின் பிரதானியும், புதல்வருமான யோஷித்த ராஜபக்ஷ கூறியிருந்ததோடு அவருடைய பெயரை தான் அறியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறிருக்க, இந்த விமானம் இத்தாலியை அண்மித்துள்ள சென்மரினோ என்ற நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்மரினோ என்ற நாடானது, கறுப்பு பணதூய் தாக்கலுக்கு பெயர்போனது. அதுமட்டுமன்றி வரைமுறைகளின்றி சேமித்த பெருந்தொகையான பணம் இங்கு முதலிடப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன.
அண்மையில் இத்தாலிக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த இங்கு சென்று வந்திருக்கின்றமைக்கான தகவல்கள் உள்ளன என்று எதிர்க்கட்சி எம்.பி மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விமானத்தினை தற்போது கென்யாவுக்கான உயர்ஸ்தானிகராக இருக்கும் வேலுப்பிள்ளை கனகநாதன்தான் அனுப்பினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உகண்டாவுக்கான தூதுவராக பணியாற்றியவர். அத்துடன் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருப்பவர் ஆவார். எனினும், இந்த விமானம் இவருடையதா இல்லையா என்பது பற்றி உறுதிப்பாடான தகவல்கள் இல்லை.
இவ்வாறிருக்க, பிரதமர் மஹிந்தவின் திருப்பதி விஜயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த விமானத்திற்கான செலவு 32 மில்லியன் டொலர்களாகும். இந்தச் செலவீனங்கள் அனைத்தையும் இந்தியாவின் முக்கிய வர்த்த௲கரே வழங்கினார் என்று பொதுஜன பெரமுனவின் மிலான் ஜயதிலக எம்.பி கூறுகின்றார்.
எவ்வாறாயினும், குறித்த விமானம் பிரதமர் மஹிந்த குடும்பத்தினரை மீளவும் இலங்கையில் இறக்கியதன் பின்னர் கடந்த 27ஆம் திகதி புதுடெல்லிக்கே பயணமாகியுள்ளது. அதனைவிடவும், கடந்த மாதத்தில் 10ஆம் திகதி புதுடெல்லியில் இருந்து கட்டுநாயக்கவுக்கும், 16ஆம் திகதி உகண்டாவிலிருந்து இரத்மலானைக்கும் வருகை தந்திருந்ததோடு 23ஆம் திகதி திருப்பதி நோக்கி பயணித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் கென்யா, தன்சானியா உள்ளிட்ட நாடுகளின் பல பகுதிகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது தேர்தலை கோரும் எதிர்க்கட்சிகளின் பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலை கோரும் வகையில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய ஆரம்பிக்கவுள்ளன. 2023ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது. 20ஆவது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றம் இரண்டரை வருடங்களில் ஐனாதிபதியினால் கலைக்கப்படலாம்.
அந்த வகையில் அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற அழுத்தத்தை 2022ஆம் ஆண்டு முழுவதும் பிரயோகிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
ஆனால் இதில் ஒரு வேடிக்கை இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தமது கைகளில் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் வகிபாகம் எவ்வாறு இருக்கப் போகின்றது. அவை யாருடன் கைகோர்க்கப் போகின்றன என்பதுதான் கேள்வியாகியுள்ளது.
சுகந்திரக் கட்சியை புறக்கணிக்கும் ஜெ.வி.பி.
மக்கள் விடுதலை முன்னணியுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் தமது கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஐயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் மிகவும் ஏளனமாக பார்த்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியில் இருந்துகொண்டு அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அடுத்து வரும் காலங்களில் செய்வதற்கு ஒன்றும் இல்லாததன் காரணத்தினால் சுதந்திரக் கட்சி தம்முடன் தொங்கி கொள்வதற்கு முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியிடம் தமக்கு வரவேற்பு இல்லை என்பதை அறிந்த சுதந்திரக் கட்சி ஆச்சரியப்பட்டுள்ளது.
கவலையில் விமல். வாசு, உதய
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசு தேவ நாணயக்கார உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேறி விட்டு அரசாங்கத்தை விமர்சிக்க முடியும் என்ற தொனியில் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து மூன்று அமைச்சர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்திற்காக இந்தளவு தூரம் பாடுபட்டு செயற்பட்டு வந்த தாங்கள் தொடர்பில் இவ்வாறான தொரு கருத்து வெளியிடப்படுவது கவலைக் குரியது என்று அவர்கள் கருதுகின்றனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளபோதும் தாம் பதவி விலகப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்த மூன்று அமைச்சர்களும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கப்ராலின் கவலை
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 1.6 பில்லியன் டொலர்களாக இருந்தன. தற்போது 3.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா இலங்கைக்கு வழங்கிய 19 பில்லியன் யுவானை டொலர்களுக்கு நாணய மாற்றம் செய்யும்போது 1.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு கையிருப்பில் சேர்ந்திருப்பதால் இவ்வாறு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த விடயத்தில் அஜித் கப்ராலுக்கு கவலைகளும் உள்ளன. அதாவது பிட்ச் ரேட்டிங் எனப்படுகின்ற சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமானது இலங்கையை கடன் செலுத்த முடியாத நிலைமைக்கு சென்றுக் கொண்டிருக்கின்ற நாடு என்ற குறிகாட்டியை அண்மையில் வெளியிட்டது.
