பிள்ளைகளுக்கு “சோறு” மாத்திரம் ஊட்டினாள் போதுமா?

உணவில் அறுசுவை உள்ளது போன்றே வாசிப்பும் பல்சுவை நிரம்பியது. அதை அனுபவித்தவர்களே அதன் சுவையை அறிவார்கள்.

உணவை ருசிப்பதுபோல் வாசிப்பையும் கொஞ்சம் ருசி பாருங்கள். பின்பு அது விடாது உங்களை பிடித்துக்கொள்ளும். பிள்ளைகளுக்கும் சோற்றினை மாத்திரமன்றி வாசிப்பையும் கொஞ்சம் ஊட்டுங்கள். அது அவர்களை ஆட்கொள்ளும். தித்திக்கும் தேன் சுவைக்கு ஒப்பானது வாசிப்பில் ஏற்படும் உணர்வு.

ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதம். இதுவரை வாசிக்க நினைக்காதவர்கள், புத்தகத்தின் வாசனையை நுகராதவர்கள், நூலகத்தின் பக்கம் காலெடுத்து வைக்காதவர்கள், என அனைவரும் இம்மாதத்திலேயே வாசிக்க ஆரம்பிக்கலாம். வாசிப்பை ஆரம்பிப்ப தற்கும் கல்வி கற்பதற்கும் வயதெல்லையும் கிடையாது. நேர காலமும் கிடையாது. ஆரம்பிக்கும் எந்நாளும் நன்னாளேதான்.

எமது பிள்ளைகளை வாசிப்பின் பக்கம் அதிகமதிகம் ஈடுபடுத்த பெற்றோர்கள் முயல வேண்டும். அவரவர் தாய்மொழியில் அல்லது கற்கும் மொழியில் வாசிப்பினை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இயலுமானவரை சிறு பராயத்திலேயே வாசிப்பின் பக்கம் அவர்களைக் கொண்டு செல்வது சிறந்தது. வாசிப்பின் பயனை அவர்கள் அறிய எடுத்துக் கூறுதல் அவசியமானதாகும்.

ஆனால் இன்றைய நவீன காலத்தைப் பொறுத்தவரையில் சிறுவர்கள் மாத்திரமன்றி பெரியவர்களுக்கும் வாசிப்பின்பால் ஈடுபாடு மிகக் குறைவாகவே உள்ளது. சிலர் அதன் மகிமையையும் பயனையும் அறியாமல் இருக்கின்றனர். காரணம் இலத்திரனியல் உபகரணங்களான கையடக்கத் தொலைபேசி, டெப், மடிக்கணினி போன்றவைகள்தான்.

பிள்ளைகளுக்கு வாசிப்பின் மகிமையை எடுத்துக் கூறுவதற்கு முன்பு பெற்றோர் அதனது பூரணத்துவத்தை, அதன் மகிமையை உணர்ந்துக்கொள்வது மிக அவசியமாகும். பெற்றோராகிய நாங்கள் புத்தகமோ அல்லது பத்திரிகையோ எதனையும் தொடாது வெறுமனே எமது பிள்ளைகளை மாத்திரம் புத்தகத்தை எடுத்து வாசிக்கக் கூறினால் அந்தப் பிள்ளை புத்தகத்தைத் தொடுவானா? அப்படி பெற்றோர் கூறியதற்குப் பயந்து அவன் ஒரு கதைப் புத்தகத்தை எடுத்தாலும் கூட அதில் ஒரு எழுத்தையேனும் வாசிக்கமாட்டான். அவனுடைய கவனம் சிதறியே காணப்படும்.

ஆதலால், முதலில் பெற்றோர் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட ஓய்வு நேரத்தை தெரிவு செய்து பிள்ளைகளுடன் அமர்ந்து 15 நிமிடங்களுக்கு அதிகமல்லாது வாசிக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் கடந்ததும் பிள்ளைகள் தானாகவே இன்னும் அதிக நேரம் அமர்ந்து வாசிக்க விரும்புவார்கள். இயல்பாகவே அவர்கள் வாசிப்பின் இரசனையை உணருவார்கள்.

