“காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்” – ஒரு பார்வை

இஸ்லாமிய உறவுகள் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை கட்டாயம் வாசியுங்கள். பல நிதர்சனங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

2013 ம் ஆண்டு காலப்பகுதி அது. “இலங்கை அபிவிருத்திக்கான ஊடக அமைப்பில்” வானொலி ஒருங்கிணைப்பாளராக இணைந்து கொள்கிறேன். என்னை மதித்து, எனக்கான அங்கீகாரம் தந்து என்னையும் அந்தக் குழுமத்தில் இணைத்துக் கொண்ட, நான் எப்பொழுதும் மதிக்கின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் MC ரஸ்மின் அவர்களை இந்த வேளையில் நன்றியோடு நினைவு படுத்திக் கொள்கின்றேன்.

ஆரம்ப என்னுடைய பயிற்சிக் காலத்தில் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். நிறைய விடயங்கள் எனக்கு கற்றுத் தரப்பட்டது. காலம் செல்லச் செல்ல எனக்கான பொறுப்புகளும் என்னை நம்பி முன் வைக்கப்பட்டன. என்னுடைய முதல் “ப்ரொஜக்ட்” ஆக வானொலி கலைஞர்களை அழைத்து நாடகப்பிரதிகள் ஒலிப்பதிவுக்கான ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன். அந்தக் கடமையை சரிவரச் செய்தேன் என்பதில் எனக்குள் ஆத்ம திருப்தி இருக்கிறது.

அடுத்த ப்ரொஜக்ட் ஆக இலங்கையினுடைய காதி நீதிமன்றங்கள், விவாகம், விவாகரத்து, காதி நீதிமன்றம் வருபவர்களது பிரச்சினைகள் சம்பந்தமான ஆய்வு என மிகப்பெரிய பொறுப்பொன்றை என்னை நம்பி எமது பணிப்பாளர் ரஸ்மின் நாநா ஒப்படைத்து, மன தைரியத்தையும் தந்துதவினார்.

அப்போது இலங்கையில் சுமார் 64 காதி நீதிமன்றங்களும், காதி நீதிபதிகளும் இலங்கையின் நான்கா புறத்திலும் இருந்தனர். நான் அவர்களது தகவல்களைத் திரட்டி சுமார் இரண்டு மாத காலம் முழுமையான கள விஜயத்தில் ஈடுபட்டு என்னாலான தகவல்களை திரட்டிக் கொண்டேன்.

64 காதி நீதிபதிகளையும் சந்தித்தேன். அதிகமான காதி நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறும் நாளில் காதி நீதிபதிகளோடு கூட இருந்து வழக்கின் தன்மைகளை அவதானித்தேன். அதன் வெளிப்பாடாகவே இந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்றைய நாட்களில் காதி நீதிமன்றங்களில் தகுதியான காதி நீதிபதிகள் இருக்கவில்லை என்பதே அநேகரின் குற்றச்சாட்டாய் இருந்தது. நானும் அதிகமான காதி நீதிபதிகளை செவ்வி கண்டதில் அவர்களுக்கும், சட்டத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் பெரிதாக இல்லை. ஏதோ ஒரு ஓய்வு பெற்ற அதிபராகவோ, அல்லது ஆலிமாகவோ இருந்தால் அவர் காதி நீதிபதியாக நியமிக்கப் பட்டிருப்பார். எங்கோ ஒரு ஊரில் மட்டும் ஒரு சட்டத்தரணி காதி நீதிபதியாக அறிமுகமாகினார். (நான் சொல்லும் விடயங்கள் 2013 ல் நடந்தவைகள். இன்றுகளில் மாற்றங்கள் நடந்திருந்தால் சந்தோசம்) 

