இனக்குரோத வெறுப்பு அரசியல்!

அரசியலில் குறிப்பாக இலங்கை அரசியலில்த்தான் வெறுப்புப் பேச்சுகள் அதிகம் கொட்டப்பட்டு வருகின்றன. விரோதமும் இதனுடன் இணைந்து வந்துவிடுகிறது. இதற்கு தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற உரைகள் நல்ல சாட்சியாகும். இதனை ஒரு தரப்பு மாத்திரம் செய்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிவிடமுடியாதளவுக்கு எல்லோருமே நாட்டின் சட்டவாக்க மன்றத்திலேயே வெறுப்புகளையும் வெப்புசாரங்களையும், விரோதங்களையும் கொட்டுகின்றனர்.

நாட்டை நேசிக்கிறோம்; நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு நாட்டின் சட்டங்களுக்கும் எதிர்கால நோக்கங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் விரோதமாகவே காலங்காலமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள், நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாக பொது வெளியில் மார்தட்டிக் கொள்கின்ற நிலைமையொன்று இலங்கையில் காணப்படுகிறது. ஆனாலும் அவர்கள், தேசப்பற்றாளர்கள் என்றே தம்மைச் சொல்லிக் கொள்கிறார்கள்.

நாட்டின் சட்டத்துக்குள் கட்டுப்படாத தனிச்சட்டம், அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால் அதற்கு பெரும் எதிர்ப்பையும் அழுத்தங்களையும் பிரயோகித்துக் கொண்டு தம் தரப்பு மக்களை நெருக்கடிக்குள்ளேயே வைத்து நகர்வதற்குப் பெயர் அராஜகம். இதனையே இராஜாங்கம் என்கிறார்கள் போல.

நமது நாட்டுக்கு புதிய ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுடன் சேர்ந்து விடுவது, அரசாங்கம் மாறும் போதெல்லாம் ஆழும் தரப்புக்கே சார்பாக இருந்து கொள்வது, நினைத்தபோதெல்லாம் சாய்ந்து நலன்களை அனுபவித்துக் கொள்வது எனும் செயற்பாட்டுக்குப் பெயர் அரசியல்.இதுவும் நம்நாட்டில்தான் இருக்கிறது.

அரசியல் என்பது கொள்கை இல்லாதது என்பதற்கு இங்கு தான் உதாரணங்கள் அதிகமாக இருக்கின்றன. கட்சிக் கொள்கைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப்படாதவர்களும் நம் நாட்டின் அரசியல்வாதிகளேயாவர்.

இவ்வாறு இருக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவந்தார் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமட் என்று வாழ்த்துக்கள் வந்தவண்ணமிருக்கின்றன. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசுக்கும் அது போன்ற வாழ்த்துகள் குவிகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காணிகளை காணவில்லை என்பதே, இப்போது வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன், முஸ்லிம் மக்களுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். ஆனால் எதிர்முனையிலிருந்து கிடைப்பதென்னவோ வேறாக இருக்கிறது என்ற கருத்துகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

தமிழர்களும் முஸ்லிம்களும் ‘பிட்டும் தேங்காய்ப்பூவையும் போன்றவர்கள்’ என்று பிணைப்பைப் பற்றிப் பேசுபவர்கள், பரஸ்பரம் விட்டுக் கொடுப்புக்குக் கூட தயாரில்லாத நிலையில், எதனை அடைந்து கொள்ள முடியும் என்பதே கேள்வி.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த வேளை, 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்து பொத்துவில் முஸ்லிம் கல்வி வலயம், குழுத் தலைவர் பதவிகள், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலுக்கு ஆப்பு என நீண்ட பட்டியலுடன், அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் உறுப்பினர்களாக, தமிழ் மக்களிடமிருந்தும் தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தும் பிரிந்தே இருப்போம் என்று வெளிப்படையாகவே, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காண்பித்தார்கள்.

எப்போதும் பிரிந்தே இருக்கப் போகிறோம். என்று, மாற்று என்ற சொல்லுடன் விரோத, பிரிவினை மனோபாவத்தை இணைத்து வைத்திருக்கும் போது எதனையும் வெளிப்படையாகப் பேசி நகர்த்த முடியாது என்பதுதான் உண்மை.

கிழக்கைப் பொறுத்தவரையில், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவு நியமிக்கப்பட்டது முதல் அவர் பதவியிலிருந்த காலத்தில் மாகாணத்திலுள்ள அனைத்து இனங்களையும் சமனாகவே கையாண்டார். ஆனால், அதன் பின்னர் மாகாணத்தின் முதலமைச்சராக வந்தவர்கள், மாற்றான் தாய் மனோபாவத்துடன் அதிகாரத்தைக் கையாண்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருப்பதற்கு இந்தப் பிரிவினை மனோபாவமே காரணமாகும்.

இலங்கையில் இனப்பிரச்சினை உருவான காலத்தில், இடதுசாரிச் சிந்தனைகளுடனும், ஜனநாயகச் சிந்தனைகளுடனும் செயற்பட்ட பல முஸ்லிம் சகோதரர்கள் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் இணைந்து ஆயுததாரிகளாகக் கூட செயற்பட்டிருக்கிறார்கள். இப்போதும் பிரபல அரசியல்வாதியாக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கூட, ஈரோஸ் இயக்கத்தின் உறுப்பினரே. இவர் போல் பலரைப் பட்டியலிட முடியும்.

