நாட்டில் மாடறுப்பிற்கு தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பால் உற்பத்தி துறை, தோல் பதனிடல் மற்றும் பாதணிகள் உற்பத்தி உள்ளிட்ட தோற் பொருள் கைத்தொழில் துறை ஆகியன பாரியளவில் பாதிப்படையும் என்ற தகவல் ஆய்வொன்றின் மூலம் வெளியாகியுள்ளது.
அது மாத்திரமல்லாமல் குறித்த தடை அமுல்படுத்தப்பட்டால் சட்டவிரோத மாடறுப்பின் ஊடாக சட்டவிரோத பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிப்பதோடு பசு வதையும் நாட்டில் அதிகரிக்கும் என குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
“மாடறுப்புக்கு தடை விதித்தல்” எனும் சுலோகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரங்களின் போதும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின் போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில், கடந்த 2020.09.28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட “மாடறுப்புக்கு தடை விதித்தல்” எனும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.அத்துடன் மாட்டிறைச்சியை நுகர்கின்ற மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து சலுகை விலையில் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்தது.
எனினும் சுமார் 15 மாதங்கள் கழிந்தும் இதுவரை குறித்த தீர்மானம் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இவ்வாறான நிலையில் மாடறுப்புடன் தொடர்புடைய 272ஆம் அத்தியாயமான 1893ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க கசாப்புக் கடைக்காரர் கட்டளைச் சட்டம், 1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டம், 252ஆம் அத்தியாயமான மாநகர சபை கட்டளைச் சட்டம், 255ஆம் அத்தியாயமான நகர சபை கட்டளைச் சட்டம், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட இரண்டு அமைச்சரவை தீர்மானங்களின் பிரகாரம், மாடறுப்பிற்கு தடைவிதிக்கும் சட்ட மூலத்தினை தயாரிக்கும் பணியில் தற்போது சட்ட வரைஞர் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடையினை அமுல்படுத்தும் நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் போன்ற பல தேரர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த தடை அமுல்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்ற தகவல் ஆய்வொன்றின் மூலம் வெளியாகியுள்ளது.
Advocata Institute இன் கொள்கை ஆராய்ச்சி ஆய்வாளரான சத்யா கருணாரத்தன மற்றும் JB Securities இன் இணை ஆராய்ச்சி ஆய்வாளரான பிரவினா யோகேந்திரா ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
“இந்தத் தடையின் மூலம் நாட்டில் மிருகவதை இல்லாமலாக்கப்படுகின்றது என்பது பல இலங்கையர்கள் அடையாளம் காணக்கூடிய ஒரு உன்னதமான காரணமாகும்” என்பதை ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
எனினும் இந்தத் தடையினால் ஏற்படும் விளைவுகளினால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கும் எனவும் போதியளவு திட்டமிடாமல் இந்தக் கொள்கையை அமுலாக்கினால் எதிர்பாராத பல விளைவுகள் நாட்டில் ஏற்படும் எனவும் இந்த ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணக்களத்தின் தகவல்களின் பிரகாரம் 2020ஆம் ஆண்டு 117,033 விவசாயிகள் உள்நாட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 296,111 மாட்டுப் பண்ணைகளும், 26,284 எருமைப் பண்ணைகளும் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை புள்ளிவிபர சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாடு வளர்ப்புத் தொழில் மாத்திரமல்லாமல் அது மாட்டிறைச்சி தொழிலையும் நம்பியே உள்ளது” என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், பால் கறக்க முடியாத மாடுகளை பண்ணையாளர்கள் விற்பனை செய்கின்றனர். இதில் 50 சதவீதமானவை மாட்டிறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை முக்கிய விடயமாகும்.