அது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச அஜித் நிவாட் கப்ராலுடன் தொடர்பு கொண்டு வினவியுள்ளார். அப்போது
அமைச்சர் விமல் வீரவன்சவிடம் அஜித் நிவாட் கப்ரால், சீனா இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை தருவதாக வாக்குறுதி அளித்த கடிதத்தை பிட்ச் ரேட்டிங் நிறுவனத்திற்கு அனுப்பி இவ்வாறு ஏற்பாடு இருப்பதால் இலங்கையை தரமிறக்கும் குறிக்காட்டியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அதனை பொருட்படுத்தாத பிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை தரமிறக்கி அறிக்கையை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விமா்சனமான திருமணம்
இருமனங்கள் இணைவது திருமணம். அதனடிப்படையில் ஷெக்கேம் காண்டீபன் மற்றும் மலீசா காவேந்தி பெர்னாண்டோ ஆகியோரின் ஆறுக்கும் மேற்பட்ட வருடங்களாக நீடித்த மன இணைவு திருமணத்தில் நிறைவடைந்திருக்கின்றது. ஷெக்கேம் காண்டீபன் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான சுமந்திரனின் புதல்வர். மலீசா காவேந்தி பெர்னாண்டோ நீதிபதியின் புதல்வி. இவர்கள் இருவருக்கும் கடந்த 29ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இருவீட்டாரின் உறவினர்களுடன் ஆடம்பரமின்றி திருமணம் நடைபெற்றது. அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள். ஆதரவாளர்கள் என்று எவருக்கும் சுமந்திரன் தரப்பில் அழைப்பு வழங்கப்படவில்லை. ஆனால் திருமண நிகழ்வு இடம் பெறுவதாக அனைவருக்கும் சுமந்திரனால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. பலரை அழைக்காமைக்கு கொரோனா மட்டுப்படுத்தல்கள் ஒருகாரணம்.
இந்த திருமண நிகழ்வு இடம்பெறும் நாளிற்கு ஏறக்குறைய இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே திருமண வீட்டாரின் பரபரப்புக்கு மேலாக பரபரப்பில் இருந்தவர்கள் பலர். வடக்கு, கிழக்கு களத்திலும், புலத்திலும் பலருக்கு இந்த திருமண நிகழ்வு பற்றிய தகவல்களையும் குறிப்பாக பெண் வீட்டார் பற்றி அறிவதற்கும் பிரயத்தனப்பட்டனர். எனினும் சிலர் அது சுமந்திரனின் குடும்ப விவகாரம் என்று கூறினார்கள்.
ஆனால், சமூக வலைத்தளங்களில், வழமைபோன்றே சேறடிப்புக்கள் நிகழ்ந்தன. ‘சிங்களப்பெண்ணை திருமணம் செய்யும் சுமந்திரனின் மகன்’ என்று பிரசாரம் செய்யப் பட்டது. சுமந்திரன் குறித்து தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில்காணப்படுகின்ற எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் புதல்வரின் திருமணத்தையும் விமர்சித்தனர்.
இதற்கிடையில், விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் நடேசனும் பெரும்பான்மையின பெண்ணை திருமணம் செய்தார். விக்னேஸ்வரனின் புதல்வர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களையே திருமணம் செய்தனர் என்ற தர்க்கம் சுமந்திரனின் ஆதரவு அணியினரால் முன்வைக்கப்பட்டது. ஆனால், நடேசன் இறுதிவரையில் அமைப்பிலேயே இருந்தார் என்றும், விக்னேஸ்வரன் புதல்வர்கள் திருமணம் செய்த பின்னரே அரசியலுக்கு வந்தார். அது வேறுவிடயம் இதுவேறு விடயம் என்று எதிர் தரப்பினர் பதிலளித்தனர்.
ஆனால். சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நோக்கி நகருகின்றார்.ஆகவே அவருக்கு புதல்வரின் திருமணம் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் ஒரு தரப்பினரால் விவாதிக்கப்பட்டது. எனினும், சுமந்திரனின்புதல்வரோ அவரது மனைவியோ வடக்கு கிழக்கில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை. ஆகவே அது எவ்விதமான தாக்கத்தினையும் ‘முழு நேர இயங்கு நிலை அரசியல்வாதியான’ சுமந்திரனை பாதிக்காது என்கிறனர் பிறிதொரு தரப்பினர். என்ன வாதப்பிரதிவாதங்களைச் செய்தாலும் சுமந்திரனின் அரசியலைத் தீர்மானிப்பது என்னவோ வடக்கு மக்கள் தானே.
வீரகேசரி 02-01-2022