கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தை திட்டமிட்ட கொலையாகவே கருதுகின்றோம் – அரசாங்கம்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு மட்டுமல்ல நாட்டின் சட்டத்திற்கு அமைய இது கொலை.

ஆகவே இந்த மரணங்களை நாம் கொலையாகவே கருதுகின்றோம், இதனுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர், இது குறித்தும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த அசம்பாவிதத்தையும் எமது தலையில் சுமத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டியது நல்லாட்சியாகும்.

மதிப்பீடு செய்யாது, கேள்விமனுக்கோரல் விடாது அடிக்கல் நாட்டினர். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மதிப்பீடு செய்து, கேள்விமனுக்கோரலுக்கு விடப்பட்டு பாலத்தில் ஒரு பகுதியை புனரமைக்கவும் மக்களின் பாவனைக்கு விட வெகு விரைவில் திருத்த நடவடிக்கை எடுத்தோம். ஜூலை மாதம் இது குறித்து இம்ரான் மஹரூப் எம்.பி கேள்வியும் எழுப்பியிருந்தார்.

அதுமட்டுமல்ல பாலம் திருத்த பணிகள் காரணமாக மாற்று வீதியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மாற்று வீதி 3 கிலோமீட்டர் தூரம்.

ஆகவே மக்கள் அந்த மாற்றுப்பாதையை பாவிக்க விரும்பவில்லை. அதேபோல் படகு சேவையும் மாநாகரசபை மூலமாகவே இயங்கியுள்ளது. கிண்ணியா நகரசபையில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்துள்ளது. அவர்கள் தான் படகு சேவைக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். ஆகவே எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம்.

அதேபோல் படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு, ஆகவே நாட்டின் சட்டத்திற்கு அமைய இது கொலை, இதனை அரசியல் பக்கம் திருப்ப வேண்டாம், அதேபோல் எம்மீது பழி சுமத்தவும் வேண்டாம். நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கு தீர்வு வழங்க முடியவில்லை, நாம் முன்வந்து இவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

எவ்வாறு இருப்பினும் இந்த செயற்பாடு கொலையாகும். யார் பேசினாலும் இழப்புக்கு ஈடு இல்லை. யார் குற்றம் செய்திருந்தாலும், அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது திட்டமிட்ட கொலை என்பதே எமது நிலைப்பாடு என்றார். 

-வீரகேசரி- (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter