3 சிறுமிகளும் வீட்டிலிருந்து வெளியேறியமைக்கான முழுமையான காரணம்

வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு 12 ஐ சேர்ந்த மூன்று சிறுமிகளும் 48 மணி நேரத்தின் பின்னர் வீடு திரும்பிய நிலையில், அவர்கள் வீட்டிலிருந்து அவ்வாறு களவாக செல்ல காரணம் பொலிஸ் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

  வீடு திரும்பிய மூன்று சிறுமிகளும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, அங்கு வைத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்,  தாம்  எதிர்க்காலத்தில் நடனத் தாரகையாக ஜொலிக்கும் நோக்கில் நடனம் பயில்வதற்கான ஆசையில் வீட்டை விட்டு இவ்வாறு வெளியேறியதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ‘ வீரகேசரிக்கு ‘ தெரிவித்தார்.

இஸ்லாமிய சூழலில் வளர்ந்த இந்த மூன்று சிறுமிகளும்,  இசை மற்றும் நடனம் மீது கொண்ட ஆவலால், தமது கனவுகளை மெய்ப்பிக்க இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ள நிலையில்,  அம்மூவரும் தற்போதும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 எவ்வாறாயினும் இந்த சிறுமிகள், சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘ இந்த மூன்று சிறுமிகளுக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை என தெரிகிறது. எனினும் அதனை உறுதி செய்துகொள்வதற்காக நாம் அவர்களது உள, உடல் ரீதியிலன ஆரோக்கியத்தை உறுதி செய்ய சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுக்கு அவர்களை  உட்படுத்தியுள்ளோம்.  

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் அவசியமாக இருப்பின் அது தொடர்பில் செயற்பட தயாராகவே உள்ளோம்.’ என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கடந்த 8 ஆம் திகதி திங்கள் முதல் காணாமல் போயுள்ளதாக  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 ஆம் திகதி திங்களன்று முறையிடப்பட்டுள்ளது.

காணாமல் போன மூன்று சிறுமிகளில் இருவரின்  தாயார் செய்த இந்த முறைப்பாட்டுக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நேற்று முன் தினம் (9)கொழும்பு பிரதன நீதிவான் புத்திக் சி ராகலவுக்கும்  பி அறிக்கை ஊடாக அறிவித்தனர்.

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  பமுனு ஆரச்சி, சிறு முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னகுமார, குற்ற விசரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  உடுவெல்ல மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.பி. ரம்யசிறி ஆகியோர் உள்ளடங்கிய விஷேட குழுவினர் ஊடக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் கொழும்பு மத்தி சிறுவர் மற்றும் மகளிர் விசாரணைப் பிரிவும் விசாரணைகளில் இணைந்தது.

 தனது கையடக்கத் தொலைபேசியுடன், இந்த சிறுமிகள் மூவரும் திங்கட்கிழமை ( 8) பயணப் பைகளையும் சுமந்த வண்ணம் முச்சக்கர வண்டியொன்றில் காலை 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறுகின்றமை சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக  தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் இல்லை என  சிறுமிகளின் தாயார் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

13 வயதான பாத்திமா மர்யம், 14 வயதான பாத்திமா கதீஜா மற்றும் 15  வயதான பாத்திமா ரக்ஷா ஆகியோரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, மார்டின் குறுக்கு வீதி, கொழும்பு 12 சேர்ந்த, காணாமல் போன இரு சிறுமிகளின் தயாரான  மொஹம்மட் பாரிஸ் பாத்திமா நஸ்ரினா எனும் தாயே இவ்வாறு முறைப்பாடளித்திருந்தார். 14,15 வயதான சிறுமிகள் தனது மகள் மார் எனவும் 13 வயது சிறுமி  கம்பளையைச் சேர்ந்த தனது மூத்த சகோதரரின் மகள் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, சி.சி.ரி.வி. காணொளிகளை ஆரய்ந்து பார்த்ததாகவும்,, அதன்போது குறித்த சிறுமிகள் 8 ஆம் திகதி முற்பகல்  கொழும்பு விகார மகாதேவி பூங்காவிலிருந்து அருகிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று உணவு அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

சிறுமிகளின் கைகளில் இருந்த தாயாரின் கையடக்கத் தொலைபேசிகளை, ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் ஊடாக பின் தொடர்ந்து தேடிய போது, அவர்கள்  8 ஆம் திகதி காலி முகத்திடலில் இருந்தமை தெரியவந்துள்ளதுடன், அதன் பின்னர் அவர்களது கையடக்கத் தொலைபேசிகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதக மேலதிக  தேடலில் தெரியவந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

 சிறுமிகளின் கைகளில் 1800 ரூபா மட்டுமே பணம் இருந்துள்ளதாகவும், அவர்கள் வேறு எந்த பொருளினையும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லவில்லை என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்ததாக இதன்போது பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, செவ்வாய்க்கிழமை (9) இரவு இந்த சிறுமியர் மூவரும் மீண்டும் தமது வீட்டுக்கு திரும்பியிருந்தனர். இதனையடுத்து பொலிசார், தமக்கு அளிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய அந்த சிறுமியருக்கு காணாமல் போயிருந்த  48 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ வீரகேசரியுடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

“நவம்பர் 8ஆம் திகதி காலையில் இந்த சிறுமிகள் வீட்டுக்கு தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். 

