சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை – அஜித் நிவர்ட் கப்ரால்

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை கிடையாது.

நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் மீண்டும் நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிடுவதுடன், அவர்களின் நிபந்தனைகளுக்கும் அடிபணிய நேரிடும்.

அது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இலக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டும் என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா ஆகியோர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடும் போது அவர்களின் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும். அந்த நிபந்தனைகள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பெரும் தடையாக அமையும். ஆகவே நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கடன் பெறுவதற்கு ஒருபோதும் தயாராகவில்லை.

டொலர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றதான் காரணமாகவே நெருக்கடிக்குள்ளானது. தற்போதைய அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகளை எதிர்தரப்பினர் மேற்கொள்கிறார்கள்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, மக்களுக்கான நலன்புரி திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்களை விரிவுப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதாரத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

சவால்களை வெற்றிக்கொள்வதற்காக நாட்டின் தேசிய பாதுகாப்பையும்,சுயாதீனத்தையும்,மக்களுக்கான நலன்புரி திட்டங்களையும் சர்வதேச அமைப்பிடம் விட்டுக்கொடுக்க முடியாது.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய தொழிற்துறையை மேம்படுத்தல்,ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்,கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக முதலீடுகளை ஊக்கவித்தல் ஆகியவற்றின் ஊடாக பொருளாதாரத்தை முன்னேற்றுவது எமது பிரதான இலக்காகும்.

2008 தொடக்கம் 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெருமளவிலான கடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அப்போதைய நெருக்கடியான சூழல் தற்போது ஏற்படவில்லை.தற்போது வெளிநாட்டு கடன் மற்றும்; தேசிய கடன்களின் வீதத்தை குறைப்பது பிரதான இலக்காக உள்ளது என்றார்.

-வீரகேசரி-(இராஜதுரை ஹஷான்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter