அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனைக்கு 40 இலட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
தூரத்து வானில் பறந்து கொண்டிருக்கும் புறாவொன்று தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள கூட்டுக்குள், பறந்து வந்து நுழைகிறது. சமாதானத்திற்கு அடையாளமாக கருதப்படும் இந்தப்புறாக்கள் காரணமாக சண்டையிட்டு அகால மரணத்தை தழுவிக் கொண்டவர்களும் எமது வரலாற்றில் இல்லாமலில்லை.
சின்னஞ்சிறிய கூடுகளில் புறாக்களை ஒரு கூட்டமாக அடைத்து வளர்க்கும் நிலைமை தற்போது எமது சமூகத்தில் காணப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில், தோட்டங்களில், ஒரே வரிசையாகக் காணப்படும். சிறிய வீடுகளில் புறாக்கூடுகள் ஓரிரண்டு இல்லாமல் இல்லை. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் புறாக்களை வளர்த்து அந்தப் புறாக்கள் காரணமாக சண்டையிட்டு உயிர் துறந்த நிகழ்வுகளும் பொலிஸ் புத்தகங்களில் பதியப்பட்டுள்ளன.
என்றாலும் இவற்றையெல்லாம் புறந்தள்ளி நிர்மாணிக்கப்பட்டுள்ள புறாக்கூடொன்று அக்குறணைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அது பலகைகளால் அமைக்கப்பட்ட அழகான அபூர்வமான இல்லமாகும்.
“நான் சிறுவயதிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான புறாக்களை வளர்த்துள்ளேன். பாடசாலை செல்லும் காலங்களில் புறாக்கள் வளர்த்தேன். சிறிது காலத்தின் பின்பு புறாக்கள் வளர்ப்பதை நிறுத்திக் கொண்டேன். புறா வளர்ப்பதை நிறுத்தியிருந்த என்னிடம் ‘எனக்கு புறா வாங்கித்தாருங்கள்’ என எனது சிறிய மகன் கேட்டார். மகன் புறாவுக்கு ஆசைப்பட்டதால் அவருக்கு புறா சோடி ஒன்று வாங்கிக்கொடுத்தேன். அது 2012 ஆம் ஆண்டிலாகும். புறாக்கள் வளர்ப்பதால் உளரீதியில் நிம்மதி கிடைக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். அதன் பின்பு படிப்படியாக புறா வளர்ப்பதை எனது பொழுதுபோக்காகக் கொண்டேன்” என்கிறார் புறாக்கூட்டின் உரிமையாளர். எம்.எம்.எம் அஜ்மீர். இவர் அக்குறணையைச் சேர்ந்தவர்.
புறாக்களின் இல்லம் வேறுபாடான வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் ஜப்பானில் தனது வாகன வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணிப்பதை விரும்பும் ஒருவர்.
நான் எதிர்காலத்துக்காக சேமிப்பவனல்ல. எவ்வளவு உழைத்தாலும் அந்த உழைப்பினால் பயன்பெறாது, மகிழ்ச்சியாக வாழாது நாளை இறந்துவிட்டால் எனது சேமிப்பினால் பலன் இல்லை. நான் செலவு செய்யவேண்டும், துன்பப்படும் மக்களுக்கு, தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு உதவிகள் செய்வதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிலர் பணத்தை கட்டு கட்டாகச் சேமிக்கிறார்கள். சிலர் ஏனையோரின் பணத்தினால் வாழ்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் நிம்மதியில்லை.
நான் உழைக்கும் பணத்தை நான் விரும்பும் வகையில் ஏனையோருக்கு பிரச்சினைகளற்ற வகையில் அனைத்தையும் செலவு செய்கிறேன். நான் பெரும்பாலான நாடுகளுக்கு விஜயம் செய்கிறேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் புறாக்கள் தொடர்பில் தேடிப்பார்க்கிறேன். ஆராய்கிறேன்.
எனது பொழுது போக்குகள் மூலம் அதி உச்ச பயன்களை, மகிழ்ச்சியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே நான் கற்றுக்கொண்டுள்ளேன். அதிகமானோர் வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை என்பவற்றை வளர்க்கிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் அப்பிராணிகள் மீது அன்பு, கருணை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அப்பிராணிகள் வயது முதிர்ந்துவிட்டபோது இன்றேல் சுகவீனமுற்றபோது அன்பு, கருணை கொண்டவர்களாக இருப்பதில்லை. செல்லப்பிராணிகளுக்குரிய கூடுகள் சுத்தமாக இருப்பதில்லை. அதனால் இப்பிராணிகள் ஒழுங்காக உறங்க முடியாது துன்பப்படுகின்றன என்கிறார் அவர்.
