நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் நெருக்கடிக்கு உதவி கோரும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருட முற்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சவூதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளுக்கே இந்த விஜயத்தினை மேற்கொண்டு அந்நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் இந்த விஜயத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச தரப்பின் உயர் மட்டத்தினருக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலர் நெருக்கடி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனித்தனி விஜயங்களை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், மத்திய வங்கியின் உயர் மட்டக்குழுவொன்று இந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கே இந்த குழு விஜயம் செய்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது.
இக்குழுவின் சவூதிக்கான விஜயத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் இணையவுள்ளார். இந்த தூதுக்குழுவின் விஜயத்தினை தொடர்ந்தே பிரதமரின் மத்திய கிழக்கிற்கான விஜயம் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது,
கடந்த மார்ச் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கு மேற்கொண்ட விசேட விஜயத்தினை அடுத்து, 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை இலங்கைக்கு அந்நாடு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli
(றிப்தி அலி) விடிவெள்ளி பத்திரிகை 16/12/20 Pg-01