அடுத்து அதிகமான காதி நீதிபதிகள் ஆண்கள் பக்கத்திற்கு சார்பு அதிகம் என்ற குற்றச்சாட்டை சில பாதிக்கப்பட்ட பெண்கள் முன் வைத்தனர். அது சம்பந்தமாக ஏன் இப்படி நடந்தது? என பாதிக்கப்பட்ட பெண்களிடமே கேட்டேன். சில விடயங்களை எமக்கு நேரடியாக காதி நீதிபதியோடு பேச முடியாமல் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் சில உண்மைகளை மறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. நாம் உண்மைகளை மறைக்கின்ற நேரம் எமது கணவன்மாருக்கு அது சார்பாக அமையும் நிலையில் காதி நீதிபதிகளின் தீர்ப்பும் சார்பாக மாறுகிறது என பெண்கள் முறையிட்டனர்.

காதி நீதிமன்றங்களில் ஜுரியாக ஒரு பெண் இருக்க வேண்டும் என பெண் தரப்பு எதிர் பார்த்தது. சில இடங்களில் ஒருசில காதி நீதிபதிகள் பெண்களது அந்தரங்க விடயங்களை தன்னோடு நேரடியாக பேசுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனை பல பெண்கள் வன்மையாக கண்டித்துள்ளதோடு தனக்கு விவாகரத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி கீழ் சாதிகளிடம் வழக்குத் தேவையில்லை என வழக்கை வாபஸ் செய்த சில சகோதரிகளையும் நான் சந்தித்தேன். அதேவேளை பக்குவமாக தன்னுடைய மனைவியை வைத்து பெண்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு சாதகமான தீர்வினை வழங்கிய சில காதி நீதிபதிகளையும் நான் சந்தித்தேன். 

சில காதி நீதிபதிகளுக்கு அகங்காரத் தொனி காணப்பட்டது. ஒரு பெண் மிகவும் வறிய குடும்பத்தவளாக இருந்தால் அவள் மீது ஒரு அகங்காரத்தைப் பயன்படுத்தி அவளை அடக்கி அவளுக்குப் பாதகமாக தீர்ப்பு சொன்ன ஓரிருவரும் இருந்தனர். சில காதி நீதிமன்றங்களில் பச்சை பச்சையாக வார்த்தைகள் கடுந்தொனியில் கேட்கப்பட்டு பெண்களை தலை குனிய வைத்து ஆண் சமூகத்தை உசுப்பேற்றிய ஒருசில காதி நீதிபதிகளும் அன்றுகளில் இருந்தனர்.

கேக் பெட்டிக்காகவும், வாழைப்பழ சீப்புக்காகவும் நேர்மை தவறிய ஒரு சிலரும் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியம் சொன்னார்கள். ஆண் வர்க்கம் அவசரப்பட்டு கேக், வாழைப்பழம், மஞ்சள் கவர் கொண்டு முந்தினால் அவர் என்ன தவறு செய்திருந்தாலும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு அமையப் பெறுகிறது. இப்படியான சம்பவங்களும் ஒருசில இடங்களில் நடந்தேறியுள்ளது.

சில பெண்கள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை முகம் கொடுத்து விவாகரத்து வரை வந்தால் அவர்களது பிரச்சினைகளை எல்லாம் கேட்டறிந்து கொண்டு அவரை தனியாக சந்தித்து தமது  காம உணர்வை தீர்த்துக் கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களை வீடு தேடி வந்த ஒரு சில காதி நீதிபதிகளின் சம்பவங்களையும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீரோடு முன் வைத்தனர்.

சில பெண்களுக்கு நியாயமே இல்லாமல் மறுமணம் செய்து கொள்ள பல ஆண்களைத் தூண்டி விட்ட ஒரு சில காதி நீதிபதிகளையும் நான் சந்தித்தேன்.

நான் சந்தித்த சுமார் 64 காதி நீதிபதிகளில் அநேகர் நல்ல முறையில் காதி நீதிபதிகளாக நடந்து கொண்டாலும் அநேகர் நெறி தவறி, இறைவன் கட்டளை மறந்து, நீதம் மறந்து செயற்பட்டார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.

