முல்லைத்தீவு – புதுக்கிடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, உடையார்கட்டு வடக்கு – மூங்கிலாறு கிராமத்தின் 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் ( 19) இரவு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட, யோகராசா நிதர்சனாவின் மைத்துனர் முறையான, சகோதரியின் கணவரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரிக்கு தெரிவித்தார்.
குறித்த சிறுமி, நீண்ட காலமாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையும், அதன் பலனாக அவர் கர்ப்பிணியாக இருந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கைகள் ஊடாக தெளிவாவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட இந்த 12 வயதான சிறுமி, இரு மாத கர்ப்பிணி என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கர்ப்பத்தை சட்ட விரோதமாக அகற்ற முற்பட்ட போது, பிறப்புறுப்பில் ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் கரணமாக அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவாவினால் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பலிஹக்கார, வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரசிறி ஆகியோரின் உத்தரவின் கீழ் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹக்மனவின் மேற்பார்வையில் புதுக்கிடியிருப்பு பொலிஸ் நிலைய சிறப்புக் குழு முன்னெடுத்துள்ளது.
தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி காலை சென்ற நிதர்சனா மாலை வரை வீடு திரும்பாதமையால் குடும்பத்தார் அவரை தேடியிருந்த நிலையில், அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறையிட்டிருந்தனர்.
ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் கடைக் குட்டியான நிதர்சனா, திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7 இல் கல்வி கற்று வந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டதுடன் கிராம மக்களும் மாணவியை தேடியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போய் 3 நாட்களில், கடந்த சனியன்று ( 18) நிதர்சனா, இறுதியாக சென்ற சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வலது கை அற்ற நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டிருந்தது. சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சடலம் மீதான பிரேத பரிசோதனை, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவாவினால் நடாத்தப்பட்டிருந்த நிலையில், அதிலேயே நிதர்சனாவின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக புதுக்கிடியிருப்பு பொலிஸார் கூறினர்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(எம்.எப்.எம்.பஸீர்) -வீரகேசரி- (2021-12-21 10:44:11)