பெற்றோரும் வாசிக்க வேண்டும் என்று யாராவது கூறினால் உடனே ‘அட எங்களுக்கு எங்கே நேரம் இதற்கெல்லாம்?’ ‘சமைக்க வேண்டும், துவைக்க வேண்டும்’ ‘நான் வேலையிலிருந்து வருவதே ஓய்வெடுக்கத்தான்.’ என்று இன்னபிற காரணங்களைக் கூறி வாசிப்பைத் தட்டிக் கழிப்பார்கள்.

ஒரு பிள்ளையின் முதல் ஆசான் தாய்தான். வீட்டில் ஒரு தாயே தனது பிள்ளையின் அறிவு வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். அதனையும் ஆரோக்கியமான முறையில் மேற் கொண்டால் சிறந்ததொரு பிரதிபலனை அடைய முடியும்.

வாசிப்பை பழக்குவதற்கோ ஆரம்பிப்பதற்கோ வீடு நிறைய புத்தகங்கள் தேவையில்லை. தினசரி பத்திரிகைகளை அல்லது சிறுவர் சஞ்சிகைகளை வாங்கலாம். ஆரம்பத்தில் அவர்களை வாசிக்க வருமாறு அழைத்தால் வரமாட்டார்கள். அது பிள்ளைகளின் இயல்பு. அவர்களாக ஒன்றை விரும்பிச் செய்தலும் மற்றவர்களின் தூண்டுதலில் அவர்கள் இயங்குவதும் வித்தியாசமானது. எனவே, முதல் நாள் தாய் அல்லது தந்தை சத்தமாக அவர்களின் செவிகளில் விழும்விதத்தில் வாசிக்க வேண்டும். இயல்பாகவே அவர்கள் உங்களின் அருகில் வருவார்கள். அதற்கு அடுத்தபடியாக தாங்களே தெரிவு செய்து வாசிக்க ஆரம்பிப்பார்கள். முக்கியமாக விளையாட்டுச் செய்திகளை வாசிக்கவே முன்வருவார்கள். பின்பு படிப்படியாக சிறுவர் சஞ்சிகைகளின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பும். இது வாசிப்பினால் ஏற்படும் ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.

பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டியதும் அவர்களுக்காக சின்னச் சின்ன கதைகள் வண்ணப் படங்களுடன் கூடிய கதைப் புத்தகங்கள் என்பவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். சிறிது சிறிதாக புத்தகங்கள் சேரும் போது வீட்டின் ஒரு இடத்தைத் தெரிவு செய்து புத்தகங்களை ஒரு ஒழுங்கில் வைக்க பழக்க வேண்டும். பின்பு அவர்களாகவே தாம் சேமித்த புத்தகங்களை நேர்த் தியாக வைப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு புத்தக அடுக்கை கேட்பார்கள். அதற்கான உதவியை பெற்றோரே மனமுவந்து ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.

இதன்போது பிள்ளைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் வாசிப்பில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இதனால் பெறும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. வேலை வேலையென நாள் முழுவதும் அழுத்தத்தில் உழலும் ஒருவன் வாசிப்பதன் மூலம் தன்னையறியாது தன் உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்துகின்றான். இதனால் நோயில் வீழ்வதில் இருந்தும் பாதுகாக்க முடிகிறது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. சிந்தனா சக்தியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கின்றன.

அதேவேளை, பிள்ளைகள் தம்முடைய வாசிப்பில் கவனம் செலுத்துகையில் அவர்களின் அறிவு, தேடல், மொழியாற்றல், ஞாபக சக்தி, கற்பனா சக்தி, எழுத்தாற்றல், ஆக்கத்திறன் என அனைத்தும் விருத்தியடைகின்றன. ஒரு பிரச்சினையையோ அல்லது ஒரு விடயத்தையோ சிந்தித்து செயலாற்றும் திறனைப் பெறுகின்றனர். சுயமாகத்தீர்வு காண முயலுகின்றனர். இவையனைத்தும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி பிற்காலத்திற்கும் கைகொடுக்கின்றது. தோல்வியைக் கண்டு துவளாது வெற்றிக்கான பாதையைத் தேட அவர்களைத் தூண்டுகின்றது. இதனால் ஒரு சிறந்த ஆரோக்கியமான புத்திஜீவியான சமூகம் உருவாகின்றது.

சரி, பிள்ளைகளை வாசிப்பில் ஈடுபடுத்துவதுடன் பெற்றோரின் கடமை தீர்ந்ததா? இல்லை, அவர்கள் தொடர்ந்தும் வாசிப்பில் பிணைந்திருக்க சில பல வழிகளை சொல்லிக் கொடுக்கலாம். அவர்களின் பிறந்த நாளுக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம். அதே போன்று அவர்களின் நண்பர்களின் பிறந்த தினத்திற்கும் புத்தகங்களைப் பரிசளிக்க உதவுங்கள்.

வழமையாக அநேக வீடுகளில் பிள்ளைகள் உண்டியலில் காசு சேமிப்பார்கள். அது ஆரோக்கியமான ஒரு நற்பழக்கமாகும். அதே பழக்கத்தை இன்றும் கொஞ்சம் பிரயோசனமான ஒரு தேவைக்குப் பயன்படுத்தினால், அதன்மூலம் பெறும் பயன் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது என்ன அப்படி பெறுமதிவாய்ந்த பயன் என நினைக்கிறீர்களா? அதுதான் புத்தக அன்பளிப்பு அல்லது பரிமாற்றம்.

எந்த ஒரு நல்ல செயலையும் செய்வதற்கு நல்ல நாளை எதிர் பார்க்கத் தேவையில்லை. “நன்றே செய், அதை இன்றே செய்” என்பதற்கமைய இந்த வருடத்தில் இன்றைய நாளே உங்கள் பிள்ளைகளுக்கு சில நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். அவற்றில் ஒன்றை அவர்களின் நெருங்கிய ஒரு நண்பனுக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுக்கோ அன்பளிப்பாக வழங்கச் சொல்லுங்கள். இதை ஒரு வகையில் அன்புடன் கூடிய புத்தக பரிமாற்றம் என்றும் கூறலாம். அந்தப் புத்தகத்தை அன்பளிப்புச் செய்யும் முன்பு உள்ளட்டையில் ஏதேனும் ஒரு வாசகத்தை உங்கள் பிள்ளைகளின் ஞாபகமாக எழுதி பெயர் திகதி என்பவற்றை குறிப்பிட்டு பின்பு அதனை அன்பளிப்புச் செய்ய கூறுங்கள். உண்மையில் அத்தருணத்தில் மிகவும் ஆத்மதிருப்தியை பெற்றோரே உணர்வீர்கள். இப்பழக்கத்தை அவர்கள் தம்முடைய ஆயுளுக்கும் தொடரும் ஒரு நற்காரியமாக செய்வதற்கு உதவுங்கள்.