காதி நீதிபதிகளின் தீர்ப்பில் திருப்தி கண்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்த பெண்களையும், சில காதி நீதிபதிகளது பக்கச்சார்பான தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத பெண்கள் அந்தக் காதி நீதிபதிகளுக்கு ‘Bபதுவா’ செய்ததையும் என் காதால் கேட்டேன்.

(நான் மேற்சொன்ன விடயங்கள் எல்லாம் 2013 ம் ஆண்டு நடந்த, என்னால் பதியப்பட்ட, திரட்டப்பட்ட தகவல்களே. இப்பொழுதுகளில் மேற்சொன்ன விடயங்களில் பூரண மாற்றம் கண்டிருந்தால் கோடி சந்தோசமே…) 

ஆக, காதி நீதிமன்றத்தில் அல்ல, காதி நீதிபதிகளால் தான் எங்கோ தவறு நடக்கிறது என்பது யதார்த்தமான உண்மை. 

இனி,

காதி நீதிமன்றங்கள் மீது இப்போது ஒரு ஓரக்கண் பார்வை இருக்கும் நிலையில் எல்லாம் தெரிந்தும் நான் மௌனியாக இருப்பது எனக்கு சரியென்று படவில்லை. அதிக இடங்களில் கணவன், மனைவி பிரச்சினை வந்த பொழுதுகளில் எல்லாம் மாற்று மத பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள் எல்லாம் நீங்கள் உங்கள் இஸ்லாமிய முறைப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என காதி நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவும் நான் கேட்டறிந்த உண்மை. நிலைமை இப்படி இருக்க காதி நீதிமன்றம் தொடர்பில் முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் அவதானமாக இருப்பதோடு முடியுமான வரை தெளிவான பதில்களையும் முன் வைக்க வேண்டும்.

காதி நீதிமன்றங்கள் ஒரு போதும் பிரச்சினை அல்ல. தகுதியான காதி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் இல்லை என்பதே எமது நாட்டிலுள்ள பிரச்சினை. இந்த காதி நீதிபதிகளை நியமிப்பவர்கள் யார் என்பதே எனக்குள் அந்த ஆய்வை செய்த நாளிலிருந்து எழுகின்ற கேள்வி. உண்மை தான். எந்தத் தகுதியின் அடிப்படையில் காதி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்?

மாற்றுமத பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள் எமது காதி நீதிமன்றங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறதா என்று தெரியாது. அப்படி இல்லை என்றால் அந்த நம்பிக்கையை எல்லாம் தகர்த்து உடைத்தவர்கள் யார்?

அன்றுகளில் ஒரு காதி நீதிபதிக்கான மாதாந்த சம்பளம் 11 ஆயிரம் ரூபாய் என்றும் அதில் மூவாயிரத்தை காரியாலய செலவுக்குப் பயன் படுத்த வேண்டும் எனவும் சில காதி நீதிபதிகள் முறையிட்டிருந்தார்கள். இந்த சம்பளம் தனக்குத் திருப்தி இல்லை எனவும், இதைச் செய்ய பிரதேசத்தில் வேறு யாரும் இல்லை என்பதால் தான் பொறுப்பெடுத்து செய்வதாகவும் சில காதி நீதிபதிகள் கருத்துக்களை முன் வைத்தனர்.

நிலைமைகள் எல்லாம் இப்படி இருக்க காதி நீதிமன்றத்தை இல்லாமலாக்கவோ, வெறுத்தொதுக்கவோ எந்த முஸ்லிமுக்கும் அவசியம் இல்லை. இஸ்லாம் சொன்ன ஷரீஆ சட்டங்களும், நாட்டினுடைய பொதுவான சட்டங்களும் அங்கே முழுமையாக முன்னெடுக்கப் படுகின்றன.