இந்த மாடுகளின் ஏனைய பகுதிகள் தோல் பதனிடல் போன்ற ஏனைய கைத்தொழில்களுக்கான மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான நிலையில் மாடறுப்புக்கு தடை விதிக்கப்படுமானால் இந்த அனைத்து துறைகளும் பாரியளவில் பாதிக்கப்படும் என ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலுற்பத்தி மற்றும் உள்ளூர் விவசாய துறை ஆகியவற்றை மேம்படுத்துவதே மாடறுப்பிற்கு தடை விதிப்பதற்கான அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பசுக்களினால் 414 மில்லியன் லீற்றர் பாலும், எருமைகளினால் 78 மில்லியன் லீற்றர் பாலும் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், குறித்த வருடத்தில் மாத்திரம் 102.3 மில்லியன் கிலோவிற்கு மேற்பட்ட பால்மா மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இலங்கை இறக்குமதி செய்துள்ளது. அத்துடன், ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் கிலோ கிராம் பால் உற்பத்திப் பொருட்கள் மாத்திரமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பாலுற்பத்தி துறையினை முன்கொண்டு செல்லும் நோக்கில் பால் கறக்க முடியாத மாடுகளை பால் உற்பத்தியாளர்கள் அப்புறப்படுத்த வேண்டியுள்ளமையும் முக்கிய விடயமாகும்.
இதேவேளை 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 162,000 பசுக்கள் சட்ட ரீதியாக அறுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் 444 மாடுகள் தினசரி அறுக்கப்படுகின்றன.
மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்பட்டால் 2020 இல் காணப்பட்ட 1,628,771 பசுக்களின் தொகை அடுத்த 10 வருடங்களுக்குள் மூன்று மடங்காக அதிகரிக்கும் எனவும் இதில் 75 சதவீதமானவை பால் கறக்க முடியாத மாடுகள் எனவும் இந்த துறையுடன் தொடர்புடைய முன்னணி நபர்களுடன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட நேர்காணலின் ஊடாக தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்படும் பராமரிப்பு செலவுகள் தாங்க முடியாததாக இருப்பதுடன் பால் விலை அதிகரிப்பின் ஊடாக குறித்த செலவுகள் நுகர்வோருக்குக் கடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, உத்தியோகபூர்வ தரவுகளின் பிரகாரம் 2019 இல் இறைச்சி உற்பத்திகள் 29.87 மெட்ரிக் தொன்களாகும். கால்நடைத் தொழிலில் சிறு விவசாயிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதற்கமைய, நாட்டில் உள்ள தனியார் பால் பண்ணைகளில் 95 சதவீதமானவை சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினாலேயே மேற்கொள்ளப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
“எமது நாட்டில் கால்நடை வளர்ப்பு குறுகிய இலாபத்திலேயே இயங்குகின்றன. இதனால் மாட்டிறைச்சிக்கு விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக இலாபம் அடைகின்றனர்” என்பது ஆய்வாளர்களின் அவதானிப்பாகும்.
இதன் காரணமாக, கூடுதல் வருமானத்திற்காக தனித்தனியாக கால்நடைகளை வளர்க்கும் சிறு விவசாயிகள் இந்தத் தடையால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் பால் கறக்க முடியாத கால்நடைகளினால் ஏற்படும் கூடுதல் பராமரிப்புச் செலவுகளை தாங்க முடியாத விவசாயிகள், தங்களின் சிறிய அளவிலான வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டியிருக்கும் எனவும் இந்த ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மாடறுப்பினை தடைசெய்வது என்பது முரண்பாடான விடயமாகும். ஏனெனில் மேலுள்ள விளக்கத்தின் படி மாட்டிறைச்சித் தொழில் இல்லாமல் பால் தொழிலை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது முக்கிய விடயமாகும்.
ஒரு கிலோ கிராம் நேரடி நிறைக்கு 300.00 ரூபா என்ற அடிப்படையில் மாட்டிறைச்சி தொழிலுக்கு மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதிலிருந்தே தோல் பதனிடப்படுவதற்கான மூலப்பொருட்களைப் பெறுகின்றது.
ஒரு மாட்டில் இருந்து சுமார் 15–-16 சதுர அடி தோல் பதனிடப்படுகின்றது. மாட்டில் இருந்து கிடைக்கும் தோல் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
குறித்த தோல் பதனிடப்பட்டு பாதணிகள் மற்றும் தோல் பொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருளாக ஒரு கிலோ 175.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பதனிடப்பட்ட தோல் ஒரு கிலோ 250.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதணிகளுக்கு சுமார் 60 சதவீதமான தோல்கள் தேவைப்படுகின்றன என்ற விடயம் இந்த ஆய்வில் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலம் தெரியவந்தது. இவ்வாறான நிலையில் மாடறுப்பினை தடை செய்வதன் ஊடாக பாதணி தயாரிப்புத் துறை நேரடியாக பாதிக்கப்படுவதுடன் மலிவான விலையில் பாதணிகளை கொள்வனவு செய்வதும் சிரமமாகக் காணப்படும்.
மேலும், 60 சதவீதத்திற்கு மேற்பட்ட தோல் மற்றும் பாதணி உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளாவர். அரசாங்கத்தின் மாடறுப்புக் கொள்கை அமுல்படுத்தப்பட்டால் குறித்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும்.
இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை அமுல்படுத்தப்பட்டால் வயதான மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசியர் கபில குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வயதான கால்நடைகளை ஏற்றுமதி செய்வது என்பது சவாலான விடயமாகும். தொற்றுநோய்களுக்கு உள்ளான மாடுகளை வாங்குவதற்கு சர்வதேச சந்தைகள் தயக்கம் காட்டுகின்றமை மற்றும் அதிக போக்குவரத்து செலவு போன்றன இதற்கான பிரதான காரணங்களாகும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கறக்க முடியாத மற்றும் வயதான பசுக்களை பராமரிப்பதற்காக புதிய கால்நடை காப்பு பண்ணைகளை உருவாக்குவதற்காக அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
இது போன்ற காப்புப் பண்ணைகள் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் தற்போது குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டிலும் ஒரே நேரத்தில் 1,000 மாடுகளை மாத்திரமே பராமரிக்க முடியும்.
வயதான கால்நடைகளின் பராமரிப்பிற்காக மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு எந்த வருமானமும் அரசாங்கத்திற்கு கிடைக்கப் போவதில்லை. தற்போது எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையில் இது பாரிய தாக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் கொள்கை நாட்டில் உள்ள குறைந்த அளவிலான மேய்ச்சல் நிலங்களுடன் மோதுவதனால் பயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை அமுல்படுத்தினால் உள்ளூர் மாட்டிறைச்சி தொழில் முற்றிலுமாக நிறுத்தப்படுவதனால் கோழி மற்றும் மீன் போன்ற புரதப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியினையும் இறக்குமதியினையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்த புரதப் பொருட்களின் கேள்வி அதிகரிப்பதனால் இதன் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும்.
மேலும், மாட்டிறைச்சிக்கான இறக்குமதியை அனுமதித்து அதனை உண்பதற்கு தடை எதுவுமின்றி, பசு வதையை தடை செய்வதன் ஊடாக சுமை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்தக் கொள்கை அமுலாக்கம் ஒரு பாசாங்கு நடவடிக்கையாகும். ஏனெனில் இலங்கை மக்களின் நுகர்வுக்காக இன்னொரு நாட்டில் மாடுகள் அறுக்கப்பட வேண்டியுள்ளது” என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“மாடறுப்புத் தடை கோட்பாட்டளவில் சிறந்ததாகத் தோன்றினாலும், அது பால் பண்ணை, மாட்டிறைச்சி, பாதணி தயாரிப்பு மற்றும் பிற தொடர்புடைய தொழில்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதுடன் வணிக நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது” என ஆய்வாளர்களான சத்யா கருணாரத்தன மற்றும் பிரவினா யோகேந்திரா ஆகியோர் எச்சரிக்கின்றனர்.
றிப்தி அலி – விடிவெள்ளி பத்திரிகை 2021-12-19