அதிகாலையில் நித்திரை விட்டெழுதல் என்பது சிரமமாகவே தோன்றுகிறது. அதிலும் வுழு செய்வதென்றால் இன்னும் அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அதிகாலையில் சில்லென்று வீசும் இளந்தென்றல், அதனூடே தழுவிக்கொள்ளும் குளிர், நீண்ட நேரம் கண்டு கொண்டிருக்கும் கனவு, இடையில் முடிவடையுமே என்ற ஒரு சிறு ஏக்கம் என இன்னாரென்ன காரணங்கள் பல. எனினும், இவ்வனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு எழும்புவதன் சிறப்பை நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆ மூலம் அறிந்து கொள்ளலாம். “யா அல்லாஹ் எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக” (ஆதாரம்: அபூதாவூத்)
இதன்படி அதிகாலை எவ்வளவு சிறப்புக்குரியது என்பது தெளிவாகிறது. அதனால் சுப்ஹ் தொழுகை தொழாதவர்களுக்கு அன்றைய தினம் பரக்கத் குறைந்ததாக இருக்கும். முகத்தில் புன்னகை இராது. அன்றைய தினம் முழுவதும் குழப்பமான மனநிலை காணப்படுவதோடு மேற்கொள்ளும் பணிகளிலும் திருப்தி ஏற்படாது.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், சுப்ஹ் தொழுகை முடிந்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு, ‘இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா? எனக் கேட்க, மக்கள் ‘இல்லை’ என்றனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் இன்னார் வந்தாரா? எனக் கேட்க. மக்களும் ‘இல்லை’ எனக்கூற நபி (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள். ‘நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (சுப்ஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்துகொண்டால் தவழ்ந்தேனும் இத்தொழுகைக்காக வருவார்கள்’ என்றார்கள் என உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
இப்பொன்மொழியில் பொதிந்திருக்கும் கருத்தை விளங்கிக் கொள்வோர் சுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளை உதாசீனம் செய்ய மாட்டார்கள். மேலும், அதிகாலையில் அதான் ஒலி கேட்டும் திரும்பிப் படுக்கும் ஒருவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான் என்ற நபி வாக்கும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. பல நாட்கள் சுப்ஹ் தொழாதவரின் செவிகள் தினமும் ஷைத்தானின் சிறுநீரால் கழுவப்படுமாயின், அவரது நிலை என்னவாகும் என்பதை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதேவேளை, சுபஹ் தொழுதவருக்குக் கிடைக்கும் சிறப்புக்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். ‘மறுமையில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். (பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்’ (ஆதாரம்: பைஹகி) என்றும், ‘யார் சுப்ஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்’ (ஆதாரம்: தபரானி) என்றும், சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின்னுள்ள தொழுகையையும் (சுப்ஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழைய மாட்டார். (ஆதாரம்: முஸ்லிம்) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த நபிமொழிகள் சுப்ஹ் தொழுபவர்களுக்கு கிடைக்கும் சுபசோபனமாக நபியவர்களால் நன்மாராயம் கூறப்பட்டவைகளாகும். இச்சிறப்பை நாம் அடைய வேண்டுமாயின், தூக்கம், சோம்பல் என்பவற்றைத் தியாகம் செய்ய வேண்டும். ஷைத்தானின் தூண்டுதல்களை முறியடிக்க வேண்டும். ஏனெனில் எமது முக்கிய தேவைக்காக அதிகாலையில் எழும்ப முடியுமாயின், இம்மை, மறுமை இரண்டிலும் சௌபாக்கியத்தையும், சுவனத்தையும் பெற்றுக் கொள்வதற்காக மனமுவந்து எழுந்து சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றுவோம்.
சுஆதா அன்சார் – உயன்வத்த–
தினகரன் – (2021-12-17)