அரசாங்கம் அரிசிக்கு விதித்துள்ள 65 ரூபா வரியை 20 ரூபாவால் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளா்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சந்தையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதுடன் ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 225 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேற்குறிப்பிட்டது போன்று வரி குறைக்கப்படுமாக இருந்தால் தட்டுப்பாடின்றி இந்தியாவிலிருந்து கீரி சம்பா மற்றும் பொன்னி சம்பா ஆகிய அரிசி வகைகளை இறக்குமதி செய்து 130 ரூபாவிலிருந்து 135 ரூபாவரையில் பெற்றுக்கொடுக்க முடியுமென அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளா்கள் சங்கத்தினா் மேலும் அறிவித்துள்ளனா். தற்போது நாட்டில் ஏற்பட்டு உர பிரச்சினையினால் எதிர்வரும் டிசம்பா் மாதத்திலிருந்து அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நுகர்வோருக்கு தேவையான அளவு சந்தையில் அரிசி கொள்வனவு செய்வதற்கு முடியாவிட்டால் அதற்கு தற்போதுள்ள அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள அரிசி தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் தற்போதிருந்தே அரிசி இறக்குமதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமென உணவு பொருள் இறக்குமதியாளா்களின் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
-தமிழன்.lk