ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் பவன் கபூர், ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “எவ்விதத்திலும் யாரையும் பாரபட்சமாக நடத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியாவும் அமீரகமும் பின்பற்றுகின்றன. ஒதுக்குவதோ, பாரபட்சமாக நடத்துவதோ நம்முடைய மதிப்பீடுகளுக்கும் சட்டத்திற்கும் எதிரானது. அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் இதனை மனதில்கொள்ளவேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகமும் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. ஒரு போலியான அடையாளம் கொண்ட நபரின் ட்விட்டர் பக்கத்தைச் சுட்டிக்காட்டி, “இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக போலியான அடையாளங்கள் உருவாக்கப்பட்டு, நம் மூகத்திற்குள் பிளவு உருவாக்கப்படுகிறது. நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளுங்கள். பிளவை விதைப்பதற்கான இம்மாதிரி மோசமான முயற்சிகளிலிருந்து விலகியிருங்கள்” என அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இந்த இரு பதிவுகளுமே வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்தியர்களின் சமூகவலைதளப் பதிவுகள் எவ்விதமான சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது என்பதைக் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.
இப்போது எல்லா மட்டத்திலும் சேத தடுப்பு நடவடிக்கைகள் இருந்தாலும், இந்தியாவில் சிலர் வெளிப்படுத்தும் இஸ்லாமிய வெறுப்பு, வளைகுடா நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
சர்ச்சை துவங்கியது எப்படி?
சில நாட்களுக்கு முன்பாக அமீரகத்தில் உள்ள சில இந்தியர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவிப்பதில்தான் இந்த விவகாரம் துவங்கியது. தில்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் இருந்துதான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது என்பதுதான் இந்த சமூகவலைதளப் பதிவுகளின் மையமாக இருந்தது.
இப்படிப் பதிவிட்டவர்கள் சிலர், அவர்களது நிறுவனங்களினால் கண்டிக்கப்பட்டார்கள். சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் களம் இறங்கியவர்கள், மேலும் இஸ்லாமியர்களைத் தூற்றும் விதத்தில் பேச ஆரம்பித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் மிகச் சிக்கலானதாக உருவெடுத்தது. இதில், சிலர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நீண்ட காலத்திற்கு முன்பு இஸ்லாமியப் பெண்களில் பாலியல் வாழ்க்கை குறித்து எழுதிய ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்டு, அவரைக் கண்டிக்க ஆரம்பித்தனர்.
அந்த ட்வீட்டில், ‘கடந்த சில நூற்றாண்டுகளில் 95% அரேபியப் பெண்கள் பாலியல் உச்சகட்டத்தை அனுபவித்ததேயில்லை. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் உறவால் குழந்தை பெறுகிறார்களே தவிர, காதலால் அல்ல’ என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்க்ரீன் ஷாட்கள், அமீரகத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள், செல்வாக்குடைவர்களின் கண்களில்பட, அவர்கள் இதனைக் கண்டித்து கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர். மேலும் அமீரகத்தில் பெரும் எண்ணிக்கையில் இந்தியர்கள் பணியாற்றுவதையும் அவர்கள் தங்கள் பதிவுகளில் சுட்டிக்காட்டினர்.
தற்போது அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் குறிப்பிட்ட பதிவை அகற்றிவிட்ட நிலையில், சிலர் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டு, பிரதமர் மோதியை Tag செய்து நியாயம் கேட்டனர்.
அமீரகத்தில் எதிர்ப்புகளை மீறி கோவில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மேலே குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், “தற்போது அமீரகம்; பிறகு சவுதி” என்று குறிப்பிட்ட ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டும் வெளியிடப்பட்டு பரபரப்பானது.
ஏப்ரல் 16ஆம் தேதியன்று ஷார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட் அல் காசிமி வெளியிட்ட ட்விட்டர் பதிவு நிலைமை சிக்கலாகிவருவதை உணர்த்தியது. ஒரு ட்விட்டர் பதிவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்த இளவரசி, “அரச குடும்பத்தினர் இந்தியர்களின் நண்பர்கள். இவ்வளவு வெறுப்புடன் நீங்கள் பேசுவதை அரச குடும்பத்தைச் சேர்ந்த என்னால் ஏற்க இயலாது. எல்லோருமே ஊதியத்திற்காகத்தான் வேலை பார்க்கிறார்கள். யாரும் இலவசமாக வேலை பார்ப்பதில்லை. நீங்கள் இகழும் இந்த மண்ணிலிருந்துதான் உங்களுக்கு உணவு கிடைக்கிறது. உங்கள் கேலி கண்டுகொள்ளப்படாமல் போகாது” எனத் தன் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த நபர் தன் ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார்.
ஞாயிற்றுக் கிழமையன்று இஸ்லாமிய ஒருங்கிணைப்பிற்கான அமைப்பின் (OIC) மனித உரிமைப் பிரிவான OIC-IPHRC வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியாவில் கொரோனாவை பரப்பியது இஸ்லாமியர்கள்தான் என்று கூறி பரப்பப்படும் செய்திகளைக் கண்டித்ததோடு, இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பணர்வையும் தணிக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறியது.
இதையடுத்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி “இந்தியாவில் இஸ்லாமியர்களின் சமூக, மத, பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக” விளக்கமளித்தார்.
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இனம், மதம், நிறம், ஜாதி, ஏழை – பணக்காரன் வித்தியாசம், மொழி, எல்லைகள் போன்றவற்றை பார்த்து கொரோனா தாக்குவதில்லை.” என்று கூறினார்.
இருந்தபோதும், திங்கட்கிழமையன்று இந்த சமூகவலைதள யுத்தம் உச்சகட்டத்தை எட்டியது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், பாரபட்ச நடவடிக்கைகள் குறித்த செய்திகள், படங்கள் ஆகியவை அமீரகத்திலும் பிற வளைகுடா நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களின் ட்விட்டர் ஐடிகளை Tag செய்து பதிவுசெய்யப்பட்டன.
செவ்வாய்க்கிழமையன்று #Islamophobia_in_India என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு செய்பவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டுமென்றும் பலர் கூற ஆரம்பித்தார்கள்.
இதையடுத்து சமீபகாலம்வரை கொரோனா நோய்ப் பரவலையும் இஸ்லாமியர்களையும் இணைத்துப் பதிவுகளை வெளியிட்டுவந்த சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், இஸ்லாமியர்களைப் புகழ்ந்தும் பாராட்டியும் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தனர்.
அடிப்படையில் இந்தியா – அமீரகம் இடையிலான உறவுகள் வலுவானவை. அமீரகத்தில் சுமார் மூன்றரை மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள வெளிநாட்டவர்களில் இந்தியர்கள்தான் 60 சதவீதம் பேர். 2018ஆம் ஆண்டு நிலவரப்படி வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்கள் சுமார் 78,500 மில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இதில் அதிகபட்ச தொகை அமீரகத்திலிருந்து வருகிறது.