சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மாமனார் வாக்குமூலம்
தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து கழுத்து நெரித்து கொலை செய்தோம் தூக்க மாத்திரைகளை அதிகளவில் உணவில் கலந்து மருமகளுக்குக் கொடுத்தோம். அவர் மயக்க நிலையை அடைந்ததும் உப்பளப் பாத்திக்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்தோம்.
அதன் பின்னர் அவரது முகத்தை நீருக்குள் அமுக்கிக் கொலை செய்தோம் என , மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணைக் கொலை செய்த அவரது மாமனார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். பிரதான சந்தேக நபரான அவர் திங்கட்கிழமை வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இளம் பெண்ணின் உடலின் பாகங்கள் ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தூக்க மாத்திரைகள் கொடுத்து பெண்ணை கொலை செய்ததாக பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பின் மன்னார் உப்பளத்தில் வீசப்பட்டிருந்தார். அவரது சடலம் மன்னார் உப்பளம் பகுதியில் இருந்து கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவத்தையடுத்து மன்னார் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். தடயவியல் பொலிஸாரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தடயப்பொருட்களும் மீட்கப்பட்டன.
சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கொண்டு அவர் தொடர்பில் மடு (மடு ஆலயத் திருவிழா இடம்பெற்ற காலப்பகுதி) மற்றும் மன்னாரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதன்போது மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில், கொல்லப்பட்ட இளம் பெண், இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று உணவு உட்கொண்ட காட்சி பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியைப் பெற்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற் குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொல்லப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சகோதரி (வயது 30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் நெடுந்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் மன்னார் நீதிமன்றின் உத்தரவில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தலைமறைவாகியிருந்த 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான, கொல்லப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வந்தார்.
அவர் திங்கட்கிழமை இரவு வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவர் சட்ட மருத்துவ அதிகாரியின் முன்பாக முன்னிலைப்படுத்திய பின் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.