பேருவளை சீனன்கோட்டையின் எல்லைப் புறமான “பன்னிலை” எனுமிடத்தில் மார்ச் 29ஆம் தேதி, Mr A என்பவர்க்கு “கொரோனா”நோய் தொற்றி இருப்பதாக அறியப்படுகிறது. 30 ஆம் திகதி அப்பகுதி Lockdown செய்யப்பட்டு, அவரோடு நேரடித் தொடர்பில் இருந்த 13 பேர் பரிசோதிக்கப்பட்டதில், அவரது மனைவி, பிள்ளை, மனைவியின் பெற்றோர் ஆகிய நால்வருக்கு நோய்த்தொற்று இருப்பதாக இனங் காணப்படுகிறார்கள்.
எனவே அவர்களோடு தொடர்பில் இருந்ததாக கருதப்பட்ட 261 பேர் “புனானி” தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். என்றாலும் Mr A வெளிநாட்டுக்கு சென்று வந்தவர் அல்ல. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அழைத்துவர விமான நிலையம் சென்றவர். வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா இல்லை.
கொரோனா புரியாத புதிர்.
அதற்கிடையில்,மூன்றாம் திகதி அதே பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு “கொரோனா” தொற்று ஏற்படுகிறது. Mr. A யுடன் எந்தவித தொடர்பும் இல்லாத அத்தாய்,(Mr,A) நோயாளி வந்து விட்டுப் போன கடைக்குச் சென்றதால் நோய் தொற்றி இருக்கலாம் என பொதுச் சுகாதார அதிகாரிகள் கருதினாலும்,நிறைமாத கர்ப்பிணி எங்கே கடைக்குப் போவார்? அவர் போகவே இல்லை என்று தெரிந்தபின்,கணவர் அக்கடைக்குச் சென்றதால் கணவரின் ஊடாக வந்திருக்கலாம் எனக் கருதி கணவரைப் பரீட்சித்ததில் அவருக்கு நோய் இல்லை.
கொரோனா புரியாத புதிர்.
அப்பெண் தனது பிள்ளைகளை, பன்னிலைக்கு அடுத்துள்ள பகுதியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு,தாயோடு வைத்தியசாலைக்குச் சென்ற போது, ஒப்படைப்பவரது பெயர், முகவரிக்கு தாயின் விபரங்களை தாய் கொடுத்திருக்கிறார். கர்ப்பிணி பற்றிய விபரம், அவரது Clinic அட்டையில் இருக்கவே செய்கிறது.அதை தாதியர் கவனியாது,அப்பெண் பொய்யைச் சொல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றொரு புரளியை கிளப்பி விட்டார்கள்.
அக்காலப்பகுதியில்,”பன்னிலை” அல்லாத நால்வரை பன்னிலைப் பகுதியினரோடு சேர்த்து பரிசோதனை நடத்த பொதுச்சுகாதார அதிகாரிகளும் போலீசாரும் பள்ளி வளவுக்குள் வந்தபோது, தத்தமது வீட்டுப் பகுதியில் இருந்து ஆட்சேபனை தெரிவித்த மக்களை, பள்ளி வளவுக்குள் இருந்து வீடியோ செய்து பள்ளி வளவுக்குள் மக்கள் கூடியிருப்பதாக காட்டி, இன்னொரு வாதப் பிரதிவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தினார்கள்.
மார்ச் 15ம் திகதி இந்தோனேஷியாவில் இருந்து வந்த பேருவளை மருதானைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில்,அவர் இலங்கைக்கு வந்து மூன்றாவது வாரத்தில் அவருக்கு “கொரோனா” நோய் இருப்பதாகக் கூறி live video போட்டு அழைத்துப் போனார்கள். அவரோடு சேர்த்து பரிசோதித்த 20 பேருக்கு நோய்த்தொற்று இருக்கவில்லை. இத்தனையையும் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் நிலையில்,
ஊருக்குள்ளிருந்து மொத்தம் ஏழு பேர் தான் நோயாளிகளாக இனங் காணப்பட்டிருக்கிறார்கள் இன்றுவரையும்.
ஏற்கனவே புணாணிக்கு அழைத்துப்போன 261 பேரும் அங்கு போய் இரண்டாவது வாரத்தில்,19 பேருக்கு “கொரோனா” வைரஸ் தொற்றிருப்பதாக தகவல் வரவே, அவர்களோடு தொடர்பில் இருந்த ஊரிலிருக்கும் 53 பேரை பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட நடவடிக்கை 16 ஆம் திகதி நடந்ததில் யாருக்கும் “கொரோனா”வைரஸ் தொற்றவில்லை என்ற நற்செய்தி நேற்று கிடைத்திருக்கிறது.
வெகுஜன தொடர்பு சாதனங்கள்,
பேருவளையில் 35 பேருக்கு “கொரோனா”தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியிடுவதைப் பார்த்துவிட்டு, பயத்தோடு நம்மைத் தொடர்பு கொண்டு நமது நிலைமைகள் பற்றி கவலையோடு சுகம் விசாரிக்கிற சகோதரர்களுக்கானவே இப்பதிவு.
“பேருவளையில் 35 பேருக்கு கொரோனா” என அவர்கள் குறிப்பது, பயாகலை, மக்கொனை, பேருவளை, அளுத்கமை, தர்காநகர் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய MOH area வையே.
மார்ச் 23 ஆம் திகதி முதல் தொடர் ஊரடங்கில் இன்று வரை வீட்டில் முடங்கி இருக்கிறோம்.
ஊருக்குள் இருக்கிற ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதி வறிய மக்களுக்காக தம்மாலான உலர் உணவுகளை,வழங்குவதோடு தத்தமது சக்திக்குட்பட்ட இன்னும் பல உதவிகளைப் பரஸ்பரம் செய்துகொண்டாலும், எந்தவித உதவிகளும் கிடைக்காத குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. காரணம் பொருட் கொள்வனவு செய்யமுடியாமை, இறுக்கமான போக்குவரத்து தடை என்பனவையே. என்ற செய்தியோடு முஸ்லிம்களிடம் ஒரு வினயமான வேண்டுகோள்,
தயவு செய்து கண்டதையெல்லாம் காட்சிப்படுத்தி வீடியோ வெளியிடாதீர்கள்.
“கழுகுகள் நம்மை கௌவக் காத்துநிற்கின்றன”
நீங்கள் பார்க்காத கோணத்தில் அவர்கள் பார்க்கிறார்கள்
Nabhan Shihabdeen
Beruwala
18/04/2020 8:35 am