அப்படியாயின் இன்றுகளில் காதி நீதிமன்றங்கள் எனும் பெயரில் ஏன் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றனர். அநேக காதி நீதிபதிகள் விடும் தவறே இதற்கு மிகப்பிரதானமான காரணமாக இருக்கிறது. இனி, நாம் என்ன செய்யலாம்? சமூக வலைத்தளங்களில் கோஷம் எழுப்புவதால் லைக் விழுமே தவிர மாற்றங்கள் ஒன்றும் இடம்பெறப் போவதில்லை.

இலங்கையில் உள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் குழு இது பற்றி மார்க்க அறிஞர்களோடு கலந்தாலோசித்து மிக நுணுக்கமான முறையில் நல்ல தீர்வொன்றை எடுக்கும் பட்சத்தில் காதி நீதிமன்றங்கள் தொடர்பில் எழுகின்ற சர்ச்சைகளை இல்லாதொழிக்கலாம் என்பது எனதான நம்பிக்கை.

அதுவரையில் நான் அல்லது, என்னுடைய “பிறைநிலா” ஊடக வலையமைப்பு மீண்டும் ஒருமுறை தகவல்கள் திரட்டி இலங்கையில் உள்ள காதி நீதிமன்றங்கள் தொடர்பிலும், காதி நீதிபதிகள் தொடர்பிலும் முழுமையான ஆவணம் ஒன்றை செய்து சமூகத்துக்கு முன் வைக்க விரும்புகிறேன்.

வெறுமனே நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், மரணித்தோம் என்றில்லாமல் சமூகத்துக்கு ஏதாவது நலவைச் செய்துவிட்டு இறைவனடி சேர வேண்டும் எனும் நப்பாசையில் இந்த ஆவணப்படுத்தலுக்கு என்னைக் களமிறக்க நான் தயாராகிறேன்.

ஆனால் எமது முஸ்லிம் சமூகம் எமதான அல்லது எனதான இந்த முயற்சிக்கு எனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் உதவ வேண்டும். சட்ட ஆலோசனைகள் என்ற ரீதியில் உதவ வேண்டும். சிறந்த வழிகாட்டல்கள், ஆலோசனைகள் என்ற ரீதியில் உதவ வேண்டும். அப்படி நீங்கள் கைகோர்ப்பீர்களேயானால் இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் காதி நீதிமன்றம் தலை நிமிர்ந்து நாடு பூராகவும் பேசப்படலாம். இது எனதான பணி அல்ல. நம் சமூகத்தின் மீதான பணி. எனவே வாருங்கள் நல்லதொரு தெளிவை நாம் புரிந்து கொண்டு மற்றவர்களையும் புரிய வைப்போம்.

நான் மேற்சொன்ன சில காதி நீதிபதிகள் சம்பந்தமான விடயங்கள் எல்லாம் 2013 ம் ஆண்டு காலப்பகுதிக்குரியதே. இப்பொழுது அதில் அநேக காதிநீதிபதிகள் காலஞ்சென்றிருக்கலாம். நான் அவர்களை சந்திக்கும் போதே அநேகர் வயதானவர்களாக இருந்தனர். இப்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய காதி நீதிபதிகள் நேர்மையாக நடந்து கொள்பவர்களாக இருந்தால் உயர்ந்த அல்லாஹ் அவர்களது சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்.

நேரம் எடுத்து, சமூகம் சிந்திக்க வேண்டும் என இந்த சம்பங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். எனவே இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்த நீங்கள் ஒரு மறு மொழியாக இதற்கு என்ன செய்யலாம்? உங்களது பங்களிப்பு என்னவாக அமையப் போகிறது? என்பதை சொல்லுங்கள். நாமாக மாறும் வரை மாற்றம் நிகழப் போவதில்லை.

இது எனக்கோ, எமக்கானதோ அல்ல. அதையும் மீறி எமது சந்ததிக்கானது என்பதை நினைவில் கொண்டு உங்கள் பதில்களை முன் வையுங்கள்.

காதி நீதிமன்றங்கள் எங்களுக்குத் தேவை. அதையும் விட அதற்குத் தகுதியான, தரமான காதி நீதிபதிகளையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter