அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசாங்கம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் தனது அரசியல் செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் இலங்கையின் நீதிக்கான ஒன்றியம் சூம் தொழினுட்பம் ஊடாக ஏற்பாடு செய்த , உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பில் பேராயர் இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஜனாதிபதி நீதி வழங்க தவறியுள்ளமை கத்தோலிக்க மதகுருமாரின் வேண்டுகோள்களை அரசாங்கம் அலட்சியம் செய்யும் விதம் குறித்து கர்தினால் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கண்ணிற்கு புலப்படுகின்ற பயங்கரவாத தாக்குதலிற்கு அப்பால் பலவிடயங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியது என அவர் குற்றம் சõட்டியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தினால் அது தனது அரசியல்செல்வாக்கை எவ்வாறு பாதிக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவர் உடனடியாக தனது அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் சிலரை தெரிவு செய்தார்,இது அரசியல் தீர்மானம், என குறிப்பிட்டுள்ள கர்தினால் தனது நலன்களை பாதுகாப்பதற்காக எந்த விடயங்களை தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவது எதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்காகவே அந்த அரசியல் குழுவை ஜனாதிபதி நியமித்தார் என தெரிவித்துள்ளார்.
அறிக்கை வழங்கப்பட்டு இரண்டு நாள்களின் பின்னர் ஜனாதிபதி என்னை தொடர் புகொண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளஅனைத்து விடயங்களையும் என்னால் நடைமுறைப்படுத்த முடியாது சிலவற்றை நடைமுறைப்படுத்தினால் மக்கள் மத்தியில் நான் செல்வாக்கை இழந்துவிடுவேன் என குறிப்பிட்டார் என கர்தினால் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் தனக்கு அவசியமானதை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதியை கடுமையாக சாடியுள்ள கர்தினால், சட்டமா அதிபரும் அரசாங்கத்தின் பணயக் கைதியாக மாற்றப்பட்டார் என்பது வெளிப்படையான விடயம் எனவும் குறிப் பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலிருந்தது யார்?. உண்மையில் என்ன நடந் தது?. யார் அதனைச் செய்தனர்? என்பதை அறிந்துகொள்ளச் சர்வதேச சமூகத்தின் உதவி அவசியம். இந்த தாக்குதலின் பின்னணியில் சில அடிப்படைவாத முஸ்லிம்களை விடப் பெரிதாக ஒன்று நடந்துள்ளது. அது என்ன என்பதை அறியும் வரை திருப்தியடைய முடியாது. அந்த பின்னணி வெளியிடப்படாது போனால், மக்கள் ஏமாற்றப்படுவார் கள் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
தினக்குரல் 18/10/21