நடன வகுப்பொன்றில் சேர்ந்து நடன தாரகையாக ஜொலிக்க வேண்டும் எனும் ஆசையில் அவர்கள் இவ்வரு இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளனர்.  

அவர்களிடம் பணம் பெருமளவில் இருக்காத நிலையில்,  அணிந்திருந்த சுமார் ஒரு பவுண் வரை நிறையுடைய இரு மோதிரங்களை அவர்கள் அடகு வைத்துள்ளனர். அதனூடாக 60 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளனர். 

அந்த பணத்தில் , பெஷன் பக் ஆடையகம் சென்று தமக்கு தேவையான ஜீன்ஸ் மற்றும் ரீ சேட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர்.   அவர்கள் அணிந்திருந்த கலாசார ஆடைகளுடன் நடன வகுப்பில் சேர்வது சாத்தியம் இல்லை என்பதால் அவ்வாறு வேறு சாதாரண ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாக கூறபப்டுகிறது. சிறுமிகள் மூவரும் தமது கனவுகள், இலட்சியத்தை அடைய தன்னிச்சையாக இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

 முஸ்லிம் அல்லது இஸ்லாமிய சூழலில் வளர்ந்துள்ள அவர்கள், இசை, நடனம் தொடர்பில் ஏற்பட்ட ஆவலில் இவ்வாறு தமது இலட்சியங்களை தன்னிச்சையாக செயற்படுத்த முனைந்துள்ளதாக தெரிகிறது. ‘ என  தெரிவித்தார்.

  விசாரணை அதிகாரி ஒருவரின் தகவல்கள் பிரகாரம்,

 ஆடைகளை கொள்வனவு செய்த  சிறுமிகள், அவ்வாடைகளை அணிந்தவாறு வத்தளை பகுதிக்கு சென்று அங்கு வைத்து நடன வகுப்பொன்றில் சேர முயற்சித்துள்ளனர். எனினும் அந்த முயற்சி பயனளிக்காத நிலையில், அவர்கள் அங்கிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற பஸ் வண்டியில் அனுராதபுரத்துக்கு சென்றுள்ளனர்.

 அனுராதபுரம் பஸ் நிலையத்தில் இந்த மூன்று சிறுமிகள் பின்னாலும் இளைஞர் குழுவொன்று வட்டமிட்டுள்ள நிலையில், அதனை அவதானித்த பஸ் வண்டி சாரதியும், நடத்துனரும் சிறுமிகளிடம்  செல்ல வேண்டிய இடம் தொடர்பில் விசாரித்துள்ளனர். 

இதன்போதே வீட்டுக்கு தெரியாமல் அச்சிறுமிகள் வந்துள்ளது வெளிப்படவே,  மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் வண்டியொன்றில் அம்மூவரையும் பத்திரமாக ஏற்றிவிட்டுள்ள அந்த சாரதியும் நடத்துனரும் அவர்களை இடையில் எங்கும் இறக்காது கொழும்பில் இறக்கிவிடுமாறும் தெரிவித்துள்ளதாக  அறிய முடிகிறது.

 அதன்படி கொழும்பை வந்தடைந்து,  ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவுக்கு சென்று அங்கு இருக்கும் எவரேனும் அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர். அதற்கு பாதுகாப்பு அதிகாரி இடமளிக்காத நிலையில், அருகில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு சென்று அங்கு சஜித் பிரேமதாசவை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளனர். 

தமது இலட்சியத்தை அடைய அவர்கள் ஏதேனும் உதவிகளைப் பெற இவ்வாறு சென்றிருக்க வேண்டும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். 

அங்கு சஜித் பிரேமதாஸ இருக்காத நிலையிலேயே அவர்கள் பின்னர்  தமது வீட்டை அண்மித்த உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்து அங்கிருந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

 இதனையடுத்தே நேற்று முன் தினம் இரவு இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே,  பொலிசார் சிறுமிகளை அழைத்து வக்கு மூலம் பெற்றுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. 

( எம்.எப்.எம் .பஸீர்) -வீரகேசரி-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter