மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாயவில் அமைந்துள்ள எல்லாவள நீர்வீழ்ச்சியில் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு இளம் தந்தை ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் மரணமான பரிதாப சம்பவம் ஒன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காத்தான் குடியைச் சேர்ந்த எம்.சி. நியாஸ் (வயது 40) மற்றும் அவரது பிள்ளைகளாக எம்.என்.சஹீட் (வயது 14), எம். என்.ஷைமா (வயது 11) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 9 பேர் அடங்கிய குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ தேவை நிமித்தம் கொழும்புக்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாயவில் அமைந்துள்ள எல்லாவல் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
இங்கு மரணித்த மூவர் மாத்திரம் நீர்வீழ்ச்சியில் நீராடியுள்ளனர். இந் நிலையில் வேகமாக வந்த நீரில் 11 வயதான மகள் ஷைமா அடித்துச் செல்லப்பட்டுள்ளார். உடனடியாக அவரைக் காப்பாற் றுவதற்கு தந்தையும் சகோதரும் முயற்சித்துள்ளனர்.
அதன்போது அவர்களும் நீரினால் அடித்தச் செல்லப்பட்டுள்ளனர். இந் நிலையிலேயே அங்கு கூடியிருந்தவர்களின் உதவியுடன் மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். சடலங்கள் உடனடியாக வெல்லவாய தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. (விடிவெள்ளி 21-10-21)
—
வெல்லவாய- வெலஆர பிரதேசத்தில் உள்ள எல்லவெல நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வெல்லவாய பிரசேதசபையில் இன்று (21) இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுள் அதிகமானவர்கள், கடந்த காலங்களில் குறித்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தவுள்ள பாதுகாப்பு சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுத்து, இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பிரதேசத்தில் அனைவரையும் கவர்ந்த குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட பெருமளவான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகைத் தந்தாலும் அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக நேற்று (20) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அந்நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
-தமிழ் மிற்றோர்– சுமணசிறி குணதிலக