நாட்டில் கடந்த சில நாட்களில் பல பகு திகளிலும் ஆறுகள், கடல் மற்றும் நீர்நி லைகளில் மூழ்கி காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கைகள் சடுதியாகப் பதிவாகி வருகின்றன.
கண்டி மாவட்டத்தில் ஊடாக மகாவலி கங்கை பாய்ந்து செல்லும் பின்புலத்தில் மகாவலி கங்கையிலும் அதனுடன் இணைந்து கொள்ளும் சிற்றருவிகள், நீரோடைகள் மற்றும் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றமை பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இச்சம்பவங்களின் வரிசையில் கடந்த 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கெலி ஓயா கழுகமுவ பகுதியில் மகாவலி கங்கையுடன் இணையும் நில்லம்ப ஓயாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம் பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பூரணவத்தையை சேர்ந்த ஒரே குடும்பத்தை ஐந்து பேர் நில்லம்ப ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளனர். இது இரண்டரை வயது பச்சிளம் பெண் குழந்தை ஆலியா மற்றும் குழந்தையின் தாய் எஸ். அஸ்பா (வயது 20) உட்பட மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சோகத்துடன் முடிவுற்றுள்ளது. இத் துரதிஷ்டவசமான இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, இச் சம்பவத்தில் கணவர் மாத்திரமே உயிர் தப்பியுள்ளதுடன் அவருடன் சென்ற மனைவியும் மகளும் உறவினரான இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.
பேராதனை – கம்பளை பிரதான வீதியில் தொலுவை நகரை அண்டிய பகுதியில் நில்லம்ப ஓயா பாய்கின்றது. இந்த ஓயாவுக்கு குறுக்காக 1990 களில் நீரோடைக்கு குறுக்காக அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் குடிநீர் விநியோகத் திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டதன் பின்பு இந்த நீரோடைக்கு நீராடச் செல்வோரின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், தொலுவை ஊடாக செல்லும் பேராதனை கம்பளை வீதி அண்மைய ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் பிரதான வீதியில் அமைந்துள்ள நில்லம்ப பாலத்தின் அருகில் நில்லம்ப ஓயாவுக்கு இறங்கி நீராடுபவர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரி விக்கின்றனர்.
சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை இவர்கள் நீராடுவதற்கு நீரோடையில் இறங்கியிருந்த சந்தர்ப்பத்தில் நில்லம்ப ஓயாவின் நீர் மட்டம் சடுதியாக அதிகரிக்க ஆரம்பித்ததுடன் நீரின் வேகமும் அதிகரித்துள்ளதாக குடும்பத்தினர் தெரி விக்கின்றனர். இதற்கு மலைநாட்டு பகுதிகளில் பெய்த மழை காரணம் என்று கூறப்படுகின்றது. நீரோடையின் நீர்மட்டமும் நீரின் வேகமும் அதிகரிக்கும் நிலையில் நீரோடையில் இருந்த குழந்தையின் தாய் தனது இரண்டரை வயது குழந்தை சகிதம் கணவரின் உதவியுடன் வெளியேற வேண்டி முயற்சி செய்துள்ளார். இவர்கள் நீரோடையின் கரையில் ஒதுங்க முற்பட்டாலும் கூட மறுகரைக்கு சென்று வெளியேற வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இதற்காக முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தாயும் குழந்தையும் வேகமாகப் பாய்ந்து செல்லும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை அவதானித்த கணவர் நீரில் குதித்து குழந்தையையும் மனைவியையும் காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால் அவரும் அவர்களுடன் சுமார் 300 மீற்றர் தூரம் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர்களைக் காப்பாற்ற உறவினரான எம். ரஸ்பான் (வயது 21) என்ற இளைஞன் நீரில் குதித்துள்ளார். அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது மட்டுமன்றி அவர் காயங்களுடன் மீட்கப்பட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவரின் ஜனாஸா மறுநாள் திங்கட்கிழமை உடுநுவர தஸ்கரை ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் இன்னும் சில தினங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லவிருந்த நிலையில் மறுநாள் கடந்த 06 ஆம் திகதி திங்கட்கிழமை மருத்துவ சோதனைக்காக கொழும்பு செல்லவிருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள தாய் எஸ். அஸ்பா (வயது 20) வின் சடலம் நேற்றுக் காலை பேராதனையில் கரையொதுங்கியது
குழந்தை ஆலியாவின் சடலம் நேற்று புதன்கிழமை இப் பத்திரிகை அச்சுக்குச் செல்லும் வரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
சடலத்தைத் தேடும் பணிகளை நில்லம்ப ஓயா மற்றும் மகாவலி கங்கையில் பொலிஸ் மற்றும் கடற்படை சுழியோடி களின் உதவியுடன் பிரதேசவாசிகள் முன் னெடுத்து வருகின்றனர்.
