இஸ்ரேல் மற்றும் மத்திய – கிழக்கில் பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்ற இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இம்மாதம் 19, 20, 21, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்களுக்கு மேலதிகமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று செவ்வாய்கிழமை உரிய அதிகாரிகளால் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இஸ்ரேலில் வசிக்கின்ற இலங்கையர்களை 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளனது.
இலங்கையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய – கிழக்கு வலயத்தில் காணப்படுகின்ற பல நாடுகளிலும் இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த விமான பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை இந்த தீர்மானம் நடைமுறையிலிருக்கும் என்று வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.