அமல்களும் உளத் தூய்மையும் – ரமழான் சிந்தனை

இஸ்லாத்தை ஏற்று பின்பற்றும் முஸ்லிம் அல்குர்ஆனும் ஸுன்னாவும் காட்டிய வழிமுறையில் வாழ்வதற்கு கடமைப்பட்டவன் ஆவான். இந்நல் வழிமுறைகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இன்றியமையாத அம்சம் உளத்தூய்மை ஆகும்.

உளத்தூய்மை என்பது, ஒரு முஸ்லிம் சகல நற்காரியங்களையும் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்ய வேண்டும் என்பதாகும். இதன் மூலம் நன்மைகளை சம்பாதித்து வாழ்வின் இலட்சியமாகிய சுவனலோக வாழ்வுக்குச் செல்வது சத்தியமாகும். உளத்தூய்மை இபாதத்துக்களின் அடிப்படை அம்சமாகும். அல்லாஹ்வின் பார்வையில், செயல்களுக்குப் பின்னால் உள்ள எண்ணம் முக்கியத்துவமுடையதாகும். ஒரு முஸ்லிம் அமல்கள், இபாதத்துக்கள் அதிகம் செய்ய வேண்டும் என்பது எந்தளவு முக்கியமோ, அதனை விடவும் அவற்றில் உளத்தூய்மை இருத்தல் அவசியம் என்பது முக்கியமானதாகும்.

வெளிப் பகட்டுக்கும் முகஸ்துதிக்குமாக செய்யும் அமல்கள், இபாதத்துக்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பிறரின் பாராட்டுக்களுக்காகவும் புகழ்ச்சிக்காகவும் செய்யும் செயல்களின் பலன்கள் உலகத்துடன் முடிவடைந்துவிடும். உளத்தூய்மையற்ற இபாதத்துக்களால் பிறரைத் திருப்திப்படுத்தலாமே தவிர அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ள முடியாது. உளத்தூய்மையற்ற செயல்கள் இம்மையில் புகழைத் தேடித் தந்தாலும் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் கேவலத்தை ஏற்படுத்தி விடும். ஒரு செயலை பிறர்பார்க்க வேண்டும் அல்லது பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வது மறைமுக இணைவைப்பாகும்.

இஸ்லாத்தின் பார்வையில், செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்ததாகும் என்பது உளத்தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. ஆகவே, அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாக கொண்டு இபாதத்துக்கள் அமைத்துக் கொள்வோமாக. உள்ளத்தை சீர்படுத்தும் போராட்டம் ஷைத்தானை தோற்கடிக்கும் போராட்டமாகும். உள்ளத்தில் பதிந்திருக்கும் பெருமை, பொறாமை, பேராசை, அகம்பாவம் போன்ற துர்க்குணங்களை எடுத்தெறிவோம்.

அல்லாஹ்வின் ஆற்றல்களையும் வல்லமையையும் புரிந்து கொள்வதன் மூலம் உளத்தூய்மையை தோற்றுவிக்க முடியும். புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் ஆவான்.

Check Also

நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், …

Free Visitor Counters Flag Counter