இம்முறையை சிறியவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் பின்பற்றலாம். இதன்மூலம் திருமணம், குடும்பம் என்ற காரணத்தால் தொடர்புவிட்டுப்போன பாடசாலை நட்புகள், சிறுபராய நட்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. வீட்டு வேலைகள், உழைப்பு, பிள்ளைகள் வளர்ப்பு, ஏனைய பொறுப்புகள் என சுழன்று ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் மன அமைதியும் கிடைக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வாசிப்பு மாதமான ஒக்டோபர் மாதத்தில் புத்தக பரிமாறல் செய்கையில் அம்மாதத்தினை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். முதற் தடவை புத்தகங்கள் வாங்க பெற்றோர் உதவ வேண்டும். அவர்கள் புத்தகத்தை தெரிவு செய்வதற்கும் பிரித்தறிவதற்கும் கட்டாயமாக உதவ வேண்டும். சிறந்த அறிவு சார்ந்த புத்தகங்கள், மதம் சார்ந்த நூல்கள், நகைச்சுவைப் புத்தகங்கள், நீதிக் கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், துப்பறியும் சிறுவர் நாவல்கள், வண்ணப்பட கதைகள் போன்ற சிறந்த, சிறுவர்களுக்குப் பொருத்தமான புத்தகங்களைத் தெரிவு செய்ய ஆலோசனை வழங்குவது முக்கியமானது. பின்பு இறுதித் தெரிவை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். ஒக்டோபர் மாதம் முடிவதற்கு முன்பே அவர்களிடம் ஒரு உண்டியலை ஒப்படையுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு ரூபாய் இட்டேனும் சேமிக்க தூண்டுங்கள். இவ்வாறு சேமிப்பதால் அடுத்த வருடத்தில் சேமிக்க ஆரம்பித்த அதே திகதியில் 365 ரூபாய் அவர்களுக்குக் கிடைக்கும். அதேபோன்று ஐந்து அல்லது பத்து ரூபா அள விலும் பணத்தையிட்டு சேமிக்கலாம். இதனால் இன்னும் அதிகளவான சேமிப்பின் பலனை அவர்கள் பெறுவார்கள். உற்சாகத்துடனும் சேமிக்க ஆரம்பிப்பார்கள். ஆகக் குறைந்தது 365 ரூபாய் பணத்திற்கு குறைந்த விலையில் நிறைவான வண்ணங்களுடன் கூடிய ஒரு புத்தகத்தை வாங்கி தனது நண்பனுக்கு அன்பளிப்புச் செய்ய அந்தப் பிள்ளையால் இயலுமாகிறது.

இதனால் ஒரு பிள்ளை நல்லதொரு புத்தகத்தை அன்பளிப்பு செய்கின்றான். ஒரு நண்பனை வாசிக்கத் தூண்டுகிறான். அநாவசியமான ‘ஸ்டிக்கர்’, நடிகர்களின் படங்கள், ‘கார்டூன்’ படங்கள், விளையாட்டு வீரர்களின் படங்கள் போன்றவற்றை வாங்குவதற்குப் பதிலாக பணத்தை சேமிப்பதற்கும் பழகிக்கொள்கின்றான். தொல்லை தரும் தொலைபேசி விளையாட்டுக்களிலிருந்து தொலைவாகிறான். வீணான பொழுதுபோக்குகளிலிருந்து விடுபடுகிறான். கவனம் சிதறுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறான். வாசிக்கும் ஆர்வத்தினால் பணத்தை சேமிப்பதுடன் புத்தகங்கள் சேமிக்கவும் பழகுகிறான். புத்தகத்தை தனது ஆருயிர் நண்பனாக ஏற்றுக்கொள்கிறான்.

எனவே, வாசிப்பு எனும் மூலதனத்தால் ஒருவன் நன்மையடைகிறானே அன்றி அவன் ஒருபோதும் நட்டமடைவதில்லை. அள்ள அள்ள ஊறும் கிணற்றைப்போன்று வாசிக்க வாசிக்க ஒரு மனிதன் பக்குவமடைகிறான். அவனது அறிவும் விருத்தியடைகிறது. இம்முறையை சிறியவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் பின்பற்றலாம். சிறந்ததொரு நூலைத் தெரிவுசெய்து ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அவர்களிடமிருந்து இன்னுமொரு நூலை நாம் அன்பளிப்பாக பெறமுடியும். அன்பளிப்புச் செய்யும் புத்தகம் புதிதாகவே இருக்க வேண்டும் என்றில்லை. வாசிக்கக் கூடிய நல்ல நிலையில் உள்ள எந்த ஒரு புத்தகத்தையும், எந்த மொழிப் புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்க முடியும்.

ஆகவே, வாசிப்பெனும் மூலதனத்தை குறைவில்லாது இடுவோம். நிறைவான பூரணமான பலனைப் பெறுவோம். எமது எதிர்கால சந்ததிகளை அறிவுமிக்கவர்களாகவும், சிந்தனா சக்தியுடைவர்களாகவும் உருவாக்குவோம். வாசிப்பை நேசிப்போம். வாழ்வை இரசிப்போம். இறுதியாக வாசிப்பினால் சேமிப்போம்.

ஆஷிகா, கொழும்பு. – விடிவெள்ளி 21-10-21

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

Free Visitor Counters Flag Counter