பஹல கடுகன்னாவையில் இருந்து மூடப்பட்ட கண்டி – கொழும்பு வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்றும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.
காலநிலை மற்றும் வீதியின் நிலைமையைத் தொடர்ச்சியாக அவதானித்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகன்னாவ பிரதேசத்துடன் மூடப்பட்டுள்ள பகுதியைத் திறப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று(12) தீர்மானிக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால், நேற்று முன்தினம் இரவு 10 மணிமுதல், கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவ பகுதி மூடப்பட்டது.இந்தநிலையில், இன்று காலை 9 மணிவரை அந்த வீதியை மூடி வைப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, கடுகண்ணாவை பிரதான வீதியில், மண்மேடும், பாறைகளும் சரிந்து வீழ்ந்தன.
இந்த நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டன.இதையடுத்து, போக்குரவரத்து தடையை அறிவித்து, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும் என நெடுஞ்சாலை அமைச்சு அறிவித்திருந்தது.
இதற்கமைய, கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணிக்கும் வாகனங்கள், அம்பேபுஸ்ஸ ஊடாகக் குருநாகல் பிரவேசித்து, கட்டுகஸ்தோட்டை கலகெதர ஊடாகவும், கேகாலையிலிருந்து பொல்கஹவெல – குருநாகல், கலகெதர கட்டுகஸ்தொட்டை ஊடாகவும், மாவனெல்லையிலிருந்து ரம்புக்கனை – ஹதரலியத்த – கலகெதர, கட்டுகஸ்தோட்டை ஊடாகவும், மாவனெல்லையிலிருந்து ஹெம்மாதகம கம்பளை வழியாக – பேராதனை ஊடாகவும் கண்டிக்கு பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்தார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், கட்டுகஸ்தொட்டை கலகெதர – குருநாகல் ஊடாகவும்,கட்டுகஸ்தோட்டை – கலகெதர – ரம்புக்கன ஊடாக கொழும்பு கண்டி பிரதான வீதி வழியாகவும் பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நிலவும் காலநிலையை கருத்திற்கொண்டு வீதியின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆலோசனையின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-தமிழன்.lk