இப்பகுதி பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதியாகும். சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பெரும்பான்மை சகோதரர்கள் உடனடியாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அயற் கிராமமான கழுகமுவ பகுதி முஸ்லிம் இளைஞர்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
“இச்சம்பவம் எமக்குப் பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வெளியில் இருந்து நீராடுவதற்கு பலர் வருகின்றனர். இவர்களில் பலர் இரவு 11 மணி வரை இங்கே தங்கி இருப்பார்கள். இதில் சிலர் சமூகவிரோத செயல்களில் கூட ஈடுபடுகின்றனர். இனிமேல் எவரும் இங்கு வருவதற்கு அனுமதிக்க முடியாது” என்று பிரதேசவாசியொருவர் இச்சம்பவத்தை தொடர்ந்து கருத்து தெரிவித்தார்.
நில்லம்ப பகுதியை அண்டிய பகுதிகளை நாடி வெளிப்பிரதேச முஸ்லிம்களும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இதனால், ஏற்படும் விபரீத சம்பவங்களை சுட்டிக்காட்டி நில்லம்பயை அண்டிய கழுகமுவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம்கள் இங்கு நீராடச் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு ஒரு வருடத்திற்கு முன்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
“நாம் இப்பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறலாம். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை எப்படி அறிவுறுத்துவது. இவர்கள் இங்கு வந்து இடம் சூழ்நிலை தெரியாது ஆற்றில் இறங்குவது உயிரிழப்புக்களுடன் முடிவடைகின்றது. இப்படித்தான் கொத்மலை, உலப்பனை, கம்பளை, பழைய எல்பிடிய, கழுகமுவ பகுதிகளில் அண்மைக் காலங்களில் வெளிப் பிரதேசவாசிகள் பலர் மகாவலி கங்கையில் நீராட இறங்கி பலர் உயிரிழந்துள்ளனர்” என்று பிரதேச பிரமுகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
நகரப் பகுதிகளில் நிலவும் நெருக்கடிகள், மன அழுத்தம், இயற்கை பகுதிகளை நாடிச் செல்லும் இயல்பான மனப்பாங்கு முதலானவை இவ்வாறான பகுதிகளை விடுமுறை நாட்களில் நாடி வரச் செய்கின்றன. மரணம் என்பது ஒரு வரை எப்போது? எப்படி? அணைத்துக் கொள்ளும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. இது யதார்த்தம். ஆனால் ஆபத்து ஏற்பட முன்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது எமது பொறுப்பாகும். இப்பகுதிகளில் ஆபத்துமிக்க இடங்களை அடையாளப்படுத்தி முன்னெச்சரிக்கை பலகைகளாவது பொருத்துவ தற்கு உள்ளூராட்சி மன்றங்கள் முன்வர வேண்டும்.
கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் காத் தான்குடியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று எல்லாவல நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் இளம் தந்தையும் மகனும் மகளும் அவ்விடத்திலேயே மூழ்கி மரணித்த சம்பவத்தையும் இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தம். அதேபோன்று கடந்த வாரம் திருகோணமலையில் இரு வேறு சம்பவங்களில் இரு தமிழ் சிறுவர்களும் இரு முஸ்லிம் சிறுவர்களும் இவ்வாறு கடலில் குளிக்கச் சென்று மரணித்துள்ளனர்.
நீர் நிலைகள் குறித்த போதிய தெளிவும் அனுபவமும் இல்லாதவர்கள் இவ்வாறான இடங்களுக்குக் குளிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் குளிக்க முயற்சிக்க வேண்டும். இன்றேல் இவ்வாறான பெறுமதிமிக்க உயிர்களை இழந்துவிட்டு நாம் வாழ்நாளெல்லாம் கவலைப்பட வேண்டியேற்படும்.
எம்.எம்.எம்.ரம்ஸீன் – கெலிஓயா – விடிவெள்ளி (9/12/21)