அரசு பங்காளிகளின் மோதல் நாடகமே மக்கள் போராட்டங்களை திசை திருப்பவே எல்லாம் என்கிறது ஜே.வி.பி
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான முறுகல் நிலைமையானது, அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதற்கான நாடகமே என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோர் இந்த நாடகத்தின் நடிகர்களாக இருப்பதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
யுகதனவி அனல் மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் பங்காளிக் கட்சிகளுக்கிடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் கருத்து கூறிய ஜே.வி.பியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க பிரஜை நிதி அமைச்சராகியுள்ள நிலையில், அவரின் முதலாவது அமைச்சரவை பத்திரத்தின் மூலம் யுகதனவி அனல் மின்நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்றுள்ளார். இப்போது அரசாங்கத்திற்குள் இருப்பவர்கள் சும்மா கூச்சலிட்டுக்கொண்டு இருப்பதில் பலனில்லை. இந்த ஏமாற்று வேலையை அவர்களே செய்துள்ளனர். இப்போது கப்பலில் ஓட்டை ஏற்பட்டு மூழ்கும் நிலைக்கு சென்றுள்ளது. அதில் இருந்து பாய்வதற்கு முடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.
இப்போது மக்கள் இவர்களை திட்ட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நிலைமையிலேயே நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கும் போது, அதனை திசை திருப்பவும், அதனை மூடி மறைக்கவும் நாடகத்தை முன்னெடுக்கின்றனர். உண்மையான எதிர்ப்பு இருக்குமாக இருந்தால் அமைச்சரவையில் அவர்களுக்கு மோத முடியும். ஆனால் அதனை செய்வதில்லை.
வீரவன்ச, கம்மன்பில போன்றோர் அமைச்சர்களாக இருந்து கொண்டு எதிர்ப்பு காட்டுவதை போன்று போலியாக நடிக்கின்றனர். இதன்மூலம் உண்மையாக அரச எதிர்ப்பு நடவடிக்கையை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.
இதேவேளை யுகதனவி மின்நிலையம் தொடர்பாக ஜேவிபி, தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நாங்கள் மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். இது தொடர்பாக முடிந்தளவு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.
ந.ஜெயகாந்தன் (தினக்குரல் 3-11-21)