என்றாலும் அஜ்மீர் தனது செல்லப் புறாக்களுக்கு மிகவும் அதிகமான வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளார். இந்தப் புறாக்கள் அரண்மனைப் புறாக்கள் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் இந்தப் புறாக்களுக்கு அரண்மனை அமைத்துக் கொடுத்துள்ளார். அஜ்மீருக்கு வெளிநாட்டு நண்பர்கள் ஏராளம். அவர்கள் பல்வேறு நாடுகளிலுள்ள புறாக்கூடுகள் தொடர்பான தகவல்களை அவருக்கு வழங்கியுள்ளார்கள். ஜப்பானில் இவ்வாறான புறாக் கூடுகளை நேரில் காண்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. சில வகையான புறா கூடுகள் அதிகரித்த வெப்ப நாடுகளுக்கு உகந்தவை. சில குளிர் காலநிலைக்கு மாத்திரம் பயன்படுத்தக் கூடியவை. இவைபற்றி ஆராய்ந்து அஜ்மீர் எமதுநாட்டு காலநிலைக்கு ஏற்ற புறாக்கூட்டினை அமைத்துள்ளார்.
அஜ்மீரின் புறாக்கூட்டில் தற்போது சுமார் 120 புறாக்கள் வாழ்கின்றன. இந்த புறாக்கூடு முழுமையாக மலேசிய பலகையினாலே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை நிர்மாணிப்பதற்கு அவருக்கு 6 மாதகாலம் தேவைப்பட்டது. இந்த புறா இல்லம் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 2 பிரிவுகள் புறாக்குஞ்சுகளை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்குமானது. அத்தோடு ஆண், பெண் புறாக்களுக்கு வெவ்வேறு பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டுக்குள் இருக்கும் புறாக்கள் தினமும் சுதந்திரமாக வெளிச்சூழலுக்குப் பறப்பதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புறாக்கள் தினமும் நினைத்தவாறு சுதந்திரமாக வெளியே பறந்து மீண்டும் திரும்புவதற்கு புறா இல்லத்தின் பிரதான வாசல் திறந்து விடப்படுகிறது. பிறகு பிரதான வாசல் மூடிவைக்கப்படுகிறது. அஜ்மீர் பிரதான வாசலுக்கருகிலுள்ள கதவின் சிறிய பகுதிகள் மூன்றைத் திறந்து வைப்பார். வெளியில் சென்று மீண்டும் இல்லத்துக்கு திரும்பும் புறாக்கள் அந்த கதவின் மூன்று சிறிய பகுதிகள் ஊடாகவே உட்புகுகின்றன. இல்லத்துக்கு உள்ளே வந்ததும் புறாக்களுக்கு மீண்டும் வெளியே செல்ல முடியாது.
இந்த புறா இல்லத்தின் நிர்மாணம் அபூர்வமானது. இலங்கையில் எப்பகுதியிலிருந்து எனது புறாவொன்றைப் பறக்க விட்டாலும் அது மீண்டும் இல்லத்துக்கே வந்து சேரும் என்கிறார்.
புறாக்களுக்கு இந்த இல்லத்தை அமைக்க 40 இலட்சம் ரூபாவை செலவிட்டதாக அஜ்மீர் கூறுகிறார். அத்துடன் இலங்கையில் அதிக விலையில் விற்கப்படும் புறா ஒன்று தன்னிடமுள்ளதாகவும் அதனை 20 இலட்சம் ரூபாவுக்கு வாங்கியதாகவும் கூறுகிறார்.
அஜ்மீரின் புறா இல்லத்துக்குள் தன்னியக்க மின்விசிறிகள் உள்ளன. இம் மின்விசிறிகள் தினம் மூன்று தடவைகள் தானாக இயங்கும். ஆசியாவிலே காணக்கூடிய மிகவும் அபூர்வமான நேர்த்தியான புறா இல்லம் இதுவேயாகும். இந்த இல்லத்தை நிர்மாணிக்க அஜ்மீர் 40 இலட்சம் ரூபாய்களை செலவிட்டிருக்கிறார்.
‘இலங்கையில் அதிக விலையில் விற்கப்படும் புறா ஒன்றும் என்னிடமுள்ளது. நான் அதனை 20 லட்சம் ரூபாவுக்கு வாங்கினேன். அது ஓட்டப்பந்தய (ரேசிங் புறா) புறாவாகும். இந்த புறாவுக்கு சிறிய பயிற்சியொன்றை நாம் வழங்குவோம் என்கிறார் அஜ்மீர். ரேசிங் புறா ஹிட்லர் கண்டுபிடித்த புறாவாகும். இரு வகையான புறாக்களை ஒன்றிணைத்து இனவிருத்தி செய்யப்படுகிறது.
யுத்த காலத்தில் இந்த புறாக்கள் மூலம் யுத்த செய்திகள் பரிமாறப்பட்டுள்ளன. இந்த ரேசிங் புறாவை எங்கே வெளியே விட்டாலும் அவை மிக விரைவாக தங்களது இல்லத்தை வந்தடையும்.
யாழ்ப்பாணத்தில் பறக்க விடப்பட்ட இந்த ரேசிங் புறா 4 மணித்தியாலங்களில் இந்த இல்லத்தை வந்தடைந்துள்ளது. வேறு நாடுகளில் புறாக்கள் பணத்துக்காக விளையாட பயன்படுத்தப்படுகின்றன. நான் இவ்வாறு பணம் உழைப்பதற்காக புறாக்களை வளர்ப்பதில்லை. இது எனது பொழுதுபோக்கு.
எங்கோ தொலைதூரத்தில் பறக்க விடப்பட்ட புறா மிகவும் வேகமாக தனது இல்லத்தை வந்து சேரும் போது மகன், மகள் வீடு வந்து சேருவதுபோன்ற மனநிலை எனக்கு ஏற்படுகிறது. இந்த மனோநிலையை பணத்தினால் பெற முடியுமா? என்கிறார் அஜ்மீர்.
புறாக்களுக்கு அநேகமாக தானியங்களே உணவாக வழங்கப்படுகிறது. அஜ்மீர் தனது புறாக்களுக்கு வெளிநாடுகளிலிருந்தும் தேவையான உணவுகளைப் பெற்றுக்கொள்கிறார். மேலதிகமாக சோளம், கடலை, சிவப்பு அரிசி, நெல், கொள்ளு, கிறீன்பீஸ் போன்ற தானியங்கள் கலந்து வழங்கப்படுகிறது. புறாக்களுக்குத் தானியங்கள் அளவாக வழங்கப்படவேண்டும். அளவுக்கு அதிகமானால் புறாக்களினால் பறக்க முடியாது போய்விடும். மேலும் விட்டமின் மற்றும் மருந்துகள் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படும்.
நான் புறாக்களை எனது பிள்ளைகளைப் போன்றே பராமரிக்கின்றேன். புறாக்களை அநேகர் விலை கொடுத்து வாங்குவதற்கு என்னிடம் வருகிறார்கள். ஆனால் அது எனது வியாபாரமல்ல. பொழுதுபோக்கு. ஒரு சோடி புறா வருடத்திற்கு ஒருசோடி அல்லது இரண்டு சோடி குஞ்சுகளையே பொரிக்கிறது. அதற்கு மேலால் இல்லை. இவற்றில் ஒரு சோடியை நான் விற்றுவிடுவேன். குஞ்சுகள் விற்பனை மூலம் பெறப்படும் பணத்தை புறாக்களுக்காகவே செலவிடுகிறேன். எனது தனிப்பட்ட செலவுக்காக அல்ல. புறா வளர்ப்பதற்கு உதவிக்காக எனக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார். ஊழியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனது கடையில் பணிபுரியும் ஒருவர் வந்து புறாக்களுக்கு உணவு வழங்குவதில் எனக்கு உதவுகிறார்.
புறாக்களில் பல வகையுண்டு.அதனடிப்படையிலும் விலைகளிலும் மாற்றங்கள் உள்ளன. நான் புறா குஞ்சொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளேன். வேலையற்ற, தொழிலற்ற எவரும் புறாவளர்ப்பதில் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் வருமானம் ஒன்று இல்லாது புறாக்களை வளர்த்தால் தனது குடும்பம், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதுபோய்விடும். வேலை செய்து கொண்டு பொழுது போக்காகவே புறா வளர்க்க வேண்டும். படிக்கும் காலத்தில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் கல்வியில் பாதிப்பு ஏற்படும் என அஜ்மீர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அஜ்மீர் ஜப்பானில் வாகன வியாபாரத்தில் ஈடுபடுபவர். அவர் ஜப்பான் அல்லது எந்த நாட்டில் இருந்தாலும் தனது ஓய்வு நேரத்தில் நவீன தொழிநுட்ப வசதிகளூடாக தனது புறா இல்லத்தையே பார்த்துக்கொண்டிருப்பார். அதில் அவருக்குத் திருப்தி ஏற்படுகிறது.
அவரது புறா இல்லத்தினுள் எவராவது நுழைந்தால் அவரது கையடக்கத் தொலைபேசி எச்சரிக்கை ஒலி எழுப்பும். அந்தளவுக்கு அவர் நவீன தொழிநுட்ப பயன்பாடுகளைக் கொண்டுள்ளார்.- நன்றி தேசய.
சிங்களத்தில்: திசானி ஜயமாலி கருணாரத்ன
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
விடிவெள்ளி பத்திரிகை 2021-12-23