அக்குறணை நகரின் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றான மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுத் தரும் நோக்கில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த வகையில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் முன்மொழிவுகளுடனான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மழைக் காலங்களில் அக்குறணை நகரில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்கான முக்கிய கலந்துரையாடலொன்று கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்குரணை, பத்தும்பறை, பூஜாபிட்டிய, ஹாரிஸ்பத்துவ மற்றும் தும்பனை பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனகமவின் ஒருங்கிணைப்புச் செயலாளர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச் .அப்துல் ஹலீமின் ஒருங்கிணைப்புச் செயலாளர், மத்திய மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் கண்டி மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் கருத்துத் தெரிவிக்கையில், அக்குறணையில் பெய்யும் கடும்மழை காரணமாக பிங்கா ஓயாவின் நீர்மட்டம் வீதியளவில் உயர்ந்து ஏ-9 பிரதான வீதி உள்ளிட்ட அக்குறணையுன் பல பிரதேசங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இந்த அனர்த்தத்தின் மூலம் அக்குறணை வாழ் மக்கள் மட்டுமல்ல, இந்நகரை கடந்து செல்லும் அனைத்து பொதுமக்களும் கஷ்டத்துக்குள்ளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆகவே, இப்பிரதேசத்தில் உள்ள முறையற்ற கட்டடங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான கட்டட நிர்மாணங்களின் போது அதை உடன் தடுத்து நிறுத்தியிருந்தால் இவ்வாறு பாரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. மாற்றுவழிகளை கண்டறிந்து, அதனை முதலில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர பெர்னாண்டோ அங்கு உரையாற்றுகையில் “சிறிய கால்வாய்கள் மூலம் பிங்கா ஓயாவில் கலக்கப்படும் நீரை கட்டுப்படுத்தல் அல்லது இல்லாமலாக்குதல், ஓடையின் இருமருங்கிலும் வடிகால்கள் அமைத்தல், திடீர் வெள்ளத்தை தடுக்க துனுவில சந்திக்கு அருகில் உள்ள பாலத்திற்கு பதிலாக மாற்றுப் பாலம் அமைப்பது, ஏ-9 வீதியில் வடிகால் அமைப்பை உருவாக்குதல், பாலங்களுக்கு அடியில் எஞ்சியிருக்கும் மணலை அகற்றுதல், மணல் மற்றும் சேறு குவிவதற்குக் காரணமான மூங்கில் புதர்களை அகற்றுதல், நிர்மாணங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அனுமதியற்ற மற்றும் முறைசாரா நிர்மாணங்களை அகற்றுதல் போன்ற தீர்வுகள் கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டன எனக் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண ஆளுநர் உரையாற்றும் போது, இது தொடர்பில் தற்போது இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். சுற்றுச் சூழலுக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொள்பவர்கள் இயற்கையிலிருந்து தப்ப மாட்டார்கள். இதற்கான உதாரணங்களை சமீப காலங்களில் நாம் கண்டு கொண்டோம். ஆகவே, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு நடைமுறைத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில சட்ட கட்டமைப்புகளில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கான சூழ்நிலையை மேம்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தலைமையிலான குழு இரண்டு வாரங்களுக்குள் முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையையொன்றை சமர்ப்பிக்கும்படி மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
(எம்.ஏ. அமீனுல்லா)– தினகரன் பத்திரிகை 13-11-2021 Page 05