ஸ்தீரமற்ற நாடும்! பாதுகாப்பற்ற மக்களும்!!

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கின்றன. நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் பாரிய கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அமைச்சரவைக்குத் தெரியாமலேயே யுகதனாவி மின்சக்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியதாக ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார் திசாநாயக்க குறித்த ஒப்பந்தத்தின் பிரதியை பாராளுமன்றில் வெளியிட்டதன் பின்னரே அது பற்றித் தாம் அறிந்து கொண்ட தாக அமைச்சரவையில் உள்ளவர்களே கூறுகின்றமை வேடிக்கையாகவுள்ளது. ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டுவரப் பாடுப்பட்டவர்களே இன்று அவருக்கு எதிராக ஊடகங்களில் தோன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவை உடனடியாக பதவி விலக்குமாறு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களும் போர்க் கொடி தூக்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார்.

மறுபுறம் நாட்டில் விலைவாசி உயர்வு மக்களைக் கடுமையாக வருத்தத் தொடங்கியுள்ளது. நாட்டில் மலிவாகக் கிடைத்து வந்த மரக்கறிகளின் விலை இப்போது வானுயர அதிகரித்துள்ளன. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. மீண்டும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்று அதன் தரம் உறுதிப்படுத்தப்படாததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் மோசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ள முடியாததன் காரணமாக பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சிலிண்டர் விற்பனை செய்யும் கடைகளில் இன்று விறகுகள் விற்கப்ப டுகின்றன. மக்கள் சுமார் 10 ஆயிரம் ரூபா வரை கொடுத்து மண்ணெண்ணெய் அடுப்பை வாங்கிச் செல்கின்ற நிலை வந்துள்ளது.

சமையல் எரிவாயுக் கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் 727 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்கள அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றுள் 24 சம்பவங்கள் எரிவாயு கசிவுடன் சம்பந்தப்பட்டவை என்றும் ஏனையவை அடுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டவை என்றும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தூரதிஷ்டவசமாக கடந்த வாரம் குண்டசாலையில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபகரமாக மரணித்துள்ளார். அதே போன்று நேற்று முன்தினம் குருவிட்ட பகுதியில் வெடிப்புச் சம்பவத்திலிருந்து தப்புவதற்கு மாடியிலிருந்து குதித்த பெண். ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவோ, தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எவரையும் காண முடியவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கும் பாகிஸ்தானில் பிரியந்த குமார கொல்லப்பட்டதற்கும் குண்டசாலையில் எரிவாயுக் கசிவு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததற்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. முன்னைய இரண்டு சம்பவங்களையும் முன்வைத்து நீதி கோருவது போன்றே நாம் எரிவாயுக் கசிவு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குவார். என எதிர்பார்க்கப்பட்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முன் வைத்த முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு எந்தவித விமோசனமும் இல்லை. வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இந்தியாவிடம் கடன் கேட்டுச் சென்றார். இப்போது தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார். நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம்வாய்ந்த பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக, அது பற்றிப் பேசித் தீர்வு காண வேண்டிய பாராளுமன்றமே நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 50 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லத் தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.

இலங்கைத் தேசத்தின் பெருந்துயர் இதுதான். தம்மை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு தாம் சுகம் அனுபவிக்கின்ற அரசியல்வாதிகள்தான் இந்த நாட்டில் உள்ளனர். மக்களின் பிரச்சினைகள் பற்றி எந்தவிதக் கவலையும் அவர்களுக்கு இல்லை.

அடுத்த வருட முற்பகுதியில் நாட்டில் பாரிய பஞ்சம், பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை வரும் என்றும் அரசாங்கம் அதனை அடக்குவதற்கு இராணுவ பலத்தைப் பிரயோகிக்கலாம் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆக, அடுத்து வரும் நாட்கள் நம்பிக்கையற்றதாகவே உள்ளன. நிலைமை கைமீறிச் செல்லுமானால் தோல்வியடைந்த ஒரு தேசமாக நாம் வரலாற்றில் பதியப்படுவோம். அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்கப் பிரார்த்திப்போம்.

விடிவெள்ளி – ஆசிரியர் செய்தி (16/12/2021 Pg-02 )

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter