ATM மையங்களில் இருந்து மீளப்பெறப்படும் பணத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கும் வகையில் PickMe Digital Mobility Solutions Lanka தனியார் நிறுவனத்துடன் பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளதாக சம்பத் வங்கி அறிவித்துள்ளது.
இந்த வகையிலான ஒரு தீர்வு வங்கித் துறையில் இதற்கு முன் கிடைக்கப்பெற்றதில்லை எனவும் வாடிக்கையாளர் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு வங்கி என்ற வகையில், இந்த பங்குடமை மேற்கொள்ளப்பட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போதைய ஊரடங்குச் சட்டத்தினால், இலங்கையில் பலரும் கையில் போதுமான பணம் இல்லாமல் அல்லல்படும் இத்தருணத்தில், இந்த தனித்துவமான தீர்வு அவர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் பண விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள, அதே சமயம், வாடிக்கையாளர்களை கொவிட்10 தொற்று அபாயத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
மேலும், கூடுதல் நிவாரணமாக சம்பத் வங்கி இந்த சேவைக்கான வங்கிக் கட்டணத்தில் 50% விலக்களித்துள்ளது. எந்தவொரு வாடிக்கையாளரும் தமக்கு இடைக்க வேண்டிய பணத்தை தங்கள் வீட்டு வாசலில் பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் தங்களு Sampath Viswa கணக்கு மற்றும் PickMe மொபைல் பயன்பாடு ஆகியவற்றின் உதவியுடன் மாத்திரம் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மிகவும் இலகுவான சில படிமுறைகளைப் பின்பற்றி, ஒரு ‘Mobile Cash’ பரிவர்த்தனையை வாடிக்கையாளர் உருவாக்கி, அதன் பின்னர் PickMe App இனுள் உள்நுழைந்து ‘Flash’ இன் கீழ் “I want to Receive” என்பதை தேர்ந்தெடுத்து ‘Cash from ATM’ என்பதைக் கிளிக் செய்யவும். வாடிக்கையாளர் அதன் பின்னரே சம்பத் வங்கியிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட குறுந் தகவல் செய்தியை (எஸ்எம்எஸ்) நியமிக்கப்பட்ட PickMe ஓட்டுனருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவர் பணத்தை வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் பத்திரமாக கொண்டு வந்து ஒப்படைப்பார்.
வெற்றிகரமாக பணம் மீளப்பெறப்பட்டு, ரசீட் ஒன்றுடன் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சமயத்தில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் சரியான தொகை பெறப்பட்டிருப்பதை வாடிக்கையாளர் உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் ஓட்டுநருக்கு பணத்தைச் செலுத்தி அவரது சேவை தொடர்பான மதிப்பீட்டை வழங்கிய பிறகு, பரிவர்த்தனை முடிவுறுத்தப்படும்.
ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டால் அல்லது வழங்கப்பட்ட தொகை கோரப்பட்ட தொகையுடன் முரண்படுவதாக இருந்தால், வாடிக்கையாளர் 1331 மூலமாக PickMe இல் வாடிக்கையாளர் சேவையை அழைத்து அல்லது சம்பத் வங்கியின் வாடிக்கையாளர் சேவை துரித அழைப்பு இலக்கமான 0112303050 மூலமாகவோ முறைப்பாடு செய்து இதற்கு தீர்வுகாண முடியும்.
இந்த செயல்முறையை விவரிக்கும் கூடுதல் விவரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களின் பட விளக்கத்தை sampath.lk/pickme மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
ATM மையங்களில் இருந்து பணத்தை மீளப்பெற்று இந்த சேவைக்கு உதவுகின்ற pickme ஓட்டுநர்கள் இதற்கென விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், இது செயல்முறையின் கட்டுக்கோப்பினை உறுதி செய்கிறது. ATM மையங்களின் செயல்பாடுகள் தொடர்பில் ஓட்டுநர் ஒருவருக்கு சந்தேகம் இருப்பின், இது தொடர்பான இலகுவான படிமுறைகளை அவருக்கு விளக்கும் வகையில் சம்பத் ATM மையங்களில் விசேட அறிவுறுத்தல் ஸ்டிக்கர்கள் வைக்கப்பட்டுள்ளதாவும் சம்பத் வங்கி தெரிவித்துள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஓட்டுனர் ஒருவர் ATM மையத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை அங்கீகார குறியீட்டை தவறாக உள்ளீடு செய்தால் பரிவர்த்தனை தானாகவே முடக்கப்படும்.
இந்த சேவையை சம்பத் வங்கி வாடிக்கையாளர்கள் வாரம் முழுவதும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், தற்போது கொழும்பு 1 முதல் 15 வரை, அதனை அண்டியுள்ள புறநகர்ப் பகுதிக்கு மாத்திரம் ஆரம்பித்துள்ளதாகவும் வெகு விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.