ஆனால், அதன் பின்னரான காலங்களில், அவர்கள் தமிழ் போராட்ட இயக்கங்களிடமிருந்து வேறு சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளினாலும் இன்னும் வேறு பல காரணங்களினாலும் பிரிந்து போனார்கள். அதன் பின்னர் தனித்தே செயற்படுகிறார்கள். தங்களுக்காக தனியான வலயக்கல்வி அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் என்று அமைத்துக் கொள்ள முனைந்து இப்போது பெரும் கட்டுமானமாகவே மாறிவிட்ட நிலையில், அவர்களுடைய தற்போதைய முன்வைப்புகளும் எதிர்பார்ப்புகளும் வேறு பல கருத்துகளைக் கொண்டதாக இருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற ஆயுத யுத்தமானது தமிழ் மக்களை பொருளாதார, சமூக, பாதுகாப்பு ரீதியில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. அதனைச் சாக்காக வைத்துக் கொண்டு, தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் நலன்களையும் தம்முடையதாகப் பயன்படுத்திக் கொண்டு, எல்லாவற்றையும் அனுபவிப்பவர்களாக மாற்றம் பெற்றனர்.

1992 இல் காத்தான்குடி நகர், ஏறாவூர் நகர், கோறளைப்பற்று மேற்கு, 2001இல் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு எனத் தமக்கான தனியான பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளையும் உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் அவற்றின் பரப்பு எல்லைகளை இப்போதும் தமிழர்களது பிரதேசங்களிலிருந்து அபகரித்துக் கொள்ள முனைகிறார்கள் என்பது தமிழர் தரப்பு வாதமாக இருக்கிறது.

முஸ்லிம் தரப்பினுடைய வாதம் எவ்வாறிருக்கிறதென்றால், 24.9 சதவீதம் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு 1.30 சதவீத காணிகள் தான் வழங்கப்பட்டுள்ளன. எனவே எங்களுக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப காணியைப் பிரித்துக் கொடுங்கள் என்பதாகும்.

இந்த வாதமானது, வரலாற்று ரீதியாக பார்க்கப்பட வேண்டியதாகும். 1960களில் முஸ்லிம்களின் விகிதாசாரம், 1992களில் குடியிருப்பு விகிதாசாரம், 2000ஆம் ஆண்டு, 2020ஆம் ஆண்டு என்று ஆராயப்படவேண்டும். அல்லாமல் இப்போது இருக்கின்ற சனத்தொகை அதிகரிப்புக்கு எமக்கு நிலம் கேட்பது நியாப்பாடானதா என்பது இந்த இடத்தில் தமிழர் தரப்பு நியாயம்.

என்னுடைய இனத்தின் சனத்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலம் வேண்டும் என்றால் அது பிழையானதோர் அணுகுமுறையாகும். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால், விவசாய நிலங்களை அதிகமாகக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். இந்த நில விகிதாசாரத்தினை விவசாய நிலத்துக்கும் சேர்த்துக் கொள்வதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறிவிடுகின்றனரா அல்லது மறைக்கின்றனரா என்பதே இந்த இடத்தில் கேள்வி.

தமிழ் மக்களின் நிலங்கள், விவசாய நிலங்களை விவசாயத்துக்கான உரம், விதை, கிருமிநாசினி, உழவுக்கான பணம், அறுவடைப் பணம் எனக் கொடுத்தும், தமிழர்களின் காணிகளை அபகரித்துள்ள சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அதேபோன்று தமிழர்களுடைய எல்லைக் கிராமங்களின் காணிகளை பல்வேறு உள்ளன. இப்போதும் நடைபெறுகின்றன நெருக்குதல்களை ஏற்படுத்தி, மிக மிகக் குறைந்த விலைகளின் அபகரித்த சந்தர்ப்பங்கள் என்பதே நிரூபிக்கத்தக்க உண்மைத் தகவல்.

தமிழ் மக்கள், பெரும்பான்மை சிங்கள அதிகாரத்துக் எதிராகப் போராடிக் கொண்டிருந்த அதேவேளை, தமிழ் பேசும் முஸ்லிம்களின் ஆயுத ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் என பாதுகாப்பு சார்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டே வந்தனர். இப்போதும் பலவற்றை எதிர்கொள்கின்றனர். அதிகார ரீதியான பாகுபாடுகள் காட்டப்படுவதனை, வெளிப்படையாகப் பேசுவதற்கு முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் தான் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் இனத்துவ நிலைமைகள் காணப்படுகின்றன.

மாவட்டத்தின் பல விடயங்கள் வெளியிடப்பட்டாலும் உள்ளே நடைபெற்றிருக்கின்ற பல விடயங்களை மறைத்து, தமக்கான நியாயத்தினைப் பெறவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில்தான் அதற்கான பதிலை மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிழக்கின் முதலாவது முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கியிருந்தார்.

இவையெல்லாம் ஒருவகையில் வாதமாக இருந்தாலும் தமிழர்களின் பூர்வீகம் அழிந்துவிடக்கூடாது என்ற போராட்டத்தில், சிங்களவர்களை விடவும் மிக மோசமாக தமிழர்களின் பாரம்பரியங்களையும் வரலாறுகளையும் அழிக்க முயல்வது எந்தவகையில் நியாயம் என்பதே இந்த இடத்தில் கேள்வி.

எமக்கான அரசியலை நாம் செய்யவேண்டும். அவ்வேளைகளில் ஏனையவர்களின் அரசியலுக்கு அது இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதனை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அது பெரும் தவறேயாகும்.

(மட்டக்களப்பின் ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் ‘நெக்டப்’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே அழிந்து போன ஏறாவூர் பொதுச்சந்தைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்)

லக்ஸ்மன் – தமிழ் மிற்றோர் 04/12/2021

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter