இலங்கையில் அமுலில் உள்ள இஸ்லாமிய சட்டங்கள் சம்பந்தமான போதிய அறிவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இல்லாமை ஒரு பெரும் குறையாகும்.குறிப்பாக இஸ்லாமிய விவாக, விவாகரத்து சட்டம் சம்பந்தமான அறிவு பொதுமக்கள் இடத்தில் இல்லாமமையானது காதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளில் பாரிய சந்தேகங்களை சம்பந்தப்பட்டவர்களிடத்தில் உருவாக்குகின்றது. என்னைப்பொறுத்தவரையில் காதி நீதிமன்றங்கள் பாரிய பிழைகளை விடுவததாக தெரியவில்லை .
ஒருசில காதி நீதிமான்கள் தவறுகளை இழைக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எல்லா காதி நீதிவான் களும் அவ்வாறு இல்லை. நீதவான்கள் பிழைகள் விட மாட்டார்கள் என்று யாரும் வாதிக்க முடியாது. ஏனைய நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் பல பிழைகளை தீர்ப்புகளில் விடுகின்றார்கள். அதற்குத்தான் மேல் முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
காதி நீதவான்களின் தீர்ப்புகளை மேன்முறையீடு செய்வதற்கு காதிகள் சபை என்று ஒன்று இருக்கின்றது. இதனை பற்றிய போதிய அறிவும் பொதுமக்கள் இடத்தில் இல்லை. காதிகள் சபையின் தீர்ப்புகளை கூட அங்கிருந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது .ஆனால் இஸ்லாமிய விவாக, விவாகரத்து சட்டத்தின் படி காதி நீதி வான்களின் தீர்ப்புகளுக்கு எதிராக எவ்வாறு மேன்முறையீடு செய்யலாம் என்பது சம்பந்தமான போதிய அறிவு எமது மக்கள் இடத்தில் இல்லாமையும் ஒரு பாரிய குறையாகும்.
குறிப்பாக ‘தலாக்’ என்ற முறையில் விவாகரத்தை கணவன் கூறும்போது விவாகரத்துக்கான காரணத்தை கணவன் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது இஸ்லாமிய சட்டத்தில் உள்ள ஒரு அடிப்படை விடையம் ஆகும். ஆனால் தலாக் விவாகரத்தை காதி நீதவான் வழங்கும்போது மனைவி நீதவான் மீது குறை கூறுவார். அவர் தனது பக்கத்து நியாயத்தை கருத்தில் எடுக்கவில்லை என்று கூறும் சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.
ஏனைய மதத்தவர்களின் விவாகரத்து வழக்குகளில் சட்டத்தரணிகள் மூலமாக ஆஜராவதற்கு சந்தர்ப்பம் இருந்தாலும் இஸ்லாமிய விவாக விவாகரத்து வழக்குகளை விசாரிக்கும் காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு சந்தர்ப்பம் இல்லாமையும் ஒரு பெரும் குறையாகும். இங்கும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.